[

புதிதாக படமெடுக்க வரும் அப்பாவி தயாரிப்பாளர்களின் கழுத்தில் துண்டை போட்டு உள் நாக்கு வரைக்கும் சுரண்டிக் கொழுக்கும் கொடுமை வேறு மாநில சினிமாவிலிருக்கிறதா, தெரியாது. ஆனால் கோடம்பாக்கம் எப்போதும் எல்லா நேரத்திலும் ‘பி வேர் ஆஃப் திருடர்கள்’ ஏரியாதான்! அண்மையில் திரைக்கு வந்த ‘உரு’ என்ற படத்தின் தயாரிப்பாளர் விஜி என்பவர்தான் அப்படி சில திருடர்களின் கையில் சிக்கிய பணப்பெட்டியாக பல்லிளித்துக் கொண்டிருக்கிறார்.

விக்கி ஆனந்த் என்ற புதியவர் இயக்கிய இப்படம், பல மால் தியேட்டர்களில் சிங்கிள் ஷோவாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதலில் 1.67 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை முடித்துவிடுவதாக சொல்லி ஆட்டுக்கு மாலை போட்ட விக்கி ஆனந்த், அதற்கப்புறம் விஜி என்ற அந்த ஆட்டை வெட்டி வெட்டி சாப்பிட்ட கதைதான் கோடம்பாக்கத்தின் குமுறி அழும் நிஜக்கதை. கிட்டதட்ட நாலு கோடிக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டார்கள் விக்கி ஆனந்தும் அவரது டீமும்.

முதலில் படத்தின் ஹீரோ கலையரசனுக்கு 20 லட்சம் சம்பளம், ஹீரோயின் தன்ஷிகாவுக்கு 15 லட்சம் என்று பேசிதான் படத்தை ஆரம்பித்தாராம் விஜி. அப்படி சொல்லி மெதுவாக வண்டியை உருள விட்டுவிட்டார் டைரக்டர் விக்கி ஆனந்த். இருவருக்கும் குறைவான சம்பளம்தானே என்று சந்தோஷமாக படத்தை ஸ்டார்ட் பண்ணிய தயாரிப்பாளருக்கு அதற்கப்புறம்தான் அதிர்ச்சி. “சார் அவங்களுக்கு கொடுத்த சம்பளம் போதாது. இன்னும் ஒரு மடங்கு அதிகம் தர வேண்டும்” என்று பெரும் தொகையை பிடுங்கிக் கொடுத்திருக்கிறார் டைரக்டர். நடுவில் கேம் ஆடியது இவர்தான் என்று பிறகுதான் புரிந்ததாம் தயாரிப்பாளருக்கு.

அது மட்டுமல்லாமல், படம் துவங்கப் போகிற விஷயத்தை சொந்த பந்தங்களுக்கு சொல்லி பெருமை பட்டுவிட்டோம். இனி பின் வாங்குனா சரியா இருக்காது என்று நினைத்த விஜி கலையரசனுக்கும் தன்ஷிகாவுக்கும் பணத்தை வாரிக் கொடுத்து படத்தை ஆரம்பித்திருக்கிறார்.

முழுக்க முழுக்க பகல் நேரத்திலேயே ஷுட்டிங். அதனால் லைட் செலவு மிச்சம் என்று முதலில் கூறிய டைரக்டர் விக்கி, அதற்கப்புறம் ஏராளமான லைட்டுகளுடன், அந்தந்த லைட்டுகளுக்கு செக்யூரிடியாக வந்த ஏராளமான தொழிலாளர்களுடன் படப்பிடிப்பை பல நாட்கள் இரவிலேயே எடுத்திருக்கிறார். இதிலேயே பல லட்சங்கள் அவுட். சரி…. செலவு வச்ச மகராசன் படம் முடிந்து ரிலீஸ் நேரத்தில் அருகில் இருக்க வேண்டுமல்லவா? அங்குதான் பெரும் கொடுமை. ஆள் எஸ்கேப்.

எல்லா விளம்பர விஷயங்களையும், தொலைக்காட்சிகளுக்கு கிளிப்பிங்ஸ் கொடுக்கிற வேலைகளையும் விஜியே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். கொடுத்த கொழுப்பு சூப் போதாது என்று விக்கி ஆனந்த், தயாரிப்பாளர் விஜக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். என்னவென்று?

“என் நல்ல மனசுக்கு நாலு படம் வரிசையா புக் ஆகியிருக்கு. நானே ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறேன். என்னை கட் அவுட்ல பார்த்து கன்னத்துல போட்டுக்கங்க” என்று!

“விரைவில் போண்டியாகவிருக்கும் அந்த நாலு பேர் யாருன்னு சொன்னீங்கன்னா முன்னாடியே நாலு திருவோட்டுக்கு ஆர்டர் பண்ணி அனுப்பி வைக்கலாம். நஷ்டத்தோட நஷ்டமா போகட்டும்” என்று பதிலளித்திருக்கிறாராம் விஜி.

Comments

comments