seenu-ramaswamy-740x431 (1)

லிங்குசாமி தயாரிப்பில் விஜய்சேதுபதியை வைத்து  சீனு ராமசாமி இயக்கிய படம் – இடம் பொருள் ஏவல்.

2013 ல் தொடங்கப்பட்ட  இந்தப் படம் 2014ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கு முன் லிங்குசாமி இயக்கி தயாரித்து சூர்யா நடித்த அஞ்சான் படம் 2014 ஆகஸ்ட்  மாதம்  வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.

அதனால் பல கோடி கடனாளியானார் லிங்குசாமி.

பட்ட காலிலேயே படும் என்பதுபோல், கமல்ஹாசனை வைத்து லிங்குசாமி தயாரித்த உத்தமவில்லன் படம் 2015 மே  மாதம் வெளியானது.

இந்தப் படத்தை திரைக்குக் கொண்டு வருவதற்கே பல கோடி கடன் வாங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டார் லிங்குசாமி.

அதோடு உத்தமவில்லன் படமும் படு தோல்வியடைந்து, லிங்குசாமியை மேலும் கடனாளியாக்கியது.

அஞ்சான் படத்துக்கு முன்பு வெற்றிகரமான இயக்குநராக, வெற்றிப்படங்களின் தயாரிப்பாளராக விளங்கிய லிங்குசாமியின் சாம்ராஜ்யம் சரிவை சந்தித்தது.

இதனால் அவரது தயாரிப்பில் வளர்ந்து வந்த ரஜினி முருகன்,  இடம் பொருள் ஏவல்,  பாலாஜி சக்திவேல் இயக்கிய ரா..ரா.. ராஜசேகர், மற்றும்  பன்னீர் செல்வம் இயக்கிய படம் ஆகிய படங்கள் முடங்கிப்போயின.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒரு வழியாக கடந்த வருடம்  ரஜினி முருகன் வெளியாகிவிட, மற்ற படங்கள் மாட்டிக்கொண்டன.

இடையில் இடம் பொருள் ஏவல் படத்தை திரைக்குக் கொண்டு வர பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டார் லிங்குசாமி.

 

seenuramasamy-tweet1

வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டநிலையில் இடம் பொருள் ஏவல் படத்தை திரைக்குக் கொண்டு வர முடியவில்லை.

அதற்கான போராட்டங்களில் லிங்குசாமி தரப்பு இன்னமும் ஈடுபட்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி கடும் சிரமத்துக்குள்ளானார்.

பொருளாதார ரீதியிலும் நெருக்கடிக்குள்ளான அவருக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்து தர்மதுரையானார் விஜய்சேதுபதி.

இந்நிலையில், இடம் பொருள் எவல் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கள் என்று ட்விட்டரில் ஒரு ரசிகர் கேட்டுக்கொண்டதற்கு, “இடம் பொருள் ஏவல் படம் வெளியே வர வேண்டுமென்றால் ‘உத்தமவில்லன்’ திரு.கமல் அய்யாவும் அஞ்சான் திரு.சூர்யாவும் மனது வைத்தால் ஒருவேளை வெளிவரலாம்..” என்று பதில் அளித்திருக்கிறார் சீனுராமசாமி.

இந்த பதிலின் மூலம், அஞ்சானும், உத்தமவில்லனும்தான் என் குடியைக் கெடுத்துவிட்டார்கள் என்று தன் மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறார்.

Comments

comments