patti

உங்களுடையது கூட்டுக்குடித்தனமா? தனிக்குடித்தனமா?

மனதுக்குள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு, வாசிப்பை மேலே தொடருங்கள்

நேற்று ஜூன் 15 ஆம் தேதி… உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15- ம் தேதியை ‘முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக’ அனுசரித்து வருகிறது.

இதுவரை நாமறிந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மட்டுமே இந்த சமூகமும், ஊடகங்களும் அதிகமும் பேசியிருக்கின்றன. முதியோர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற அளவில் மட்டுமே அவர்களின் நலனைப் பற்றிய செய்திகள் எப்போதாவது நாளிதழ்களிலும், செய்தி ஊடகங்களிலும் இடம் பெறும். ஆனால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஈடாக இந்த சமூகத்தில் முதியோரும் அனுதினமும் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் நாம் அதைப் பெரும்பாலும் அலட்சியப்படுத்துகிறோம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக் கணக்கீட்டின் படி உலகம் முழுவதும் இன்றைய தேதிக்கு 44% முதியோர்கள் தினம், தினம் ஏதாவது ஒருவகையில் அவமதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்!

உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும், பொருள் சார்ந்தும், உதாசீனப் படுத்துதல் மூலமாகவும், பாலியல் பலாத்கார ரீதியாகவும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப் படும் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையக் காணோம். எப்படிக் குறையும்? ஏனென்றால் முதியோர்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் வழக்குகளாகப் பதியப்படுவதில்லை. மன்னிப்பு, சமரசம், என்ற பெயரிட்டு அவை பெரும்பாலும் இந்த சமூகத்தின் பண்பாட்டுக் கிணற்றில் மூடி மறைக்கப் பட்டு விடுகின்றன. அப்படியான சூழல்களில் முதியோர்கள் பால் அக்கறையுள்ள எவரேனும் சென்று முதியோர் நலன் குறித்தும், அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எவரிடமும் விளக்கப் போனால் அதைக் காது கொடுத்து கேட்பதற்கு கூட இங்கே யாருக்கும் நேரமில்லை.

ஆக… நடுக்கடலில் மழை பொழிந்து என்ன பயன்? எனவே முதியோர் நலன் குறித்த விழிப்புணர்வை வயது வந்தவர்களிடத்தில் நிகழ்த்துவதை விட சிறுவர்களிடத்தில் நிகழ்த்தினால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அந்த அடிப்படையில், இப்படி ஒரு நல்நோக்கத்தோடு நேற்று காலை 8.30 மணியளவில் சென்னை மேல்அயனம்பாக்கத்தில் இயங்கி வரும் ‘வேலம்மாள் வித்யாலயா பள்ளியில்’,  ’முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்’ அனுசரிக்கப்பட்டது. 5 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நீதியரசர் ராஜேஸ்வரன் அவர்களும், முதியோர் நல மருத்துவரான டாக்டர் வ.செ.நடராஜன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

chief_guest11

நிகழ்வில் முதியோர் அவமதிக்கப் படும் விதம் குறித்து, டாக்டர் வ.செ.நடராஜன் அவர்கள் பேசுகையில்; ஒவ்வொருவருடைய குடும்பச் சூழலைப் பொறுத்து இந்த சமூகத்தில்… உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும், அவமதிப்புக்கு உள்ளாகும் முதியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைவதற்கான வழியைக் காணோம். காரணம், இன்றைய தலைமுறையினரிடையே பெருகி வரும் “தான் மட்டும் சந்தோசமாக இருந்தால் போதும்” எனும் மனநிலையும், முதியோர்களிடையே பெருகி வரும் ‘நான் உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்!’ எனும் எண்ணத்தின் அடிப்படையிலான அதிகப்படியான எதிர்பார்ப்புகளும் தான் என்றார். இந்த இரண்டு தலைமுறையினரும் தங்களது இந்த சுபாவங்களை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும் சமுதாயத்தில் முதியோர் அவமதிப்பின் சதவிகிதம் பெருமளவில் குறைந்து விடும் என்றும் அவர் கூறினார்.

இது ஒரு வகையில் மிகச் சரியான அணுகுமுறையே! ஏனெனில் இரு தலைமுறையினருக்கிடையிலான இந்தப் பிரச்னையின் அடிவேர் இது தான். இளையவர்கள் தங்களது வீட்டிலிருக்கும் முதியோருக்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை… வீட்டுக்குள் நுழையும் போதும், வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் மட்டுமாவது முதியவர்களிடத்தில் பாசமாக, அனுசரணையாக இரண்டொரு வார்த்தை பேசி நமது அக மனதில் அவர்கள் பாலிருக்கும் நேசத்தை உணர்த்தினாலும் கூட போதும். இருவருக்குமிடையிலான இடைவெளி படிப்படியாகக் குறைந்து ஒருநாள் காணாமலே போய் விடும். அது மட்டுமல்ல பெரியவர்களும் இன்றைய அவசர உலகில், எத்தனை அதிகமாகச் சம்பாதித்த போதும் பற்றாக்குறையாகி விடக் கூடிய, நெருக்கடி வாழ்வு முறையைக் கொண்ட தமது வாரிசுகளின் நிலைமையைப் பற்றி கொஞ்சமேனும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இருபுறமும் நிகழ வேண்டிய இந்தப் பரஸ்பர புரிதல் மட்டுமே முதியோருக்கான அவமதிப்புகளைக் களையக் கூடிய முழு முதல் சிகிச்சை…  என்பதை டாக்டர் நடராஜன் அவர்களின் உரை மூலமாக நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

டாக்டரைத் தொடர்ந்து முதியோர் நலன் குறித்தும், அவர்கள் அவமதிக்கப்படும் விதம் குறித்தும் மாணவர்களிடையே உரையாற்றிய நீதியரசர் ராஜேஸ்வரன்  ஒரு குட்டிக் கதை சொன்னார்.

நீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை…

ஒரு வீட்டில் முதியவர் ஒருவர், தன் மகனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு மகன், மருமகள் இருவரும் வேலைக்குச் செல்லக் கூடியவர்கள். தாத்தாவுக்கு மூன்று பேரக் குழந்தைகள் இருந்தனர். தினமும் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் மருமகள், மாமானாருக்கு சாப்பாட்டைப் பரிமாற நேரமின்றி பீங்கான் கிண்ணங்களில் போட்டு மூடி வைத்து விட்டுச் செல்வது வழக்கம். வயோதிகத்தால் ஓரிருமுறை தாத்தா, தான் உணவுண்ணும் பீங்கான் தட்டுகளை கை தவறி கீழே போட்டு உடைத்து விடுகிறார். மாலை வீடு திரும்பும் மகன், மனைவி வந்தால் என்ன சொல்வாளோ? என்ற சஞ்சலத்தில்; அப்பா, வயதானால் உணவு இருக்கும் தட்டைக் கூடவா உங்களால் சரியாகப் பிடித்து உண்ண முடியாமல் போய் விடும்? இனிமேல் உங்களுக்குப் பீங்கான் தட்டு வேண்டாம், இந்தாருங்கள் இனிமேல்  இந்த மரக்கோப்பையில் உண்ணுங்கள் என்று புதிதாக ஒரு மரக்கோப்பையை வாங்கி வந்து கொடுத்து விட்டுப் போய் விடுகிறார். மகனது உதாசீனத்தை தாங்க முடியாத தாத்தா அதற்குப் பின்பு அந்தக் குடும்பத்தில் எவரிடமும் பேசக் கூடப் பயந்து போய்… வாய் மூடி மெளனியாகி தனியறைக்குள் தஞ்சமடைந்து விடுகிறார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தாத்தாவின் பேரன்கள். சில நாட்களுக்குப் பின், தந்தை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும் போது, அவரது கடைக்குட்டிப் பையன் வாசலில் அமர்ந்து ஒரு மரக்கோப்பையை செதுக்கிக் கொண்டிருக்கும் காட்சியைக் காண்கிறார். வீட்டுப் பாடம் செய்யும் நேரத்தில் இந்தக் குழந்தைக்கு எதற்கு இந்த வீண் வேலை? என்று யோசித்துக் கொண்டே சிறுவனை அழைத்து; இப்போது ஏன் இந்த மரக்கோப்பையை செதுக்கிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பையன் வயதான பிறகு தேவைப்படும் அப்பா என்கிறான். தந்தையோ அவன் தனது தாத்தாவைப் பற்றித் தான் கூறுகிறான் என்ற நினைப்பில், தாத்தாவுக்குத் தான் ஏற்கனவே ஒரு மரக்கோப்பை இருக்கிறதே, பிறகு இது வேறு எதற்கு என்கிறார். அப்போது அப்பாவின் முகத்தை ஏறிட்டு நோக்கும் அந்தச் சிறுவன்…. நான் இதை தாத்தாவிற்காக செய்யவில்லை… உங்களுக்காகத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் நாளை தாத்தா போல ஆகும் போது உங்களுக்கும் இது தேவைப்படுமில்லையா? என்கிறான். மகனின் பதிலில் விக்கித்துப் போன தந்தை, பேச வகையின்றி திகைத்து நிற்கிறார்.

இப்படித்தான் இருக்கிறது இந்தத் தலைமுறை. இன்று நாம் நம் பெற்றோர்களுக்குச் செய்யும் அதே புறக்கணிப்புகள் நாளை நமக்கும் வரும் என்பதை உணரக் கூட நம்மில் பெரும்பாலானோருக்கு நேரமிருப்பதில்லை. ஒருமுறை டெல்லியில் இருந்து ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதி இருந்தார். டெல்லியில் நல்ல வேலையில் இருந்து, ஒரே மகனை நன்கு படிக்க வைத்து, அவனை அருமையான வேலையிலும் அமர வைத்து அழகு பார்த்தவர் அந்தப் பெரியவர். தனது சுய சம்பாத்தியத்தில் தான் கட்டிய வீட்டையும் மகன் மீதிருந்த பற்றாலும், நம்பிக்கையாலும் அவன் பேரிலேயே அவர் எழுதி வைக்க.. தொடங்கியது அஷ்டமத்துச் சனி… மகன் இப்போது பெரியவரை வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். இவரால் மகனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. இயலாமையும், கோபமும் துரத்த இலக்கில்லாமல் ரயில் ஏறி சென்னை வந்து சென்ட்ரலில் இறங்கியவர்…அடுத்து எங்கே செல்வது என்று திகைத்துப் போய் எனக்கு கடிதம் எழுதி இருந்தார். இப்போது நான் என்ன செய்வது, எங்கே செல்வது? இப்படிப் பட்ட முதியவர்களுக்கு என்ன தான் வழி? என்று கேட்டு எனக்கு கடிதம் எழுதி இருந்த முதியவரைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நான் இருந்த போது எனக்கு வந்த கடிதங்களில் இப்படிப் பட்ட கடிதங்களும் நிறைய இருந்தன. அவர்களுக்கெல்லாம் உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் பெற்றோர், முதியோர் பேணுதல் மற்றும் நலச்சட்டம் 2007. அதன்படி முதியோரை திக்கற்றவர்களாகத் தவிக்க விடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் முதியோர் விசயத்தில் சட்டங்களைக் காட்டிலும் மக்கள் விழிப்புணர்வும், கலந்தாலோசனைகளுமே மிகுந்த பயனைத் தரக்கூடும். என்றார் முன்னாள் நீதிபதியான ராஜேஸ்வரன்.

அவர் குறிப்பிட்டது போல இன்று நாம் நமது பெற்றோர்களுக்குச் செய்யும் புறக்கணிப்புகளே, நாளை நமக்கும் திரும்பக் கிடைக்கவிருக்கின்றன என்ற உண்மையை உணராததால் உருவானது தான் தாத்தா, பாட்டிகள் இல்லாத வீடுகளைக் கொண்ட ‘நியூக்ளியர் ஃபேமிலி’ கலாச்சாரம். இதனால் நாம் இழந்தவை கடுமையான தலைவலிக்கு அவசரத்துக்கு தடவிக் கொள்ளும் ஜண்டுபாம் போன்ற அருமையான நிவாரணம் தரக் கூடிய முன் நமது வீட்டுப் பெரியவர்களின் முன் அனுபவப் பாடங்களை, பகிர்வுகளை. இன்றைக்கு தனியாக வாழும் தாய்மார்கள் குழந்தை வளர்ப்பில் என்ன சந்தேகம் வந்தாலும் உடனடியாக சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அழைப்பது சொந்தப் பாட்டிகளை அல்ல… கூகுள் அத்தையையும், வாட்ஸ் அப் மாமாக்களையும் தான். அவர்களோ தேவைக்கு அதிகமான சந்தேக நிவர்த்திகளை பக்கம், பக்கமாக அள்ளி வழங்கி சந்தேகங்களைப் போக்குவதை விடவும் மேலதிக சந்தேகங்களைத் தூண்டுபவர்களாகத் தான் எப்போதும் இருக்கிறார்கள். இதையெல்லாம் தீர்ப்பதற்கான ஒரே வழி மனமாற்றம் மட்டுமே!

உங்களது பெற்றோரை உங்கள் வீட்டில் உடன் வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும் கூட; அவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அடிக்கடி சந்திக்கவும், மனம் விட்டுப் பேசவும் மறக்காதீர்கள், மறுக்காதீர்கள். ஒரு தலைமுறை அனுபவங்களைக் கொண்ட பழுத்த அனுபவசாலிகளான அவர்களை இந்தத் தலைமுறை உலகைப் பற்றி உனக்கென்ன தெரியும்? என்று வெகு எளிதாக உதாசீனப் படுத்தி விடாதீர்கள். பெரும்பாலான முதியவர்கள் பேரன், பேத்திகளிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்களது வாழ்வில் இரண்டாம் கல்விப் பருவமான இதில் அவர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்த பேரன், பேத்திகள் தயங்கத் தேவையில்லை. முதியவர்கள் நம்மிடம் எப்போதும் எதிர்பார்ப்பது நமது வளமான வாழ்வை உடனிருந்து காணும் வாய்ப்பை மட்டும் தான். அதை அவர்களுக்கு வழங்க மறுத்தால் நஷ்டம் நமக்குத் தான். எல்லா வீடுகளிலும் இப்போது குழந்தைகள் தான் முடிவெடுக்கத் தூண்டும் இடத்தில் இருப்பவர்கள் என்பதால் இந்த நிகழ்ச்சி 5 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே ‘முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் விதத்தில் அவர்களை மட்டுமே பங்கேற்கச் செய்து நடத்தப்பட்டது. கலந்து கொண்ட மாணவர்களில் கணிசமானவர்களுக்கு தங்களது தாத்தா, பாட்டியைச் சந்திக்க வேண்டும், அவர்களுடன் விடுமுறைகளைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் கூட, அது  இந்த நிகழ்வின் வெற்றி என்றே நாம் கருதலாம்.

நிகழ்வின் இறுதியில்; முதியோர் நல மருத்துவரான டாக்டர் வ.செ.நடராஜன் அவர்கள், தான் சிறப்பு பங்கேற்பாளராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதியோர் நல அறக்கட்டளையின் சார்பாக, சமுதாயத்தில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை களைய கூட்டு உறுதிமொழி  எடுத்துக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தினார். இந்த உறுதிமொழியை தமது பள்ளி, கல்லூரி அல்லது பணிபுரியும் நிறுவனங்களில் மாணவர்களும், அலுவலர்களும் யார் வேண்டுமானாலும் அவரவர் பணியிடங்களில் கூட்டு உறுதிமொழியாக பிரகடனப் படுத்தலாம். என்பதற்கேற்ப நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நிற்க, நீதியரசர் ராஜேஸ்வரன் அந்த உறுதிமொழியைச் சொல்லச் சொல்ல மாணவர்களும், ஆசிரியர்களும் அதை அப்படியே திரும்பச் சொன்னது நெகிழ்வான காட்சியாக இருந்தது.

இது தான் அந்த உறுதிமொழி;

  • முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் – இவை வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ – எந்த உருவில் வந்தாலும் – அவற்றைக் களைவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறுகிறேன்.
  • ஒரு முதியவர் கொடுமைப் படுத்தப் படுவதை முளையைலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன் என உருதி கூறுகிரேன்.
  • மேலும், அவர்களுடைய அனைத்டு வகையான தேவைகளுக்கும் – அதாவது உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், அங்கீகாரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

இந்த உறுதிமொழியோடு முதியோர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்களும் அந்நிகழ்வில் அனைவருக்கும் அறியத் தரப்பட்டன.

முதியோர்களுக்கான ஹெல்ப் லைன் எண்கள்…

உதவி வேண்டும் முதியோர்கள் சென்னை எனில், 1253 என்ற எண்களிலும், சென்னை தவிர்த்த தமிழகப் பகுதிகள் எனில் 1800 800 1253 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு முதியோர்களுக்குத் தேவையான சட்டம் மற்றூம் மருத்துவ உதவி, முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப் படுவதற்குத் தேவையான விவரங்கள், முதியோர் பாதுகாப்புச் சட்டம் 2007 பற்றிய தகவல்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.

எக்ஸ்க்ளூசிவ் முதியோர் திரைப்படங்கள்…

இத்தனை நீளமான கட்டுரையை வாசிக்கப் பொறுமை இல்லாவிட்டால் குறைந்த பட்சம் உங்கள் வீட்டு முதியோர்களைப் பற்றி மனதார உணர்ந்து கொள்ள இதில் பரிந்துரைக்கப் பட்டிருக்கும் மூன்று திரைப்படங்களையாவது நிச்சயம் பாருங்கள்…

  1. பவர் பாண்டி (தமிழ்)
  2. மிதுனம் (தெலுங்கு)
  3. சதமானம் பவதி (தெலுங்கு) 

தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘பவர் பாண்டி’ திரைப்படம், முதியோர்களின் மன வலியை வாழைப்பழ ஊசியாக நாசூக்காகச் சொல்லிச் சென்றது. பவர் பாண்டியான ராஜ்கிரணை தனது முதல் காதலியைத் தேடி பயணிக்கச் செய்தது எது? குடும்பத்தில் மகனது புறக்கணிப்பு தானே! முடிந்தால் படம்பார்த்து விட்டு யோசியுங்கள்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்குள் ஒளிந்திருக்கும் மிகச் சிறப்பான நடிகரை வெளிக்கொணர்ந்த திரைப்படங்களுள் நிச்சயம் ‘மிதுனத்துக்கும்’ முக்கிய இடமிருக்கப் போகிறது. லக்‌ஷ்மியும், எஸ்.பி.பியும் வயதான தம்பதிகளாக வாழ்ந்திருக்கும் இந்தப் படம் இலவசமாக யூ டியூபில் காணக் கிடைக்கிறது.

பவர் பாண்டி தவிர மற்ற இரண்டும் தெலுங்குப் படங்களாக இருந்தாலும், நம்மவர்களைப் பொறுத்த வரை நல்ல சினிமாக்களுக்கு மொழி ஒரு தடையே இல்லை… ஆதியில் தூர்தர்ஷனில் சனிக்கிழமை மாலையின் இந்திப் படங்களை விடாமல் பார்த்து ரசித்தவர்கள் நாம். அந்த வகையில் நம் வீட்டு தாத்தா, பாட்டிகளின் சாயலில் திரையில் நமது அபிமான நட்சத்திரங்களை உலவி விட்டிருக்கும் இந்த இரண்டு திரைப்படங்களுமே முதியோர்களின் மன வலியைப் பற்றி முற்றாக அறிந்து கொள்ள உதவும் படங்கள் எனலாம்.

Comments

comments