1_12411

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்கு திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரை அமைப்புகளின் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சினிமா சூதாட்டம் போன்றது அல்ல. சினிமா என்பது கலை. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு விவகாரத்தில் திரைப்படத்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீத வரி விதிக்கும் முடிவைக் கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது சரியாகாது. அதே போல் இந்தியா முழுவதும் பரவியுள்ள ஹிந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் ஹிந்தி படங்களுக்கும், நமது தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு பிராந்திய மொழியின் வீச்சு மற்றும் பலம் என்பது அதன் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான். ஆனால் உலகளாவிய ரசிகர்களை கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் மற்றும் இந்திய அளவில் ரசிக்கப்படும் இந்திய படங்களுக்கும் ஒரே அளவில் வரி என்பது சரியல்ல. பிராந்திய மொழி பேசும் மக்கள் உலகில் வேறு எந்த பகுதியில் வசித்தாலும், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவானதுதான். அவர்களால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான விலை அதிகரிப்பை சமாளிக்க இயலாது. ஆனால் உலக அளவில் விருதுகளைப் பெற்று பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள்தான். இவ்வாறான சிரமங்களை சிறிய படங்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் அதிகளவில் சம்பளம் பெறும் நடிகர்கள் என்று சிலரைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் நாங்கள் வருமான வரி தனியாக கட்ட வேண்டியுள்ளது. ஆனால் இந்தியா முழுமைக்கும் எங்களைப் போல் 15 பேர் இருப்பார்களா? அவர்களைத் தவிர மற்றவர்கள் இதனை எவ்வாறு சமாளிப்பது? என்னைப் பொருத்தவரையில் சினிமாதான் எனக்கு வாழ்க்கை. என் மழலை மாறத் துவங்கியதே இங்குதான். எனவே என் வாழ்க்கை கெடாமல் இருக்க நான் போராடியாக வேண்டும். ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. இந்த வரி விதிப்பு விவகாரத்தில் தமிழக அரசு உதவுவதாக சொல்லியிருக்கிறார்கள். உறுதியும் கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த விவகாரம் நல்ல விதமாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் கமல்ஹாசன். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்தன.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-ஆவது கூட்டம் தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், இன்சுலின் மருந்து, நூறு ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட் உள்ளிட்ட 66 பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சினிமா டிக்கெட் வரி குறைப்பு

கமல் உள்ளிட்ட திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாகத் தொடரும்.

கமலின் முயற்சியினால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மேலும் சில கேள்விகளை உருவாக்கியுள்ளது.

கேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணத்தில் 25% பொழுதுபோக்கு வரி அமலில் இருந்தது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் இரட்டை வரி வசூலிக்கவேண்டிய நிலைமை உண்டாகும். எஎனவே பொழுதுபோக்கு வரி ரத்து செய்யப்படுவதாக கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசாக் அறிவித்தார். பொழுதுபோக்கு வரி மூலம் கிடைக்கும் வருமானம் நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனால் உண்டாகும் நஷ்டத்தை இழப்பீடாக அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு முன்னதாக கேரளாவில் பொழுதுபோக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் பொழுதுபோக்கு வரியை ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இல்லாவிட்டால் தமிழகத்தில் திரையுலகுக்கு இரட்டை வரி நிர்ணயிக்கப்படும். இதனால் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர வாய்ப்புண்டு.

அதற்குப் பதிலாக தற்போதைய நிலையே நீடித்தால் இனி ரூ. 120 டிக்கெட்டுகள், ரூ. 153.60-க்கு விற்கப்படும். (120 + ஜிஎஸ்டி 28%).

அதேபோல ரூ. 100-க்குக் குறைவாக உள்ள டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 18% என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் ரூ.120 டிக்கெட்டுகள் தற்போது ரூ.100 ஆகக் குறைக்கப்படும் என்று அறியப்படுகிறது. இல்லாவிட்டால் டிக்கெட் விலை ரூ. 150-க்கும் அதிகமாக இருக்கும். இதனால் ரசிகர்களின் வருகை மிகவும் குறையும் என்று அஞ்சப்படுகிறது. அதனால் தமிழகத்தில் மல்டிபிளெக்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளின் டிக்கெட் விலை குறைய வாய்ப்புள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக ஓங்கி ஒலித்த குரல் என்று கமல் தன் முயற்சிகள் குறித்து பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அவருடைய தொடர் முயற்சியினால் இன்று 18% ஆக வரிவிதிப்பு குறைந்துள்ளது. கடைசியில் அது ரசிகர்களுக்கும் பலன் அளிக்கவேண்டும் என்றால் அது திரையரங்குகளின் கையில்தான் உள்ளது.

Comments

comments