20.03.2017

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் அனைத்து விநியோக உரிமைகளும் விற்றுவிட்டதால், தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

3 விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இதில் ‘மதுரை மைக்கேல்’ மற்றும் ‘அஸ்வின் தாத்தா’ ஆகியவற்றின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட திட்டமிட்டு, முதல் பாகம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

இந்நிலையில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் விநியோக வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ், மதுரை உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு உரிமையை செந்தில், செங்கல்பட்டு உரிமையை லலித், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உரிமையை மணிகண்டன் மற்றும் சேலம் உரிமையை செல்வராஜ் ஆகியோர் கைப்பற்றியுள்ளார்கள்.

கோயம்புத்தூர் உரிமையை தவிர, இதர உரிமைகள் அனைத்துமே விற்றுவிட்டதால் தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். நாளை முதல் சென்னையில் சிம்புவின் அறிமுகப் பாடல் படப்பிடிப்பை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் ‘மதுரை மைக்கேல்’ மற்றும் ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய தோற்றங்கள் மட்டும் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தின் தயாரிப்பைத் தொடங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Comments

comments