_18494 (1)

ஜிஎஸ்டி குறித்து தமிழக அரசு தெளிவான முடிவு எடுக்காவிட்டால் திங்கள் கிழமை (ஜூலை 3) முதல் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்படும் என அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி என்கிற அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு ரூபாய் 100-க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 18 சதவிகித வரியும், ரூபாய் 100-க்கு மேல் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 28 சதவிகித வரியும் கட்ட வேண்டி இருக்கும்.

இதுதவிர நகராட்சி வரி 30 சதவீதம் வரை விதிக்கப்படலாம் என்ற கருத்து தமிழக தியேட்டர் வட்டாரங்களில் நிலவுகிறது. அப்படி வரி விதிக்கப்பட்டால் டிக்கெட் கட்டணங்கள் 200 ரூபாய் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சினிமா டிக்கெட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இதனால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் முன்பதிவு எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் தமிழ் திரைப்பட வர்த்தகசபையின் அவசரக்கூட்டம் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் சென்னையில் நடந்தது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், “ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழக அரசு ஒரு தெளிவான முடிவு எடுக்கவில்லை. லோக்கல் வரி மற்றும் ஜிஎஸ்டி சேர்ந்தால் கிட்டத்தட்ட 53 முதல் 64 சதவீதம் வரை வரி செலுத்த நேரிடம். இதன்காரணமாக டிக்கெட் கட்டணம் உயரும், பொதுமக்கள் தான் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். இப்படியொரு நிலை வந்தால் நிச்சயம் தியேட்டரை ஓட்ட முடியாது. ஆகையால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன். இல்லையென்றால் திங்கள்(ஜூலை 3) முதல் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்படும். அதுவரை சனி மற்றும் ஞாயிறுகளில் தற்போதைய கட்டணமே வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

comments