0

சென்னை: தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாக அதிகரிக்கும் என தெரிகிறது. தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் சினிமா டிக்கெட் கட்டணம் அதிகமாக உயர்கிறது. 100 ரூபாய்க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் தியேட்டர்கள் 18 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களில் 28 சதவீத வரியும் கட்ட வேண்டி வரும்.

இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் நடத்திய ஆலோசனையில் தற்போது, 100 ரூபாய் விற்கும் டிக்கெட் 120 ரூபாய்க்கும், 120 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கும் உயர்த்த முடிவு எடுத்துள்ளனர். நாளை முதல் புதிய விலையில் டிக்கெட் முன்பதிவு துவங்க பல தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில் சினிமா டிக்கெட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இதனால் 30 சதவீத நகராட்சி வரியும் சேர்த்து அமலானால் டிக்கெட் கட்டணம் 200 ரூபாய் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: ஒரு டிக்கெட்டை 100 ரூபாய்க்கு விற்று மத்திய, மாநில அரசுகளுக்கு 58 ரூபாய் வரி செலுத்தியது போக மீதம் 42 ரூபாயை தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் எப்படி பிரித்துக் கொள்ள முடியும்; ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் நகராட்சி வரியை ரத்து செய்துள்ளனர்; ஜி.எஸ்.டி., மட்டுமே வசூலிக்கப்படும் என, அறிவித்துள்ளனர். அதேபோல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

comments