kazhivu_17532

மக்கு அவர்களை நன்கு தெரியும். தெருக்களில் அவர்களைக் கடந்து சென்று இருப்போம். காக்கிச் சீருடையில், அவர்கள் தங்கள் பணியைச் செய்துகொண்டிருக்கும்போது, நாம் மூக்கைப் பொத்திக்கொண்டு வேகமாக நகர்ந்து சென்றிருப்போம்… ஏன் பல நேரம் நாமேகூட அவர்களைப் பணியமர்த்தி இருப்போம். ஆனால், என்றாவது யோசித்து இருப்போமா… அவர்களும் நம்மைப்போல சக மனிதர்கள்தான், நமக்கு இருப்பது போன்ற கனவுகள் அவர்களுக்கும் இருக்கின்றன, அவர்களது கனவுகளிலிருந்து விரியும் உலகத்தில், மல்லிகைத் தோட்டங்களும், நறுமண வாசனையும் உண்டென்று…?

ஹூம்… இன்னும் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று சொல்லவில்லைதானே…? நம்முடைய மலக்குழியில் இறங்கி தினம் தினம் செத்துப் பிழைத்து, திடீரென ஒருநாள் நிரந்தரமாகச் செத்துப்போகும் துப்புரவு பணியாளர்களைப் பற்றித்தான்!

“விபத்துகள் அல்ல… படுகொலைகள்”

மலக்குழி மரணங்களை இது மற்றொரு விபத்து என்று சுலபமாக கடந்து சென்றுவிடுகிறோம். உண்மையில், இவை எதுவும் விபத்துகள் இல்லை…. கொலைகள்! ஆம், நீங்களும் நானும் இந்த அரசும் சேர்ந்து செய்யும் பச்சைப் படுகொலைகள் அவை. ‘இப்பவெல்லாம் யார் சார் மலம் அள்ளுறா…?’ என்று நினைத்து நாம் உண்மையை நம்ப மறுக்கிறோம். ஒரு கறுப்பு நிறப் பாலித்தீன் பையில், நம் வீட்டின் அத்தனைக் கழிவுகளையும் அள்ளித் தூர வீசுவதுபோல,  உண்மையும் எங்கோ தூர வீசப்பட்டு தட்டுத்தடுமாறி சிராய்ப்புடன் எழுந்து நிற்கிறது. துப்புரவு வேலை செய்யும் யாரிடம் வேண்டுமானாலும் நீங்கள் உரையாடிப் பாருங்கள்; உண்மை தெரியும்… புரியும். இன்றும் நம் துப்புரவுப் பணியாளர் சகோதரர்கள் மனிதக் கழிவுகளை கைகளால்தான் அகற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று.

மனிதக் கழிவுகள் என்பதைக் கடந்து, துப்புரவுப் பணியே பாதுகாப்பற்றதாகத்தான் இருக்கிறது. நீங்கள் அவர்கள் மீது கவலைகொள்ள வேண்டும் என்பதற்காகவெல்லாம் இதைச் சொல்லவில்லை. அரசு தரும் புள்ளிவிபரங்களே பதற வைப்பவையாகத்தான் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில், சென்னையில் மட்டும் பாதாளச் சாக்கடைப் பணியின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 10 என்கிறது புள்ளிவிபரம். ஆனால், தினமும் செய்தித்தாள் படிக்கும் அனைவருக்கும் தெரியும்… உண்மை கணக்கு இதற்கும் மேல் என்று. பெருவெள்ளத்திலிருந்து  சென்னையை மீட்டு நமக்குத் தந்தவர்கள் இந்தக் கதாநாயகர்கள்தான். ஆனால், வரலாற்றின் பக்கங்கள் எதுவும் இவர்களைக் கொண்டாடப்போவதும் இல்லை… அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கப்போவதும் இல்லை.

“உயிரையாவாது மிச்சம் வையுங்கள்”

manjal_2_tamil_final_17384உண்மையில், ”எங்களை யாரும் கொண்டாட வேண்டாம்… அங்கீகரிக்கக்கூட வேண்டாம்… எங்கள் உயிரை மட்டுமாவது எங்களுக்கு மிச்சம் வையுங்களேன்” என்றுதான் கெஞ்சுகிறார்கள் அவர்கள். விவசாயம், ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் என்றால் பதைபதைக்கும் தமிழர் மனம், கக்கூஸ் – மலக்குழிச் சாவு என்றால் மட்டும் பதற மறுக்கிறது… வீதிக்கு வந்து போராட மறுக்கிறது? நம் மனதுக்குள் நமக்கே தெரியாமல் எங்கோ படிந்திருக்கும் சாதிய துவேஷம்தான் இதற்கான அடிப்படைக் காரணமா…?

ஆம் என்கிறார், ஜெய் பீம் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி. ‘சாதியை ஒழிப்போம்… கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்’ என்றக் கோஷத்தை முன்வைத்து ஒரு தொடர் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கும் இவர், “இன்று துப்புரவுப் பணியில் இருக்கும் அனைவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  இவர்களில் பலர் உங்களைப்போல, என்னைப்போல பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு நன்றாகப் படிக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால், அங்கு அவர்கள் சந்தித்த சாதியப் பாகுபாடுதான் பள்ளியிலிருந்து வெளியேறக் காரணமாக இருந்திருக்கிறது. இந்தத் தொழிலுக்கு வரவும் காரணமாக இருந்திருக்கிறது. அப்படியானால், இந்தச் சாதியக் கட்டமைப்புதானே, ஒரு சாரார் இந்தத் தொழிலில் ஈடுப்படக் காரணமாக இருந்திருக்கிறது? அதை உடைக்காமல்… எப்படி மலக்குழிச் சாவுகளை ஒழிக்க முடியும்…?” என்று கேள்வி எழுப்புகிறவர் தொடர்ந்து,

”மனித மலத்தை மனிதர்களே அகற்றும் அவலத்தை முற்றாக ஒழித்துவிட முடியுமா? துப்புரவுத் தொழிலை முழுவதுமாக இயந்திர மயமாக்கிவிட முடியுமா… இது சாத்தியமா… என்றெல்லாம் மலைக்க வேண்டாம். நாம் நம் காலத்தில்தானே, ‘சதி’-யை ஒழித்திருக்கிறோம், கை ரிக்‌ஷாவை இல்லாமல் ஆக்கி இருக்கிறோம். சரியானத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக நிச்சயம் இந்த அவலத்தையும் ஒழிக்க முடியும்” என்கிறார்.

‘சாதியும்… விக்கிபீடியாவும்’

துப்புரவுத் தொழிலில், சாதியின் பங்கு குறித்து ஜெயராணி முன் வைத்திருக்கும் வாதம் கூர்மையானது.  Manual Scavenging என்று விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தால், ‘அது ஒரு சாரார் செய்யும் தொழில்’ என்று விளக்கம் தருகிறது. அது பொதுப் புத்தியை வெளிப்படுத்துகிறது. இதுதான்… இதுமட்டும்தான்… ‘கையால் மலம் அள்ளுவது ஒரு சமூகப் பிரச்னை, சமூக அநீதி’ என்று நாம் உணராமல் இருக்கக் காரணம்.

இதை உணர்த்த… பொது சமூகத்துடன் இதுகுறித்து விரிவான உரையாடலை நிகழ்த்த எனப் பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது ஜெய் பீம் மன்றமும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும். அதன் ஒரு பகுதியாக வருகிற 30-ம் தேதி, ‘மஞ்சள்’ என்ற தலைப்பில்,  ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ நூலைத் தழுவி நாடகத்தையும் அரங்கேற்ற இருக்கின்றன.

நம் சம காலத்தின் பெருமைகளாக, விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு என எதனை வேண்டுமானாலும் நாம் முன்வைக்கலாம். ஆனால், ‘இன்னும் நம் சமூகம் மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களைத்தான் பயன்படுத்துகிறது’ என்ற ஒற்றைச் செயலால், அத்தனை சாதனைகளையும் பெருமைகளையும் இல்லாமல் செய்துவிடுகிறது.

ஆம், நாம் மனித மலத்தை மனிதனே அகற்றும் அவலத்துக்கு ஒரு முடிவு கட்டுவோம்… கழிவகற்ற கருவி கொள்வோம்!

Comments

comments