_18494

ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து, பா.ஜ., மேலிடத்திடம் சமரசம் செய்து கொள்ளலாம் என, சசிகலாவும், தினகரனும் கணக்கு போட்டனர். அக்கணக்கு, தற்போது தவிடு பொடியாகி உள்ளது.

‘பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி, கட்சித் தலைமை முடிவு செய்யும்’ என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி பேசி, ஆதரவை உறுதி செய்துவிட்டார். இதன் மூலம், அ.தி.மு.க., – சசிகலா அணியின் தலைமை, முதல்வர் பழனிசாமி தான் என்பதை, பா.ஜ., வெளிப்படுத்தி உள்ளது.

பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கக் கூடாது

இதை தொடர்ந்து, ‘சசிகலா, தினகரனிடம் தான், பிரதமர் ஆதரவு கேட்க வேண்டும்’ என, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று, பெங்களூரு சிறையில் சசிகலாவை, தம்பிதுரையும், தினகரனும் அடுத்தடுத்து சந்தித்தனர். பின், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், முருகன், கென்னடி, பாலசுப்ரமணியம் ஆகியோரும், சசிகலாவை சந்தித்தினர்.
சந்திப்பு குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

முதல்வர் பழனிசாமி, கட்சியிலும், ஆட்சியிலும் தன்னை முன்னிலைப்படுத்துவதில், தீவிரமாக இருக்கிறார். சென்னையில் நடைபெற உள்ள இப்தார் விருந்துநிகழ்ச்சியில், தினகரன் தலைமை வகிக்க வைக்க வேண்டும் என, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரிடம் வலியுறுத்தினர்; அவர் மறுத்துவிட்டார். தன் தலைமையில் தான் நடைபெறும் என, அறிவித்துவிட்டார்.
இதனால், பழனிசாமி மீது, தினகரன் கடும் அதிருப்தியில் உள்ளார். அதோடு, ஜனாதிபதி தேர்தலில், முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி ஆதரவு கேட்டதையும், தினகரனால்
ஜீரணிக்க முடியவில்லை. பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற நிலையை, தினகரன் எடுத்துள்ளார்.

சசிகலா தான் முடிவு செய்வார்’

இந்நிலையில், நேற்று பெங்களூரு சிறையில், சசிகலாவை சந்தித்து பேசினார் தம்பிதுரை. அப்போது அவர், ‘தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளித்தால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும்.
முதல்வர் பழனிசாமிதலைமையிலான அரசு மீது, நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை, எதிர்க்கட்சிகள் கொண்டு வருவதற்கு வாய்ப்பு உருவாகிவிடும். ஆட்சிக்கு ஸ்திரத்தன்மை இல்லை என்ற நிலை ஏற்படும். எனவே, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளிக்க உத்தரவிடுங்கள்’ என, ஆலோசனை கூறியுள்ளார்.

தம்பிதுரையை தொடர்ந்து, சசிகலாவை தினகரன் சந்தித்தார். அப்போது, தினகரன், ‘என் ஆதரவு, 34 எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து எம்.பி.,க்கள், பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிக்க தயாராக உள்ளனர்’ என, கூறியுள்ளார்.
மேலும், ‘பா.ஜ.,வை ஆதரித்தாலும், நமக்கு சாதகமாக செயல்பட போவதில்லை; எனவே, அவர்களை எதிர்த்து அரசியல் செய்தால் தான், கட்சியை கைப்பற்ற முடியும்’ என, தினகரன் கூறியுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின், ‘ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஆதரவு என்பதை, சசிகலா தான் முடிவு செய்வார்’ என, தினகரன் கூறினார். அவரது பேச்சு, அக்கட்சியில் புதிய குழப்பத்தை உருவாக்கி உள்ளது.
அதாவது, முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு ஆதரவாக உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், அவரின் பேச்சுக்கு கட்டுப்படுவரா; சசிகலா பேச்சுக்கு கட்டுப்படுவரா என, கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Comments

comments