_18494 (1)

ஸ்மார்ட்போன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகிறதா? 20 ஆண்டுகளுக்கு முன்புவரை அப்படித்தானே இருந்தோம் என்ற பதில் செல்லாது. டெக்னாலஜிக்கு பழகிய பின், மொத்த உலகமும் ஸ்மார்ட்போனை வைத்து இயங்கத் தொடங்கிய பின், இப்போது ஸ்மார்ட்போன் மறைந்தால் என்னவாகும்? அப்படியெல்லாம் ஆகாது. வழியே இல்லை என்பவர்களுக்கு… நிச்சயம் ஆகும். பேஜர், ஃபேக்ஸ்போல விரைவில் ஸ்மார்ட்போனும் காணாமல் போகும். அப்போது மனிதர்களின் வாழ்க்கைமுறையே மாறிப்போயிருக்கும்.

எலன் மஸ்க்… அமெரிக்காவின் முக்கியமான தொழிலதிபர். எலக்ட்ரிக் வாகனங்கள் தொடங்கி விண்வெளிக்கு ராக்கெட் விடுவதுவரை அவரது ஐடியாக்கள் எல்லாமே வேற லெவல்தான். அந்த எலன் மஸ்க் நியூராலிங்க் ( Neuralink) என்றொரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம், மனிதர்களின் மூளை நேரிடையாக இயந்திரங்களோடு தொடர்புகொள்ள உதவும் சிஸ்டத்தைத் தயாரிக்கப்போகிறது. இப்போதைக்கு ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் அல்டிமேட் திட்டம், மனித மூளையை இயந்திரத்தோடு நேரிடையாக இணைப்பது.

இதனால் ஸ்மார்ட்போன் காணாமல் போய்விடுமா?

ஸ்மார்ட்போனில் என்னென்னவெல்லாம் இருக்கின்றன எனப் பார்ப்போம். அது லேப்டாப், கணினி ஆகியவற்றின் சிறிய வடிவம்தான். கேமரா, ஜிபிஎஸ், ஆகியவற்றின் தொகுப்புதான். கம்ப்யூட்டரில் செய்ய முடியாத எதையும் நம்மால் ஸ்மார்ட்போனால் செய்துவிட முடியாது. அளவில் சிறியது என்பதும், எளிதில் எடுத்துச் செல்லலாம் என்பதுதான் ஸ்மார்ட்போனின் பலங்கள். ஆக, கணினி செய்யும் வேலைகளைச் செய்ய வேறு ஓர் எளிமையான வழி வந்தால், ஸ்மார்ட்போனுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்பதுதான் யதார்த்தம். அந்த எளிமையான வழியைத் தேடித்தான் எலன் மஸ்க் ஓடுகிறார். எலன் மஸ்க் மட்டுமில்லை. மார்க் சக்கர்பெர்கில் இருந்து அனைத்து டெக் ஜாம்பவன்களும் அந்த மாரத்தானை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள்.

ஸ்மார்ட்போனின் டச் வழி நாம் தரும் கட்டளைகளை ஒலி வழி தரும் டெக்னாலஜிதான் அடுத்த அட்டாக். இப்போதே சாம்சங் பிக்ஸ்பி, ஆப்பிள் சிரி எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும், அவற்றை பயன்படுத்துபவர்கள் குறைவு. இது அதிகரிக்கும்போது ஸ்மார்ட்போனின் வடிவமே மாறும். அது வேறு ஒரு பெயருடன் வேறு ஒரு பரிமாணத்துடன் களம் இறங்கும். அமேசானின் எக்கோ, கூகுள் அசிஸ்டன்ட்   எல்லாம் அதற்கான முன்னோட்டங்கள் தான்.

artificial-intelligence-technology_12105

ஒலியை விட இன்னொரு விஷயம்தான் ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய எதிரியாக வளரக்கூடும். அது ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி. மைக்ரோசாப்ட், கூகுள், ஃபேஸ்புக் என எல்லோரும் இந்த ஆராய்ச்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்மார்ட்போனின் திரை வழியே நாம் என்னென்னவெல்லாம் பார்க்கிறோமோ, அவையெல்லாம் 3டி வடிவில் நேரிடையாக நம் கண்களுக்குத் தெரியும். ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி சல்லிசான விலையில் கிடைக்கும் நாள்தான் முக்கியமான நாள். அது நடந்துவிட்டால், ஸ்மார்ட்போன் மட்டுமல்ல. திரை இருக்கும் அனைத்துப் பொருள்களும் தனது மதிப்பை இழக்கும். தொலைக்காட்சியில் தொடங்கி அனைத்து ஸ்க்ரீன் புராடக்ட்ஸும் இதில் அடக்கம். எந்தப் பொழுதுபோக்கு சாதனமும் உங்கள் பாக்கெட்டை ஆக்ரமிக்காது. அவை நம்மைச் சுற்றி, நிஜ உலகோடு இரண்டறக் கலந்து நிற்கும்.
இதை இப்படியும் சொல்லலாம். ஸ்மார்ட்போன்கள் காணாமல் போகும் அல்லது நாமே ஒரு ஸ்மார்ட்போனாக மாறக்கூடும்.

ஸ்மார்ட்போன்கள் காணாமல் போனால் அது மனித குலத்தின் முக்கியமான அத்தியாயம். ஏனெனில், அது இயந்திரங்களை மனிதர்கள் சுமந்து சென்ற காலத்தின் முடிவாக இருக்கும். மனிதர்களோடு இயந்திரங்கள் ஒன்றாக கலக்கத் தொடங்கும் காலத்தின் ஆரம்பமாக இருக்கும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் உதவியால் இயந்திரங்கள் சிந்திக்கத் தொடங்கிவிடும். அதே காரணத்தால் மனிதர்கள் சிந்திப்பதைக் குறைத்துவிடுவார்கள். அதன்பின், மனிதர்கள் வெறும் மனிதர்களாக மட்டுமே இருக்க மாட்டார்கள்.

யோசித்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால். இது நிச்சயம் நடக்கும். இவையெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளிலோ அல்லது 20 ஆண்டுகளிலோ நடந்துவிடும் என்பதுதான் கூடுதல் பயமாக இருக்கிறது.

Comments

comments