[

காஞ்சிபுரம் : ஏழை, எளிய மக்களுக்கு, குறைந்த விலையில் உணவு வழங்க, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட, ‘அம்மா’ உணவகங்களில், காஞ்சிபுரத்தில், சாப்பாடு ருசி இல்லாததால் மக்கள் வருகை குறைந்து வருகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றாக, ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில், பசி போக்குவதற்காக அம்மா உணவகங்கள் ஏற்படுத்தினார்.நகராட்சி, மாநகராட்சிகளில் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டம், ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது நடுத்தர ஓட்டல்களில் ஒரு வேலை சாப்பாடு, குறைந்தது, 65 ரூபாய் வரை விற்கப்படுகிறது.தினசரி கூலி வேலை செய்பவர்கள், வாங்கும் கூலியில் பாதி சாப்பாட்டிற்கு செலவு செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

அவர்களுக்கு உதவும் வகையில், இங்கு, ஒரு இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய்,சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான செலவை அந்தந்த நகராட்சி செய்து வருகிறது.காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனை அருகிலும், விளக்கடி கோவில் தெருவிலும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன.ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இட்லி, 1,200, தயிர் சாதம், சாம்பார் சாதம் தலா, 300 பேருக்கு என, கணக்கிட்டு வழங்கினர்.குறைந்த விலையில் சாப்பாடு வழங்கி வருவதால் நகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. விளக்கடி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் தற்போது, காலையில், 800 இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் தலா,100 பேருக்கு வழங்கும்படி சமைக்கின்றனர். அதையும் சாப்பிட மக்கள் வருவதில்லை; காரணம், சாப்பாடு ருசியில்லை என, சாப்பிடுவோர் குறை கூறுகின்றனர்.
தற்போது, 5 கிலோ அரிசிக்கு தயிர் சாதத்திற்கு,2 லிட்டர் தயிர் வழங்கப்படுகிறது. அதனால் தயிர் சாதம் ருசி கிடைப்பதில்லை. அதே போல் சாம்பார் சாதத்திற்கு, பருப்பு மற்றும் எண்ணெய் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அதனால் வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் தற்போது வருதில்லை. சில நாட்களில் சாப்பாடு, இட்லி விற்காமல் வீணாக கொட்ட வேண்டியநிலை ஏற்படுகிறது. இப்படியே போனால் இழுத்துமூட வேண்டிய நிலை ஏற்படும்.அம்மா உணவக பணியாளர்கள், காஞ்சிபுரம்

Comments

comments