NTLRG_20170614102530438877

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் கானா பாடகரான கானா பாலா போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். “சாலை விதிகளை மதிச்சு பாரு… சாவே இல்லாம நிலைச்சு வாழு….” என்று தொடங்கும் இந்த பாடலில் மஞ்சள் கோட்டை தாண்டாதீங்க, வெள்ளை கோட்டை மீறாதீங்க, சிக்னலை மதிச்சு நில்லுங்க, குடித்து விட்டு வண்டி ஓட்டாதீங்க, ஹெல்மெட் அணியுங்க, சீட் பெல்ட் போடுங்க என பல சாலை விதிகளை பாடலாக பாடியுள்ளார். அதற்கான காட்சிகளை இணைத்து வீடியோவாகவும் தயாரித்துள்ளனர்.

இந்த விழிப்புணர்வு பாடல் கேசட்டை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று வெளியிட்டார். இதனை கானா பாலா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சில் அந்த பாடலை கானா பாலா பாடினார். இந்த பாடல் திரையரங்குகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

பின்னர் கானா பாலா நிருபர்களிடம் கூறியதாவது: நான் இனிமேல் சினிமாவில் பாடுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். பணத்துக்காக இனி பாடமாட்டேன். இதுபோன்று மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களுக்காக மட்டுமே பாடுவேன். அதையும் இலவசமாக பாடி கொடுப்பேன். மாஞ்சா நூல் ஆபத்தை விளக்கியும் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். விரைவில் அதனை வெளியிடுவேன் என்றார். கானா பாலா சென்னை ஐகோர்ட்டில் வக்கிலாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

comments