sadhvi-balika-saraswati-fir_07_03_2015

பனாஜி: ”மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவ சின்னமாக கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட வேண்டும்,” என, சாத்வி சரஸ்வதி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பனாஜியில், அகில இந்திய ஹிந்து மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 130 ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள சனாதன தர்ம பிரசார் சேவா சமிதியின் தலைவர், சாத்வி சரஸ்வதி பேசியதாவது: மாட்டிறைச்சி விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவத்தின் சின்னம் என கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட வேண்டும். அப்போது தான், கோமாதாவான பசுக்களை பாதுகாக்க வேண்டியது, நம் கடமை என்பதை மக்கள் உணருவர். ஹிந்துக்களுக்கும், பாரத நாட்டுக்கும் இப்போது, அனைத்து திசைகளிலும் ஆபத்து சூழ்ந்துள்ளது. அமர்நாத் யாத்திரையை தடுத்து நிறுத்தவும், ஒரு கூட்டம் அலைகிறது. பாரத மாதாவையும், கோமாதாவையும் காப்பாற்ற, வீடுகளில், ஹிந்துக்கள், ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் கண்டனம் :

சாத்வி சரஸ்வதியின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்., செயலர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில், ”சாத்வி சரஸ்வதியின் பேச்சு, மத வன்முறையை துாண்டும் வகையில் உள்ளது. இந்த விஷயத்தில், மனோகர் பரீக்கர் அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சரஸ்வதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்,” என்றார்.

Comments

comments