_18494

‘மொழி’, ‘சென்னை 28′ உள்ளிட்ட சில திரைப்படங்கள் வாயிலாக நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிரம்மானந்தம் தெலுங்கில் நம்பர் ஒன் நகைச்சுவை நடிகர். ஆச்சி மனோரமாவைப் போல நகைச்சுவை நடிகராகவே  இதுவரை  சுமார் 1000 படங்களுக்கும் மேலாக நடித்து முடித்து விட்டார். இந்தப் பெருமைக்காக இவரது பெயர் ‘கின்னஸ் சாதனைப் பட்டியலில்’ இடம் பெற்றிருக்கிறது.

அது மட்டுமல்ல; இவரது தற்போதைய சொத்து மதிப்பு 320 கோடிகளாம். டோலிவுட்டில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் மிகச் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் உச்சம் தொட்டவர் பிரம்மானந்தம். ஒரு காலகட்டத்தில் தமிழில் கவுண்டமணியைப் போல தெலுங்கில் பிரம்மானந்தம் இல்லாத திரைப்படங்களைக் காண்பதே அரிது எனும் நிலை இருந்தது.

இப்போதும் பிரம்மானந்தம் பரபரப்பாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஒருநாள் படப்பிடிப்புக்கான கால்ஷீட்டுக்கு அவர் பெறும் சம்பளம் 1 கோடி ரூபாய். இதைத் தவிர கோடிக்கணக்கில் வருமானம் பெற்றுத் தரக்கூடிய வகையிலான விவசாய நிலமும் அவரிடம் உண்டு. அதில் பிரம்மானந்தம் விவசாயமும் செய்து வருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனரான ஜந்தியாலா,  முதல் முறையாக ‘மொத்தப்பாய்’ எனும் மேடை நாடகத்தில் பிரம்மானந்தத்தின் நடிப்பைக் கண்டு வியந்து போனார். உடனே அவரை வரவழைத்துப் பேசிய ஜந்தியாலா, தனது திரைப்படமான ‘சந்தபாபாயில்’ பிரம்மானந்தத்தை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் பிரம்மானந்தத்தின் நகைச்சுவை நடிப்புக்கு பரவலாகப் பாராட்டு கிடைத்தது. அப்படித்தான் தொடங்கின பிரம்மானந்தத்தின் இன்றைய இலக்குக்காக வெற்றிப் படிகள்.

தற்போது பிரம்மானந்தத்திடம், Audi R8, Audi Q7, and Mercedes-Benz (Black) உள்ளிட்ட கார்கள் உள்ளன. சினிமா, அரசியல், விளையாட்டு எனப் பல்துறை பிரபலங்களின் பங்களாக்கள் அமைந்திருக்கும் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அவருக்குச் சொந்தமாக ஒரு பங்களா இருக்கிறது. தெலுங்குப் படங்கள் மட்டுமல்லாது தமிழிலும் தனக்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட பிறகே பிரம்மானந்தம் தனது ஒருநாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் என நிர்ணயித்தாராம். திறமை இருப்பவர்களை எத்தனை விலை கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ள திரையுலகம் தயங்காது என்பதற்கு மற்றுமொரு சாட்சி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்.

 

Comments

comments