_18494 (1)

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது , மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காக்கப்படும், குண்டும் குழியுமான சாலைகள் செப்பனிடப்படும், வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தது பாஜக.

தேர்தலில் நாடே எதிர்பாராத அளவுக்கு அதிக இடங்களை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதல்வராக யார் அமரப் போகிறார் என்பதிலும் பல்வேறு ஊகங்களை உடைத்தெறிந்து, கட்சியின் எம்.பி.யான யோகி ஆதித்யநாத்தை அமரவைத்து பாஜக ஆச்சரியப்படுத்தியது.

அவர் முதல்வராக பதவியேற்று 100 நாட்கள் நெருங்க உள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் முழுமை யாக நிறைவேற்றப்படவில்லை. பாதிக்கும் மேற்பட்ட பணிகள் அப்படியே வேகமெடுக்காமல் உள்ளன. இதனால் அவரது ஆட்சி நிர்வாகத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக முக்கிய தேர்தல் வாக்குறுதியான வேளாண் கடன் தள்ளுபடி அம்மாநில நிதித் துறைக்கு பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இதனால் ஏற்படும் உடனடி நிதிச் சுமை ரூ.36,369 கோடி. இதை சமாளிக்கும் வழிகளை காண நிதித் துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இது தவிர 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த ரூ.34,000 கோடி நிதி தேவைப் படுகிறது. இதுவும், மாநில நிதித் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்றி யுள்ளது. பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலை போன்ற மெகா திட்டங்களுக்கு நிதியை ஏற்பாடு செய்வதும் சவால் மிக்கதாக உள்ளது.

ஜூன் 15-க்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளும் செப்பனிடப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் 63 சதவீத பணிகள் மட்டுமே இதுவரை நிறைவடைந்துள்ளது. கான்பூரில் உள்ள சாலைகளின் நிலை படு மோசமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியின் நிலையும் பரிதாப கரமானதாகவே இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் மாணவர் களுக்கு இலவச லேப்டாப் வழங் கப்படும் என தெரிவிக்கப்பட் டிருந்தது. இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

சட்டம் ஒழுங்கு நிலையும் முந்தைய ஆட்சியில் இருந்ததை போலவே நீடிக்கிறது. சாதி, மத மோதல்களும் ஆங்காங்கே நடந்து வருவது, யோகி ஆதித்யநாத் அரசுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. இதை சரி செய்வதற் காகவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்களின் ஆதரவை ஈர்க்கவும் அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

சமாஜ்வாதி ஆட்சியின்போது மாநிலத்தில் காட்டாட்சி நடந்ததால், அதை சரி செய்வதற்கு கூடுதல் அவகாசம் பிடிக்கும் என முதல் வரும், அமைச்சரவை சகாக்களும் ஒருசேர தெரிவித்து மக்களைச் சமாளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஜூலை 15-ம் தேதிக்குள் நகர் பகுதி உள்ளாட்சி அமைப்பு தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயமும் ஆதித்யநாத்துக்கு காத்திருக் கிறது. தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.ஆனால் தற்போதைக்கு இந்த தேர்தலை அரசு நிறுத்தி வைத் துள்ளது.

அதேசமயம் 100 நாள் சாதனையை விளக்கும் வகை யிலான ஆவணங்களைத் தயாரிக் கும் பணிகளில் அரசு மும்முரமாக உள்ளது. இந்த சூழலில் பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கூறி வருவது, யோகி ஆதித்யநாத் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரு மான மாயாவதியும், ‘‘பாஜக ஆட்சி யில் தலித்துகள், இதர பிற்படுத் தப்பட்டோர் மட்டுமின்றி பிராமணர்கள் கூட அட்டூழியங் களை சந்தித்து வருகின்றனர். சத்ரியர்களுக்கு மட்டுமே ஆதித்யநாத் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது’’ என குற்றம்சாட்டியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறும்போது, ‘‘இந்த அரசு உருப்படியாக எந்த பணியையும் செய்யவில்லை. முந்தைய ஆட்சியில் நடந்த தவறு களை விசாரிக்கவே மும்முரம் காட்டி வருகிறது’’ என்றார்.

Comments

comments