கிரேக்கப் புராணங்களில் வரும் மிடாஸ்போல், இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி தொட்டதெல்லாம் பொன்னாகிறது. கோலியும் பிரபல அடிடாஸ் நிறுவனமும் போட்டிருந்த மூன்று ஆண்டு ஒப்பந்தம் கடந்த டிசம்பரில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆண்டுக்கு பத்து கோடி ரூபாய் கோலிக்கு வழங்கும் பெரிய ஒப்பந்தம் அது. மிகப்பெரிய நிறுவனங்கள் கோலியின் கான்ட்ராக்ட்டுக்காக வரிசையில் காத்திருக்கும் நிலையில், அதை ‘ஜஸ்ட் லைக் தட்’  இழந்தது அடிடாஸ்.  அதை நீட்டிப்பதுகுறித்து இரு தரப்பிலும் எந்தச் சமிக்ஞையும் இல்லை. இந்த நிலையில்தான் டெண்டுல்கர், தோனிக்குப் பிறகு மிகப்பெரிய தொகைக்கு கோலியை `பூமா’ ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக எட்டு ஆண்டுகளுக்கு 110 கோடி ரூபாய் கொடுத்து கோலியை வளைத்துப்போட்டுள்ளது `பூமா’ காலணி நிறுவனம்.

Virat_kohli,_first_batsman_in_Test_history_to_smash_four_double-hundreds_in_four_successive_series_(20)_19546

அதாவது ஒவ்வோர் ஆண்டும் 12 – 14 கோடி ரூபாய் வரை அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதே நேரம் ஜெர்மனியைத் தலைமையிடமாகக்கொண்ட பூமா நிறுவனத்தின் விளம்பரங்களிலும் அவர்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும். பூமாவின் லோகோவை அவர் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பூமாவின் உலகளாவிய பிராண்ட் விளம்பரதாரராக தடகள வீரர் உசேன்போல்ட் உள்ளார். “பீலே, மாரடோனா போன்றோர் அணிந்த லோகோவை அணிவது எனக்கும் பெருமைதான்” என கோலியும் இந்த ஒப்பந்தம்குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

மேற்படி ‘பூமா’ ஒப்பந்தம் கையெழுத்தான அதே காலகட்டத்தில் தோனியுடனான 11 ஆண்டுகால பெப்சி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், அதை பெப்சி நிறுவனம் நீட்டிக்கவில்லை. கோலியை, பெப்சி அணுகியது. `நாடு முழுவதும் கோலா பானங்களுக்கு எதிரான மனநிலை இருக்கிறது’ என கோலி முதலில் ஒப்புக்கொள்ளவில்லை எனச் சொல்லப்பட்டது. பிறகு, வருடத்துக்கு நான்கு நாள்கள் பெப்சி நிறுவன விளம்பரச் செயல்பாடுகளுக்கு அவர் நாள்களை ஒதுக்கித்தர வேண்டும் என்ற விதிமுறையுடன் கோலியை ஒப்பந்தம் செய்தது பெப்சி. ஒரு நாளுக்கு ஐந்து கோடி ரூபாய் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு பெரிய தொகையை இந்தியாவின் எந்தப் பிரபலமும் வாங்கவில்லை. இதற்கு முன் அதிகபட்சமாக நடிகர்கள் ஷாரூக் கான், அமீர் கான் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோர் நாள் ஒன்றுக்கு தலா மூன்று முதல் மூன்றரைக் கோடி ரூபாய் வாங்கியுள்ளனர். இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும்விதமாக கோலிக்கு நாள் சம்பளமாக ஐந்து கோடி ரூபாய் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இவை தவிர, ஆடி கார்கள், ஜியோனி மொபைல், பூஸ்ட் பானம், டிஸ்ஸாட் வாட்ச்கள், கோல்கேட் பற்பசை என மொத்தம் 18 பிராண்டுகளுக்கு விளம்பரதாரராக உள்ளார் கோலி.

அவரின் விளையாட்டு கிராஃபைப்போலவே வருமானமும் ஏறுமுகமாக உள்ள நிலையில், கோலியின் ஆயுதமான கிரிக்கெட் பேட்டில் இருக்கும் `எம்.ஆர்.எஃப்’ என்ற வாசகத்துக்கான ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலியின் கிரிக்கெட் மட்டையில் தன் நிறுவன பெயர் இடம்பெற எந்த நிறுவனத்துக்குத்தான் கசக்கும். அதை ஒப்பந்தம் செய்ய பெரிய போட்டியே நிலவிய நிலையில், வெற்றிகரமாக மீண்டும் ‘எம்.ஆர்.எஃப்’ நிறுவனமே கோலியின் பேட்டில் இடம்பெறும் வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளது.

` `கிரிக்கெட்டின் கடவுள்’ என வர்ணிக்கப்படும் டெண்டுல்கர் – பிரெய்ன் லாரா போன்றோரின் பேட்களில் இடம்பெற்ற  பெயரான ‘எம்.ஆர்.எஃப்.’, இனி அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு கோலியின் பேட்டிலும் தொடர்ந்து இடம்பெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக அவருக்கு அளிக்கப்படும் தொகை 100 கோடி ரூபாய். இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு 100 கோடி விளம்பர கான்ட்ராக்ட்களைக் கையில் வைத்திருக்கிறார் இந்திய வீரர் கோலி.

இப்படியே போனால், டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்கிறாரோ இல்லையோ, அவர் இதுவரை விளம்பரங்களின் வாயிலாக ஈட்டிய வருமானத்தை அடுத்த இரண்டே ஆண்டுகளில் எட்டிவிடுவார் விராட் கோலி.

Comments

comments