அதிமுகவின் 3 அணிகளை சார்ந் தவர்களும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி விமர்சித்து வருவதால் கட்சிக்குள் மோதல் முற்றி யுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனி சாமி ஆகியோரின் தலைமையில் எம்எல்ஏக்களும், கட்சி நிர்வாகி களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், டெல்லி திஹார் சிறையில் இருந்து வந்தபிறகு தனியாக செயல்படத் தொடங்கியுள்ளார். அவருக்கும் சில எம்.பி., எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள அமைச்சர்களையும், ஓபிஎஸ் அணியினரையும் தினகரன் ஆதர வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட் பாளருக்கு அதிமுகவின் 3 அணி களும் அடுத்தடுத்து ஆதரவு தெரி வித்தன. சசிகலா அனுமதியுடன்

தான் அதிமுக (அம்மா) அணி யினர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்தார். அவரது கருத்துக்கு அதிமுக (அம்மா) கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக எம்பி.க்கள் அருண்மொழித்தேவன், அரி ஆகியோர் கூறும்போது, ‘‘சசிகலா அனுமதியுடன்தான் பாஜக வேட் பாளருக்கு ஆதரவு தெரிவித் தோம் என்று தம்பிதுரை கூறுவது அவரது சொந்தக் கருத்து. இது அதிமுகவின் கருத்தாக முடியாது. தமிழகத்தில் ஆட்சியையும், கட்சி யையும் முதல்வர் பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார்’’ என்றனர்.

ஆனால், டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் கூறும்போது, ‘‘குடியரசுத் தலை வர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சசிகலாவிடம் பிரதமர் மோடி கேட்டார். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதிமுகவில் தான்தோன்றித்தனமாக பேசு வோரை முதல்வர் தடுக்க வேண் டும். ஓரிரு மாதங்கள் தாமதம் ஆனாலும் இவர்களை எப்படி கிள்ளி ஏறிவது என எங்களுக்குத் தெரியும்’’ என தெரிவித்தார்.

இதற்கிடையே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக அம்மா கட்சி செய்தித் தொடர் பாளர் வைகைச்செல்வன் ஆகி யோரிடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டுள்ளது. தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யவில்லை என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. வைகைச்செல் வனும் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜேந் திர பாலாஜி கூறும்போது, ‘‘கூலிக் காக பேசும் கூலி பேச்சாளர்தான் வைகைச்செல்வன்’’ என்று கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலளித்து வைகைச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், ‘கூலிக்கு பேசுகிற பேச்சாளர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் திராவிட இயக்கத்தையே அமைச் சர் கொச்சைப்படுத்தியுள்ளார். வசவாளர்கள் வாழ்க என்பதுதான் திராவிட இயக்கத்தின் பெருந் தன்மை. அந்தப் பெருந்தன்மை யோடு ராஜேந்திர பாலாஜியை மன்னிக்கிறேன்’ என்று குறிப் பிட்டுள்ளார்.

இணைப்புக்கான சூழல்

சென்னை விமான நிலை யத்தில் நிருபர்களிடம் நேற்று பேசிய மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, ‘‘அதிமுக ஒன்றுபட வேண்டும், இந்த ஆட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் கட்சியில் உள்ள அனைவரின் கருத்தாகும். அதிமுகவை காப்பாற்றுவதும், ஒன்றுபடுத்துவதும்தான் எனது பணி. அதைத்தான் செய்துவரு கிறேன். எனவே, கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் களையப் பட வேண்டும். அதிமுகவின் இரு அணிகள் இணைவதற்கான சூழல் நன்றாகவே உள்ளது’’ என்றார். ஆனால், உசிலம்பட்டியில் நிருபர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை’’ என திட்டவட்டமாக தெரிவித் துள்ளார்.

அதிமுக அணிகள் இணைய வாய்ப்பே இல்லை: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

அதிமுக அணிகள் இனி இணைய வாய்ப்பே இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுகவில் பழனிசாமி அணியை யும், ஓ.பன்னீர்செல்வம் அணியையும் இணைப்பதற்கு, சமீபத்தில் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் மேற் கொண்ட முயற்சி முடியாமல் போகவே, பேச்சுவார்த்தை குழுவை ஓ.பன்னீர் செல்வம் கலைத்தார்.

இந்நிலையில் நேற்று உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது, கலைக்கப்பட்டதுதான். மீண்டும் இரு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை. ஜெயலலிதா இருந்தால் அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் என்ன முடிவு எடுப்பாரோ அந்த முடிவைத் தான் நாங்கள் எடுத்துள்ளோம். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் பதிலை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்பது ஸ்டாலினின் தனிப்பட்ட கருத்து” என்றார்.

இதைத் தொடர்ந்து, காரில் புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிலர் அவர் செல்லும் வழியில் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Comments

comments