201706181118166959_PakupaliThe-secrets-of-the-Great-Depression-Sabu-Cyril_SECVPF

பாகுபலி சினிமாவை பார்த்தவர்கள் அதில் இடம்பெற்ற கோட்டைக் கொத்தளங்கள், ரதம், தேர், பிரமாண்டமான அரண்மனைகளை பார்த்து பிரமித்துப்போயிருப்பார்கள். இயக்குனர் ராஜமவுலியின் கற்பனைகளுக்கு ஈடுகொடுத்து அவைகளை வடிவமைத்து உருவாக்கியவர் பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றிருக்கும் அவரது கலைவண்ணம் இந்திய சினிமாவின் தரத்தை உலக அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.காட்சிக்கு காட்சி கைவண்ணத்தை காட்டியிருக்கும் அவர், பாகுபலியின் கலை வடிவமைப்பு ரகசியங்கள் பற்றி கூறியிருக்கும் தகவல்கள்:

பாகுபலி மூலம் ராஜமவுலி என்ற டைரக்டரின் கனவு நனவாகி யிருக்கிறது. வணிகரீதியாக பெற்றிருக்கும் வெற்றியைவிட, இந்திய சினிமாவின் வளர்ச்சிதான் ஒரு தொழில்நுட்ப கலைஞரான எனக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

முதல் பகுதி கதையை சொல்ல ராஜமவுலி வந்தபோது இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டாக நான் கருதவில்லை. அவர் கதை சொல்வதற்கு முன்பு ஒரு பெரிய அருவி போன்ற படத்தை காட்டி அதுபோல் தனக்கு வேண்டும் என்றார். அது அவ்வளவு சிறப்பாக இருந்தது. நானும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன். அதுதான் என்னை பாகுபலியோடு இணைத்தது. இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும் ஒன்றாக நடத்திவிடுவது எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீண்டுபோனது. அதனால் என்னால் சங்கரின் எந்திரன் 2.0-ஐ கவனிக்க முடிய வில்லை.

மகிழ்மதி மற்றும் குந்தலதேசத்தின் அரண்மனை இரண்டும் ஒரே மாதிரி இருந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குந்தல தேசம் தேவசேனை ஆட்சி செய்யும் குறுநில அரசு என்பதால் வடிவம், நிறம், பொருட்கள் எல்லாவற்றிலும் மாற்றத்தை உருவாக்கினோம். பாகுபலி அரண் மனைக்கு சிவப்பு நிறம் கொடுத்தோம். தேவசேனைக்காக வெள்ளை நிற மார்பிள் அரண்மனை தயார் செய்தோம்.

போர்க்காட்சியில் ராணா பயன்படுத்தும் ரதத்தை இயக்க புல்லட் என்ஜினை இணைத்தோம். ரதத்தின் உள்ளே ஸ்டீரியங்கும் இருந்தது. உள்ளே இருந்து ஒருவர் அதை ஓட்டும் அளவுக்கு உருவாக்கினோம்.

201706181118166959_Sun01._L_styvpf

பிரபாசும், அனுஷ்காவும் மகிழ்மதிக்கு வருவதற்கு ஒரு படகு வேண்டும் என்று டைரக்டர் கேட்டார். காதல் மனநிலை கலந்த காட்சி என்பதால் நீரிலும், ஆகாயத்திலும் செல்லும் விதத்தில் அதை வடிவமைக்கலாம் என்று நான் சொன்னேன். அவரும் சம்மதித்தார். அந்த படகு மிகுந்த பாராட்டுகளை வாங்கித் தந்தது.

நான் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு, கிராபிக் டிசைனிங் ஏஜென்சியை நடத்திக்கொண்டிருந்தபோது அமரம் என்ற மலையாள படத்தின் மூலம் ஆர்ட் டைரக்டர் ஆனேன். ஐந்து சினிமாக் களில் பணியாற்றியும், பொருளாதார ரீதியாக நான் வலுப்படவில்லை. அதனால் பழைய வேலைக்கே போய்விடலாம் என்றும் தமிழ் அல்லது தெலுங்கில் இருந்து அழைப்பு வந்தால் மட்டும் பரிசீலிக்கலாம் என்றும் நினைத்தேன். அப்போதுதான் பிரியதர்ஷன் கிலுக்கம் படத்திற்கு அழைத்தார். அதன் இந்தி ரீமேக்கிற்காக நான் பணியாற்றினேன். அதன் பிறகு நாங்கள் இணைந்து 71 சினிமாக்கள் உருவாக்கினோம். எனக்கு கிடைத்த தேசிய விருதுகளில் இரண்டு அவரது படத்தில் பணியாற்றியதற்காக கிடைத்தது. பின்பு ஓம் சாந்தி ஓம், எந்திரன் ஆகிய படங்கள் தேசிய விருதுகளை பெற்றுத் தந்தன.

எந்த வேலையாக இருந்தாலும் அதில் சவால்களை எதிர்கொள்ள முடியாவிட்டால் தோற்றுப்போவோம். கலாபாணி படத்திற்காக ஒரு மாதம் செலவிட்டு தயாரித்த செட்டை கப்பலில் அந்தமானுக்கு கொண்டு சென்றோம். போகிற வழியில் கப்பல் தீப்பிடித்தது. கப்பல் தொழிலாளிகள் செட்டை ஒவ்வொன்றாக பிரித்து கடலில் எரியும் காட்சியைதான் எங்களால் பார்க்க முடிந்தது. ஆனாலும் மனம் சோர்ந்து போகாமல் மீண்டும் உருவாக்கினோம்.

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கிராபிக்ஸ் பயன்பாடு சினிமாவுக்கு நிறைய நல்லது செய் திருக்கிறது. நமது வேலையை எளிமையாக்க கிராபிக்ஸ் உதவும். ஆனால் சில நேரங்களில் ரசிகர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். கிராபிக்சையும், நிஜத்தையும் சரியாக பிரித்துப்பார்க்க தெரியாமல் தடுமாறிவிடுகிறார்கள். பாகுபலியில் ஒரு காட்சிகூட நிஜ மிருகங்களை பயன்படுத்தி எடுக்கப்படவில்லை. இதை நான் சொல்லும்போது பலரும் அத்தனை மிருகங்களையும் கிராபிக்ஸ் மூலம் வடிவமைத்திருப்பதாக கருதியிருப்பார்கள்.

பாகுபலிக்காக ஐந்து வருடங்கள் வேலைபார்த்தோம். அத்தனை வருடங்கள் குடும்பமும் சென்னையில் இருந்து என்னோடு ஐதராபாத்தில் இருந்தது. இப்போது சங்கமித்ராவுக்காக பணியாற்று கிறோம். பெரிய பட்ஜெட் படம். இரண்டு பாகங்களாக வெளியாகும்.

கேரளாவை சேர்ந்த சாபு சிரில் கோவையில் பள்ளிக் கல்வியை முடித்தவர். ஓவிய ஆர்வம் காரணமாக ‘சென்னை ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்’சில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். தந்தை எதிர்த்ததால் குழந்தைகளுக்கு ஓவியம் வரைய கற்றுக்கொடுத்து அந்த வருவாயில் படிப்பை தொடர்ந்திருக்கிறார். இவரது மனைவி சினேகலதா, பிரபலமான வின்சென்ட் மாஸ்டரின் மகள். காதல் திருமணம். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஸ்வேதா அமெரிக்காவில் பேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு பல்வேறு சினிமாக்களில் பணியாற்றியிருக்கிறார். இளைய மகள் சவும்யா. சகோதரிகள் இருவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

Comments

comments