0

ஜுன் 23ம் தேதியன்று வெளிவந்த படங்களில் ‘வனமகன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ஆகிய இரண்டு படங்களுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று அந்தப் படங்களின் வெளியீட்டிற்கு முன்பு பேசப்பட்டது. ஆனால், ‘அஅஅ’ படம் வெளிவந்த முதல் காட்சியிலேயே கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது அந்தப் படத்திற்கு எதிர்மறையாக அமைந்தது. படத்தைப் பார்த்தவர்களில் சிம்புவின் ரசிகர்கள் கூட இப்படி ஒரு படமா என்ற அதிர்ச்சியில்தான் தியேட்டரை விட்டு வெளியில் வந்தனர்.

ரம்ஜான் விடுமுறையுடன் சேர்த்தால் நான்கு நாட்களில் ‘வனமகன், அஅஅ’ படங்களின் வசூலை அள்ளிவிடலாம் என அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் நினைத்திருப்பார்கள். ‘வனமகன்’ படத்தைப் பற்றியும் எதிர்மறையான விமர்சனங்கள்தான் வந்தது. வழக்கம் போல ஆங்கிலப் படங்களின் தழுவலாகவே விஜய் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்றார்கள். இருந்தாலும், ‘அஅஅ’ படம் மிகவும் மோசமாக அமைந்துவிட்டதால், ‘வனமகன்’ படத்தை சுமாராக இருந்தாலும் பார்க்க ஆரம்பித்தார்கள். ஞாயிற்றுக் கிழமையே பல தியேட்டர்களில் ‘அஅஅ’ படத்தைத் தூக்கிவிட்டு, ‘வனமகன்’ படத்தைத் திரையிட்டுள்ளார்கள்.

‘அஅஅ’ படத்தின் விமர்சனங்கள் ‘வனமகன்’ படத்தை விழாமல் கொஞ்சம் காப்பாற்றிவிட்டது என்றே கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். வசூல் மகனாக இல்லை என்றாலும் வருத்தப்பட வைக்காத மகனாக ‘வனமகன்’ தப்பித்து விடுவார் என்கிறார்கள்.

Comments

comments