_18494 (1)

2014 ல் வாக்குறுதி கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. சரியாக 2017 ல் நிறைவேற்றியும் விட்டார். யெஸ்… புஷ்கர் காயத்ரி தம்பதி இதற்கு முன் இயக்கிய ஓரம்போ, வ குவாட்டர் கட்டிங் இவ்விரு படங்களுக்கும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எத்தகையது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும், எட்டாம்ப்புல எடுத்த மார்க்கு பத்தாம்ப்புல மாறும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து இவர்களுக்கு படம் தருகிறார்கள் ஹீரோக்கள்.

விஜய் சேதுபதி அதுபோன்ற இலக்கணங்கள் எதற்குள்ளும் சிக்கிக் கொள்ளாத விந்தையான ஆள் அல்லவா? புஷ்கர் காயத்ரி இயக்கும் படத்தில் முழு அர்ப்பணிப்போடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இவரைப்போல படத்தில் இணைந்திருக்கும் இன்னொரு ஜாம்பவான் மாதவன்.

‘விக்ரம் வேதா’ என்ற இந்த படத்தின் டீஸரை ஷாருக்கானை  விட்டே வெளியிட வைத்த விதத்தில், மாதவன் இந்தப்படத்தை எந்தளவுக்கு நம்புகிறார் என்பதும் புரியும்.

விக்ரம் வேதா- பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேபில் நடைபெற்றது. ஹீரோக்களை பொத்துனாப்ல(?) பாதுகாக்கும் விதத்தில் கேரவேனை கொண்டு வந்து வெளியே நிறுத்தி குளுகுளுவென வைத்திருந்தார்கள் இவ்விருவரையும். (இதே லேபுக்குள் அருமையான ஏ.சி அறைகள் இருந்தும் தயாரிப்பாளருக்கு செலவு வைக்க வேண்டுமல்லவா?) சரி போகட்டும். விஜய் சேதுபதியின் பேச்சு அருமை-.

“மாதவனுடன் எனக்கு பழக்கமில்ல. இந்தப்படத்தின் ஷுட்டிங் ஆரம்பிக்கும் முதல் நாள் நான் அவருக்காக காத்திருந்தேன். எப்படியிருப்பாரோ? ஈகோயிஸ்ட்டா இருப்பாரா? முதல்ல எப்படி அவர்ட்ட பேசணும்? இப்படியெல்லாம் யோசித்து குழம்பிப் போயிருந்தேன். ஆனால் உள்ளே வந்தார் அவர். அதுவரைக்கும் இருந்த இருட்டெல்லாம் பளிச்சுன்னு வெளிச்சம் போட்ட மாதிரி காணாம போயிருச்சு. அவ்வளவு பாசமா, அவ்வளவு பிரண்ட்லியா இருந்தது அந்த முதல் சந்திப்பே. அதற்கப்புறம் ஒருமுறை கூட அவர்ட்டேயிருந்து ஈகோங்கற எதையும் நான் பார்க்கல” என்றார் விஜய் சேதுபதி.

கிட்டதட்ட இதே லெவலில் இருந்தது மாதவனின் பேச்சும். சம்பளத்தை வாங்குனோம், நடிச்சோம் என்று இல்லாமல் தான் நடிக்கும் படத்தில் உதவி இயக்குனர் போலவே எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொள்ளும் விஜய் சேதுபதி, படத்தில் இடம்பெற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் சிலரையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாராம்.

விஜய்சேதுபதி தேர்வு எப்போதும் வீண் போனதில்லை. இந்தப்படமாவது புஷ்கர் காயத்ரிக்கு லிஃப்ட் தரட்டும்!

Comments

comments