che_trump_600_x_400_14130

ன்று இரு வேறு துருவங்களின் பிறந்தநாள். ஒருவர், உலகை ஏகாதிபத்தியங்களிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்ற பெருங்கனவுடன் அர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்டவர். மற்றொருவர், ஏகாதிபத்தியத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று பேரினவாதம் பேசித் திரிபவர். முன்னவர் அனைவருக்குமான விடுதலை குறித்து பெருங்கனவு கண்டவர். பின்னவர், நாம்தான் எல்லாம்… நமக்காகத்தான் எல்லாம் என்று அமெரிக்கர்களைக் கனவுகாணச் சொல்பவர். அந்த அர்ஜென்டினாக்காரர், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கண்டங்கள் திரிந்தவர். இந்த நியூயார்க்காரர், எல்லாம் தங்களுக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கண்டங்கள் பறந்தவர். அவர் இறுக்கத்திலிருந்து விடுதலை நோக்கித் தள்ளிய உந்துசக்தி. இவர், விடுதலையை மறுவாசிப்பு செய்யச் சொல்லும் ஆதிக்கச் சக்தி. அறமற்ற வணிகத்துக்கும் மருத்துவம் செய்ய முனைந்தவர் அவர். மருத்துவத்தைக்கூட வணிகமாக மட்டும் பார்க்கத் தெரிந்தவர் இவர். அவர் சேகுவேரா… இவர் டொனால்ட் ட்ரம்ப்.

சேவும்… ட்ரம்பும் சந்திக்கும் புள்ளி:

அரசியல்ரீதியாக இருவரும் வெவ்வேறு துருவங்கள். தழுவிக்கொண்ட தத்துவங்கள் வேறு. இருக்க விரும்பிய… விரும்புகிற களங்களும் வேறு. ஆனால், இருவருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. கொஞ்சம் கொச்சையான மொழியில் சொல்ல வேண்டுமென்றால்… அது விட்டோத்திதனம்.

சே, உலகையே ஏகாதிபத்தியங்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விரும்பியவர்தான்… அதற்காகக் கடல், காடு எனத் திரிந்தவர்தான். ஆனால், அவர் எப்போதும் இறுக்கமாக தன்னை வைத்துக்கொண்டதில்லை. தத்துவங்கள் அவருக்குத் தெரியும்தான்… ஆனால், சந்திக்கும் மனிதர்கள் எல்லோரையும் தத்துவத்தோடு அவர் அணுகியதில்லை. பெரும் கொரில்லா வீரனாக… காடுகளில் ஆயுதங்களோடு திரிந்தபோதும் அவரிடம் நகைச்சுவை உணர்வு இருந்தது… எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக அணுகும் மனப்பக்குவம் இருந்தது. அந்த உணர்வுதான் அவரை அரசுப் பதவிகளில் சொகுசாக அமரவிடாமல் தேசங்களின் எல்லைகள் தாண்டி அலையவைத்தது.

இதே விட்டோத்திதனம்தான் ட்ரம்பிடமும் இருக்கிறது. ஆனால், அது பணக்காரத்தனமானது; மற்றவர்களை இளக்காரமாகப் பார்ப்பது. ட்ரம்பின் வணிகம் இந்த அளவுக்கு விரிவடைய அந்த விட்டோத்திதனம்தான் காரணம். அவர், வணிகத்தைச் சூதாட்டமாகத்தான் பார்த்தார். அதன் வெற்றிக்காக எல்லாவற்றையும் பணயம்வைத்தார். ‘Trump, The art of the deal’ – இது ட்ரம்ப் சில தசாப்தங்களுக்கு முன் எழுதிய புத்தகம். உலக அளவில் அதிகம் விற்ற புத்தகங்களில் இதுவும் ஒன்று. இது, அவர் வணிகத்தை எப்படி அணுகினார்… மனிதர்களை எப்படி அணுகினார் என்று தெளிவாகப் பேசுகிறது.

இதுதான்… இது மட்டும்தான் சேவும் ட்ரம்பும் சந்திக்கும் புள்ளி. இவற்றைத் தவிர்த்து அவர்களிடையே இருப்பது அனைத்தும் வேற்றுமைகள்தான்… வேற்றுமைகள் மட்டும்தான்!

Che_001_14436

சே – ட்ரம்ப் பொருளாதாரம்:

சே-விடம் தேசிய இனங்களின் விடுதலை குறித்து தெளிவான பார்வை இருந்தது. எந்தத் தேசிய இனமும் சுரண்டப்படக்கூடாது என்று விரும்பினார். அதற்காகப் போர் செய்தார். ட்ரம்பிடமும் தேசிய இனம் குறித்த ஒரு பார்வை இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டமாக அந்தப் பார்வை ‘Tunnel Vision’-ஆக குறுகியதாக இருக்கிறது. ஆம், அவர் கவலைப்படுவது அனைத்தும் அமெரிக்க தேசிய இனத்துக்காக மட்டும். அதன் நலனுக்காக… அந்தத் தேசிய இன மக்களின் வளர்ச்சிக்காக மட்டும்தான்.

ட்ரம்ப் கவலைப்படுகிறார், “நாம் பிற தேசத்தின் வளர்ச்சிக்காகச் செலவு செய்தோம். ஆனால், நம் தேசம் சரி செய்ய முடியாத அளவுக்குச் சேதமடைந்துவிட்டது. நாம் பிற தேசங்களை வளமான தேசமாக மாற்றினோம். ஆனால், நம் தேசம் சிதறிக் கொண்டிருக்கிறது. இழந்த பெருமைகளை… பொருளாதாரத்தை மீட்போம். அமெரிக்காவை மீண்டும் வலுவான அமெரிக்காவாக மாற்றுவோம்” என்கிறார். அதாவது, எல்லைகளை இன்னும் இறுக்கமாக்குவோம்… நம்மவர்களுக்கு மட்டுமே வேலை என்போம்… சுவர் எழுப்புவோம் என்பது ட்ரம்பின் வாதம். அதாவது, அமெரிக்காவின் பகாசுர கரங்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம்… எதனை வேண்டுமானாலும் சுரண்டலாம். ஆனால், அதே நேரம் அமெரிக்காவுக்குச் சிறு சிராய்ப்புகூட ஏற்பட்டுவிடக் கூடாது என்று பதறுகிறார்.

சேவிடமும் ஒரு பொருளாதாரக் கொள்கை இருந்தது… சுரண்டல் குறித்த ஒரு பார்வை இருந்தது. அந்தப் பார்வை அப்போதைய சோவியத்திடமிருந்தே முரண்பட்டது. சே, சோவியத்தை விமர்சிக்கிறார், “சோவியத்  மார்க்ஸிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. சோவியத் சுவீகரித்துக்கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவத்தை நோக்கியே இட்டுச் செல்வதாக இருக்கிறது” என்கிறார். சேவின் பொருளாதாரக் கொள்கை தெளிவானது. தம் தேசத்தின் வளர்ச்சிக்காக எந்தத் தேசமும் சுரண்டப்படக் கூடாது என்பது அது. தாராளமய பொருளாதாரம் என்பது இரண்டு தரப்புக்கும் நன்மைபயப்பதாக இருக்க வேண்டும். ஒருதரப்பு நலன் மட்டுமே பிரதானமானதாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதுதான் ஒரு பொருளாதாரப் பார்வையில் ட்ரம்ப் எக்னாமிக்ஸுக்கும், சே எக்னாமிக்ஸுக்கும் உள்ள வித்தியாசம்.

சே – ட்ரம்ப் உலகமயப் பார்வை:

trump_14195

ட்ரம்பின் உலகமயப் பார்வை குறுங்குழு வாதமாக இருக்கிறது. அவருடைய பார்வையில் உலகமயமென்பது உலகமே அமெரிக்காவுக்கு சேவை செய்வதுதான். உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்காக, அமெரிக்கர்களின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்பதுதான் ட்ரம்ப் புரிந்துகொண்ட உலகமயம். அதனால்தான், உலகமயக் கொள்கைகளால் அமெரிக்கர்கள் வேலை இழக்கும்போது… உலகமயமே தோற்றுவிட்டது என்று புலம்புகிறார். அந்தக் கொள்கையையே கைவிட எத்தனிக்கிறார். இவர் கைவிட விரும்பும் அந்த உலகமயம்தான், ட்ரம்ப் நிறுவனங்கள் ஆசியா, ஆஸ்திரேலியா என எங்கும் கடைவிரிக்க உதவியது என்பது உலகமயத்தின் சுவைகண்ட அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதே நேரம் உலகமயம் உண்டாக்கும் சிறு சேதத்தையும் தாங்கிக்கொள்ள மறுக்கிறது அவரது ஆதிக்க மனம்.

சேவின் உலகமயப் பார்வை, தேசங்களைப் பொருளாதார இறுக்கங்களிலிருந்து விடுவிப்பது. ஏகாதிபத்தியத்திலிருந்து விடுவிப்பது. தேசங்களின் வளம் மக்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பிறரின் ஆதிக்கத்தால் எந்தத் தேசமும் வறுமையில் உழலக்கூடாது என்பது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது சேவின் பார்வை. அதனால்தான், அர்ஜென்டினாவில் பிறந்து கியூபா விடுதலைக்காகப் போராடி… காங்கோ காடுகளில் இவரைச் சுற்றாவைத்தது.

சே – ட்ரம்பைக் கடந்து செல்லுதல்:

முழுவதுமாகச் சே-வைத் துதிபாடிவிட்டு ட்ரம்பைச் சுலபமாகக் கடந்து சென்றுவிட முடியாது. உண்மையாகச் சேவை நேசிப்போமாயின், அவரின் தவறுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். சே- ஆயுதங்கள் மீது நம்பிக்கைகொண்டிருந்தார். அதன்மூலம் விடுதலையைப் பெற்றுவிட முடியும் என்று நம்பினார். ஆனால், அரசுகள் பேரழிவைத் தரும் இந்தக் காலகட்டத்தில் ஆயுதங்களால் நிச்சயம் எந்த வெற்றியையும் பெற முடியாது என்பதுதான் நிஜம்.

அதுபோல, ட்ரம்ப் வைக்கும் கொள்கைகள் அனைத்தும்… ஒரு தனிமனிதனின் கொள்கைகள் அல்ல. உண்மையில், பெருவாரியான மக்களுடைய எண்ணங்களுடைய முகம்தான் ட்ரம்ப். கல்வி, பணி என அனைத்தும் சுயநலத்தை மட்டும்தானே போதிக்கிறது. உன்னைப்பற்றி மட்டும் யோசி… உன் வாழ்க்கையைக் கொண்டாடு… உன் வெற்றி மட்டும்தானே உனக்கு முக்கியம் என்கிறது. அதைத்தான் ஒரு தேசத்தின் அதிபராக நின்று வெளிப்படுத்துகிறார். சொல்லப்போனால், ட்ரம்பிடம் இன்னும் கொஞ்சம் போன நூற்றாண்டின் சில பண்புகள் ஒட்டிக்கிடக்கின்றன. ட்ரம்பை விமர்சிக்கும் இந்த நூற்றாண்டின் பிள்ளைகள் அமெரிக்காவின் அதிபராக ஆகி இருந்தால், அந்தத் தேசத்தின் முடிவுகள் இன்னும் சுயநலமானதாகத்தான் இருந்திருக்கும்.

வாசிப்போம்.. புரிந்துகொள்வோம்:

இந்த இரண்டு ஆளுமைகளின்… அவர்களின் அரசியலின் முரணில்தான் உலக அரசியல் இயங்கிக்கொண்டிருக்கிறது. பல்வேறு அரசியல் தத்துவங்களை, பேரினவாதத்தை, குறிப்பாக உலகமயமாக்கலை வாசிக்க வேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவோமாயின் இந்த இருவரையும் வாசிப்போம்… அவர்களின் காலகட்டங்களைப் புரிந்துகொள்வோம். அதன்மூலாமாக அரசியல் கற்போம்.  இவர்கள் இருவரும் எந்தத் தேசத்திலோ பிறந்த யாரோ கிடையாது… இவர்கள்தான் நம் அரசியல்… இவர்கள்தான் நம் பொருளாதாரம்!

Comments

comments