001_14046

பெயரை சொன்னால் தரம் எளிதில் விளங்கும்! இப்படியொரு வார்த்தையை தங்க விரும்பிகளின் மனதில் விதையாக அல்ல, நேரடியாக மரமாகவே நட்டுவிட்ட NAC ஜுவல்லரி நிறுவனம், சினிமாவையும் ஒரு கை பார்ப்பது என்று களம் இறங்கிவிட்டது. நல்லவேளை… “எங்க பேரன் பார்க்க நல்லாயிருக்கான். அதனால் அவனே ஹீரோவா நடிக்கப் போறான்” என்று பெட்ரோல் குண்டுகளை வீசவில்லை.

தமிழ்சினிமாவின் பின் தயாரிப்பு பணிக்கான ஸ்டூடியோ ஒன்றை துவங்கியிருக்கிறது NAC. அதுவும் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில். பெயர் KnacK ஸ்டூடியோஸ். அங்கு நிறுவப்பட்டிருக்கும் எல்லா மெஷின்களும் தரத்தில் நம்பர் ஒன். எட்டு மணி நேரம் ரெண்டரிங் ஆகுற மெமரியை கூட, 45 நிமிடத்தில் முடித்துக் கொடுக்கிற அளவுக்கு சுறுசுறுப்பான மிஷின்கள். மிஷின்கள் இப்படியென்றால் அவற்றை ஆபரேட் செய்கிற வல்லுனர்கள் எப்படியிருக்க வேண்டும்? இன்டஸ்ட்ரியில் இருக்கும் தரமான டெக்னீஷியன்களை பொறுக்கிப் போட்டு வேலையை ஆரம்பித்துவிட்டது KnacK ஸ்டூடியோஸ்.

kalyanam

சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த துவக்க விழாவில், நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த பத்மநாபனின் பேச்சில் அவ்வளவு சுவாரஸ்யம். ருத்ரம்மாதேவி படத்தில் அனுஷ்கா போட்டிருந்த அவ்வளவு தங்க நகையும் நாங்க சப்ளை பண்ணினதுதான். அதுக்காக சென்னை வந்திருந்தாங்க. எங்க நகையோட அவங்க நிற்கும்போது நானும் பக்கத்தில்தான் நின்றேன். ஒருத்தராவது என்னை போட்டோ எடுக்கணுமே? அந்த அனுஷ்காவைதான் வளைச்சு வளைச்சு எடுத்தாங்க என்று சொல்லிவிட்டு சிரித்தவர், ஏனிந்த ஸ்டூடியோ என்பதற்காக கொடுத்த விளக்கமும் சிற்றுரையும் அவ்வளவு பிரமாதம்! இவரது மகன் ஆனந்த ராமானுஜம்தான் KnacK ஸ்டூடியோஸ் நிர்வாகத்தை முற்று முழுதாக கவனிக்கப் போகிறவர்.

பேச்சில் இனிப்பை மட்டுமே கலந்த குடும்பம் NAC. இந்த குடும்பம் இன்டஸ்ட்ரியில் நட்புக்கு பெயர் போன குட்லக் கல்யாணத்தையும் ஒரு குதிரையாக பூட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறது. வேகத்துக்கு பஞ்சமா என்ன? கோடம்பாக்கமே கிளம்பி KnacK ஸ்டூடியோசில் ஐக்கியமானால் அதில் ஒன்றும் ஆச்சர்யம் இருக்கப் போவதில்லை.

பின் குறிப்பு- இந்த விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் சிவகுமார், சூரியா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, ராஜசேகர் பாண்டியன், இயக்குனர்கள் பிரியதர்ஷன், ஐ.வி.சசி, ஞான ராஜசேகரன், விக்னேஷ் சிவன், ரவி ராகவேந்திரா, ஷோபா சந்திரசேகரன், லக்‌ஷ்மி சிவகுமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Comments

comments