secratretimag

சென்னை: ”கருணாஸ் பாடுகிறார்; அமைச்சர்கள் பாடுகின்றனர்; நானும் பாடுவேன்,” எனக்கூறிய, தி.மு.க., – எம்.எல்.ஏ., புகழேந்தி, அ.தி.மு.க.,வை மறைமுகமாக கிண்டலடிக்கும் பாடலை, சட்ட சபையில் பாடினார்.
சட்டசபையில நேற்று, முதல் முறையாக புகழேந்தி பேசினார். அப்போது, பதிலுரை அளிக்கவிருந்த, கூட்டுறவு அமைச்சர், ராஜுவை பார்த்து, ”எனக்கு ஓராண்டுல, எப்பவோ ஒரு முறை வாய்ப்பு வந்திருக்கு; நடுவுல குறுக்கிட்டு, நேரத்தை குறைத்து விடாதீர்கள்,” என்றதும், சபையில் சிரிப்பலை எழுந்தது.
பின், புகழேந்தி பேசுகையில், ”சட்டசபையில், 60 ஆண்டுகளாக, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், தி.மு.க., தலைவர் கருணாநிதி. 1971 முதல் பல முறை, எம்.எல்.ஏ.,வாக இருந்து வருபவர்
துரைமுருகன்.
அவர்கள், ஐந்து முதல்வர்களை பார்த்துள்ளனர். ஆனால், 1972ல் பிறந்த நான், முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். ஓராண்டுக்குள், மூன்று முதல்வர்களை பார்த்துட்டேன்,” என்றார்.
உடன் குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், ”அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் என, மூன்று முதல்வர்களை, தி.மு.க., குறுகிய காலத்தில் பார்த்துள்ளது,” என்றார். அதற்கு, சபாநாயகர் தனபால், ”அது, 1971க்கு முன் நடந்தது,” என்றதும், தி.மு.க.,வினர் சிரித்து விட்டனர்.
பின் பேசிய புகழேந்தி, ”சட்டசபையில் கருணாஸ் பாடுகிறார்; அமைச்சர்கள் பாடுகின்றனர்; நானும் பாட வேண்டும் என்றவர், ஒரு பொம்மலாட்டம் நடக்குது; அது புதுமையா இருக்குது. நாலு பேரு நடுவுல, நுாலு ஒருத்தன் கையில,” என, மத்திய அரசு கட்டுப்பாட்டில், அ.தி.மு.க., இருப்பதை சுட்டிக்காட்டினார்.
எனினும், அ.தி.மு.க.,வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பின், ”அடுத்த ஆண்டு நாங்கள் பதில் சொல்லும் இடத்தில் இருப்போம். நீங்கள் கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பீர்களா என, தெரியவில்லை,” என்றார். அதற்கு செங்கோட்டையன், ”பகல் கனவு காணாதீர்கள்,” என்றார். அமைச்சர் ஜெயக்குமார், ”கறந்த பால் மடி புகாது; கருவாடு மீனாகாது; தி.மு.க., ஆட்சிக்கு வரமுடியாது,” என்றார்.

Comments

comments