`எவ்வளவு நாள்தான் தனியாகவே இருப்பது?’ என்று யோசிக்கிறீர்களா, கவலையைவிடுங்கள்! தனியாக இருப்பது ஒன்றும் தவறான விஷயம் அல்லவே. அதிலும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.  தனியாக இருந்தாலும் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது, தனியாக இருப்பதை எப்படி நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்… உங்களின் முன்னேற்றத்துக்கான துணையாக, வழிகாட்டியாக எப்படி அமைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போமா…

happy_21543

நீங்கள்தான் ராஜா:

தனியாக இருப்பதற்காக வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு நீங்கள்தான் ராஜா; நீங்கள்தான் மந்திரி. தனியாக இருப்பதன் மூலம் உங்கள் திறமையை உணர்ந்துகொள்ளலாம். உங்கள் முடிவை நீங்களே எடுக்கலாம். உங்கள் முடிவுகளில் மற்றவர்கள் தலையிடும் வாய்ப்புகள் குறைவு என்பதால், நீங்கள் சுதந்திரமாகச் செயல்படலாம்.

சுற்றுப்புறங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்:

தனியாக இருப்பதால் உங்களால் சுற்றுப்புறத்தை வேறொரு கோணத்தில் பார்க்க முடியும். எனவே, உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்விலிருந்து மற்றவர்களைவிட அதிகம் கற்றுக்கொள்ள முடியும். சரியோ தவறோ, எல்லாவற்றையும் ஆராயுங்கள். சரியானவற்றை அறிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிட்டால், பெரும்பாலான தவறுகளைத் தவிர்த்துவிடலாம்.

மனதோடு பேசுங்கள்:

`அருகில் பேச எவரும் இல்லையே!’ என்று கவலையா? உங்கள் மனதோடு பேசுங்கள். மனதைவிட அருமையான பேச்சுத்துணை எவரும் இருக்க முடியாது. அருகில் இருப்பவர்கள்கூட நெகட்டிவாக ஏதாவது கூறலாம். ஆனால் நம் மனமோ, நமக்கு என்றுமே நம்பிக்கை அளிக்ககூடியது. எனவே, மனதோடு பேசிப்பாருங்கள்.

motivation_21198

நேரம் உங்களுக்கு அதிகம்:

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், மற்றவர்களைவிட உங்களுக்கு நேரம் அதிகம் கிடைக்கும். அந்த நேரத்தை ஆக்கபூர்வமான வழிகளில் உபயோகப்படுத்துங்கள். மற்றவர்களைவிட உங்களுக்கு இடையூறு குறைவுதானே! புத்தகங்கள் படியுங்கள், இயற்கையை ரசியுங்கள், பாடல்கள் கேளுங்கள். எதுவாயினும் நேரத்தை உபயோகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், காலம் பொன் போன்றது!

அமைதியை உணருங்கள்:

வீட்டில் என்ன செய்வதென்றே தெரியாமல் வெறுப்பாக இருக்கிறீர்களா… கவலைப்படாதீர்கள். அந்தச் சூழ்நிலைதான் அமைதியை உணர ஏற்ற தருணம். கண்களை மூடி, நிசப்தத்தை ரசிக்கக் கற்றுக்கொள்ளலாம். அமைதியின் அருவம், உங்கள் வாழ்க்கைக்கான நல்வழிகளை நிச்சயம் காட்டும்.

உங்களுக்கென தனி வழியை உருவாக்குங்கள்:

தனியாகவே இருந்துட்டு, உங்களுக்கென தனி வழியை உருவாக்கவில்லை என்றால் எப்படி? நாளை செய்யவிருக்கும் வேலை முதல் உங்களின் எதிர்காலத் திட்டம் வரை தெளிவாக முடிவெடுங்கள். அதற்காக, உங்கள் சுதந்திரத்தை முழுதாகப் பயன்படுத்துங்கள்.

பரிசோதனை முயற்சிகள் உங்களுக்குச் சாதனைகள்தான்:

ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதில் எவ்வளவு பலன் கிடைக்குமோ, அதைப்போலவே தனியாக இருந்து வேலைபார்ப்பதிலும் பலன் கிடைக்கும். குழுவாகப் பணியாற்றினால்கூட பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்க சில தயக்கங்கள் இருக்கலாம். ஆனால், தனியாக இருந்தால் பரிசோதனை முயற்சியால் கிடைக்கும் முழு பலனும் உங்களுக்கே என்பதால், தயங்காமல் களத்தில் இறங்குங்கள்.

அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் வேண்டாம்:.

அறிவுரைகள் அதிகமாகவே கிடைக்கும். இருந்தாலும் எதையுமே தவிர்க்காதீர்கள். ஒருசிலவற்றை உங்களுக்குப் பயன் தரலாம். எதுவாக இருந்தாலும், கடைசியில் முடிவு எடுக்கப்போவது நீங்கள்தான்.

பொழுதுபோக்கு:

பொழுதைத் தனியாக எப்படிப் போக்குவது என யோசிக்கிறீர்களா? உங்கள் அறையைச் சுத்தம் செய்யுங்கள். ஒழுங்கு இல்லாமலிருக்கும் பொருள்களை அடுக்கிவையுங்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டீர்களா? ஜாலியாக ஒரு படத்துக்குச் சென்று வாருங்கள்.
தனியாகப் படத்துக்குச் செல்வதே தனி அனுபவம்தானே!

எண்ணங்களை நேர்மறையாக்குங்கள்:

தனியாக இருந்தால் நல்லது கெட்டது எனப் பல எண்ணங்கள் தோன்றும். அதில் நல்ல எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள். தீய எண்ணங்களை ஒதுக்கிவிடுங்கள். எண்ணங்களைச் சிந்திப்பதோடு மட்டுமல்லாமல், கூடுமானவரை அவற்றைச் செயல்படுத்தவும் முயலுங்கள். ஏனென்றால், நல்ல எண்ணங்களே வெற்றியை எளிதாக்கும்.

Comments

comments