0

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க அட்லீ இயக்கி வரும் படம் ‘மெர்சல்’. இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டு தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து தெலுங்கில் ‘அதிரிந்தி’ எனப் பெயர் வைத்து அங்கும் அந்தப் போஸ்டர்களை வெளியிட்டார்கள். தமிழில் எப்படி வரவேற்பு கிடைத்ததோ அதே போல தெலுங்கிலும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்குத் திரையுலகில் உள்ளவர்களும் படத்தின் போஸ்டருக்கே பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘சர்தார் கப்பார் சிங், கட்டமராயுடு’ ஆகிய படங்களைத் தயாரித்த சரத் மரார் ‘மெர்சல்’ படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார். விஜய் தமிழில் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாகும் போது பெரிய வசூலைக் குவிப்பதில்லை. மிகவும் குறைவான வசூலையே பெறும். சூர்யா, கார்த்தி, தனுஷ் படங்கள் அளவிற்குக் கூட வசூலித்ததில்லை என்கிறார்கள். அதனால், இந்த ‘மெர்சல்’ படத்தை ஒரு நேரடித் தெலுங்குப் படம் போல வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதனால்தான், தெலுங்கில் ‘அதிரிந்தி’ முதல் பார்வையை பல முன்னணி நாளிதழ்களில் மிகப் பெரும் விளம்பரம் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார்களாம்.

படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் தெலுங்கிலும் நன்கு அறிமுகமானவர்கள். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் என்பதால் அதுவும் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும். ‘மெர்சல்’ படத்தைத் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஒரே நாளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிட்டு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பெரிய வசூலைக் குவிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் பல வேலைகளை முடுக்கிவிட்டுள்ளதாம்.

Comments

comments