adam_bav_a_3_14504 (1)

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தமிழக எம்எல்ஏ-க்கள் விற்பனைக்கு’ என்ற செய்தி, ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் வீடியோவுடன் வெளியானது. அந்த வீடியோவில், மதுரை தெற்குத் தொகுதி அ.தி.மு.க எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ, மதுரையைச் சேர்ந்த ஆதம்பாவா பேசும் உரையாடல் ஆகியவை இருந்தன. இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியானதும் ‘வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அது என் குரலல்ல’ என்று மறுப்பு தெரிவித்தார் சரவணன் எம்எல்ஏ. அந்த வீடியோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் கிலியை ஏற்படுத்தியது. அந்த ரகசிய வீடியோவை ஆங்கிலத் தொலைக்காட்சிக்குக் கொடுத்தது, தமிழகத்தில் உள்ள மூன் டிவி. மூன் டிவி நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ்கானுக்கும் அவரது நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆதம்பாவாவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுவே, எம்எல்ஏ-க்கள் ரகசிய பேர வீடியோ வெளியில் வந்ததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மூன் டிவி நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ்கானின் வீடியோகுறித்து முழு விளக்கமளித்திருந்தார். அதில், ஆதம்பாவா பற்றி பகிரங்கக் குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். இதுகுறித்து ஆதம் பாவாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

adam_bava1_14242

ஷாநவாஸ்கானுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை?

“ஷாநவாஸ்கான் யாரென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினரான அவர், பல முறைகேட்டில் ஈடுபட என்னையே பயன்படுத்த முயன்றார். அதற்கெல்லாம் ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. எம்எல்ஏ-க் கள் ரகசிய பேர வீடியோ ஒளிபரப்பியதற்குப் பின்னால் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. என்மீது அவதூறாக குற்றம் சுமத்திய ஷாநவாஸ்கான் மீது இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.”

சரவணன் எம்எல்ஏ ரகசிய பேர வீடியோ எப்படி எடுக்கப்பட்டது?

“அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார், ஷாநவாஸ்கான். கூவத்தூர் விடுதி தொடங்கி இதுவரை எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டுவருகின்றனர். கூவத்தூரிலிருந்து வெளியேறி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தவர் சரவணன். அவரை அலுவலகத்துக்கு வரவழைத்து ரகசியமாக வீடியோ பதிவுசெய்துள்ளனர். இந்தத் தகவல் எனக்குத் தெரியாது. நானும் ஷாநவாஸ்கானும் நண்பர்கள் என்பதால் அவரது அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. அப்போது, எனக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உள்ள 19 ஆண்டுகால பழக்கம் ஷாநவாஸ்கானுக்குத் தெரியும். அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க, ஷாநவாஸ்கான் திட்டமிட்டுள்ளார். அவரது உள்நோக்கம் அப்போது எனக்குத்தெரியாது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, என்னிடம் சசிகலா அணியிலிருக்கும் 10 எம்எல்ஏ-க்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாற விரும்புவதாக ஷாநவாஸ்கான் தெரிவித்தார். அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடம் என்னைப் பேச வலியுறுத்தினார். அதன்படி, நானும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேசினேன். ஆனால், அந்த10 எம்எல்ஏ-க்களின் பெயர், விவரங்களை என்னிடம் ஷாநவாஸ்கான் சொல்லவில்லை. திருச்சியில் 10 எம்எல்ஏ-க்களை அழைத்து வருவதாகத் தெரிவித்த ஷாநவாஸ்கான், என்னை ஏமாற்றிவிட்டார். அப்போதுதான், 10 எம்எல்ஏ-க்கள் அணி மாறும் தகவல் உண்மையா என்று தெரிந்துகொள்ள மூன் டிவி அலுவலகத்துக்குச் சென்று பணம் கொடுக்க பன்னீர்செல்வம் அணியினர் தயார் என்று சொன்னேன். பணத்தை எங்கு கொடுப்பீர்கள் என்று ஷாநவாஸ்கான் என்னிடம் கேட்டார். அதற்கும் நான் பதிலளித்தேன். இதை ரகசியமாக வீடியோவாக எடுத்துவைத்துள்ளார்.

பிறகு, அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டினார். அதற்கு நான்பயப்படவில்லை. இப்படித்தான் சரவணன் எம்எல்ஏ வீடியோவும் எடுக்கப்பட்டது. இதனால்தான் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு 10 கோடி ரூபாய்க்கு அந்த வீடியோவை விற்றுவிட்டார் ஷாநவாஸ்கான். இதில், எந்த ஸ்டிரிங் ஆபரேஷனும் இல்லை. நம்பிக்கைத் துரோகம்தான் நடந்துள்ளது. உண்மையில், சரவணன் எம்எல்ஏ எனக்கு யாரென்றே தெரியாது. இந்த வீடியோ விவகாரத்தில் சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம்போல ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவனுக்கு ஆசையைத் தூண்ட வேண்டும். அதன்பிறகு, அவனை எளிதாக ஏமாற்றலாம். அந்த வகையில்தான், பன்னீர்செல்வம் அணிக்கு 10 எம்எல்ஏ-க்கள் மாற விரும்புவதாக என்னிடம் சொன்னார், ஷாநவாஸ்கான். பன்னீர்செல்வம் அணியினரிடம் பணம் கேட்டார். அது நடக்கவில்லை என்றதும் வீடியோவை ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டார்.”

adam_bav_2_14571

நீங்கள், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வீடியோவை விற்றதாகச் சொல்லப்படுகிறதே?

“தி.மு.க. தலைவர் கருணாநிதி என்னுடைய அரசியல் ஆசான். அதோடு அழகிரி, ஸ்டாலின் ஆகியோருடனும் எனக்கு நட்பு உள்ளது. அதை வைத்துக்கொண்டு ஸ்டாலினிடம் எம்எல்ஏ-க்கள் ரகசிய பேர வீடியோவை நான் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அவர்களிடம் நான் எந்த வீடியோவையும் விற்கவில்லை.”

நீங்களும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளதே, அடுத்த ஆபரேஷன் தீபக்தானா?

“என்னுடைய நெருங்கிய நண்பர்  தீபக்.” என்றார்.

இந்த நிலையில், மூன் டிவி நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ்கான், “என் மீது  ஆதம் பாவா தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய். அவர், என் நண்பர் இல்லை. இந்த ‘ஸ்டிரிங் ஆபரேசன்’ போதுதான் பன்னீர்செல்வம் அணியின் இடைத்தரகராக அவர் எனக்குத் தெரியும். சம்பந்தப்பட்ட சரவணன் எம்எல்ஏ-கூட போலீஸில் புகார் கொடுக்கவில்லை. என் மீது ஆதம் பாவா கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் விசாரணை நடந்த்தால் ஆதாரங்களை  சமர்பிப்பேன். இந்த வழக்கில் இடைத்தரகர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Comments

comments