ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் 7 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஜூலை மாதம் முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மத்திய, மாநில அரசுக்கு சில கோரிக்கைகளை விடுத்திருந்தது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக 7 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிதியமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வணிக வரித்துரை அமைச்சர் வீரமணி ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். மேலும், அக்கடிதத்தை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

அக்கடிதத்தில் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருப்பதாவது:

திரைப்படம் என்பது ஒரு கலைவடிவம். கலை நுட்பத்தோடு செய்யப்படும் ஒரு படைப்பிலக்கியம். அதற்கான சந்தைப்படுத்துதல் பிரத்தியேகமானது. ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க பெரும் பொருட் செலவு நிகழ்ந்தாலும், அதனுடைய வாணிபம் என்பது ஒரு தயாரிப்பாளர் அதற்கான ஒரு விநியோகஸ்தரை வெற்றிகரமாக கண்டுபிடிப்பதிலும், அவரும் இவரைப் போல திரையரங்குதாரர்களைக் வெற்றிகரமாக கண்டுபிடிப்பதிலும் உள்ளது. திரையரங்குகளில் ஒரு திரைப்படம் ஓடும்போது, அதற்கு கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவை வைத்துத்தான் அதற்கான வசூல் கிடைக்கிறது. அந்த வகையில், படத்திற்கான விற்பனைத் தொகை தலைகீழ் முறையில் திரைப்படம் திரையரங்குகளில் திரையிட்ட பின்னரே கிடைக்கிறது. திரையிடப்படும் படங்களில் சுமார் 6 முதல் 7 சதவீதம் வரை தான் வெற்றி பெறுகின்றன. ஒருமுறை மட்டுமே படம் தயாரித்து மற்றும் ஒருமுறை மட்டுமே படம் தயாரித்து மற்றும் ஒருமுறை மட்டுமே படம் விநியோகராக இருந்து விட்டு வெளியேறுகின்றவர்கள் ஏராளம். இதன் காரணமாக, திரைப்படத் தயாரிப்பாளருக்குக் கிடைக்க வேண்டிய பணம் சரிவரக் கிடைப்பதில்லை. இந்தக் காரணத்தினால் ஒப்பந்தத் தொகையை வைத்து வரியைக் கணக்கிடும் முறை திரைப்படத் துறையைப் பொறுத்த வரையில் சரிவர வேலை செய்வதில்லை.

தற்போது திரைப்படத் துறை எதிர்நோக்குகின்ற இந்த இக்கட்டான சூழ்நிலையில், பின்வரும் கருத்துக்களை தமிழக நிதியமைச்சரின் பார்வைக்காகவும், இவற்றைக் கனிவுடன் பரிசீலித்து நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தவிருகின்ற சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் இடம் பெறுவதற்கு வகை செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

* இன்றைய தேதியில், திரைப்படத்தின் திரையரங்கு விநியோகம் சேவை வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு அல்லாத திரைப்பட விநியோகமும், அது நிரந்தரமானதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் திரைப்படங்களுக்கும் வாட் வரிவிதிப்பிலிருந்து விலக்களித்துள்ளது. மத்திய சென்சார் போர்டால், யு சான்றிதழ் வழங்கப்பட்டு அந்தத் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் இருந்தால் அவை கேளிக்கை வரியிலிருந்து விலக்களிக்கக் கோராலம். எனவே, தற்போது உள்ளபடி மத்திய அரசின் சேவை வரி விலக்களிப்பும், மாநில அரசின் வாட் மற்றும் கேளிக்கை வரி விலக்களிக்கும் முறையும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வருகின்ற சரக்கு மற்றும் சேவை சரி சட்டத்திலேயும் இந்த நடைமுறை தொடர வேண்டும் எனவும் கோருகிறோம்.

* திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறுகின்ற தொகைக்கு, தற்போதுள்ள நடைமுறைப்படி அனைத்து நடிகர்களும் நாட்டியக் கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் சேவை வரி கட்டியாக வேண்டும். அதே சமயம், திரைப்படத்தினுடைய உரிமையை மாற்றுவதற்கு அதாவது விற்பதற்குச் சேவை வரியிலிருந்து விலக்கு உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர் தனது திரைப்படத்தை விற்பதனால் வரும் தொகைக்கு சேவை வரி கிடையாது. அதனால் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கட்டுகின்ற சேவை வரிக்கான வரவு திரைப்பட தயாரிப்பாளருக்குக் கிடைப்பதில்லை. இவை ஒரு திரைப்படத் தயாரிப்புச் செலவில் கணிசமான பகுதியாக இருப்பதால், திரைப்படத் தயாரிப்பின் ஒட்டு மொத்த செலவினம் கூடுகிறது. எனவே, திரைப்படத் தயாரிப்புக்கு உதவிடும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

* அந்த வகையில் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிப்பதில் ஏதேனும் சிரமம் இருக்குமாயின், அவர்களுக்கு தற்போது இருக்கும் வரி விலக்கிற்கான உச்ச வரம்பினை கணிசமாக உயர்த்தித் தருமாறும் கேட்டுக் கொள்கிறோம். அதனால், திரைப்படத் தயாரிப்பாளர்களான எங்கட்கு நிதிச் சுமை குறையும்.

* ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு தேவைப்படும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், உபகரணங்கள், வாகனங்கள், ஹோட்டல்கள் ஆகியவை வேறு மாநிலங்களில் இருந்து வாடகைக்கு எடுக்கப்படும். ஏனென்றால், எங்கு திரைப்படத் தயாரிப்பின் தலைமையிடம் உள்ளதோ, அங்கு மட்டுமே அனைத்தும் கிடைப்பதில்லை. எனவே, எங்களது கோரிக்கை என்னவென்றால் வரிவிதிக்கையில் எங்கு தயாரிப்பாளரின் விலாசம் உள்ளதோ, மாநிலங்களுக்குகிடையேயான வரிவிதிப்பு IGST என்ற முறையில் நடைபெற வேண்டும்.

அதுபோலவே, ஒரு திரைப்படத் தயாரிப்பு அலுவலகத்தின் தலைமையிடம் ஒரு மாநிலத்திலும், தொழில் வசதிக்காகவும் ஒருங்கிணைப்பிற்காகவும் அந்தத் தலைமையிடம் பல மாநிலங்களில் கிளை அலுவலகங்கள் வைத்திருக்கும். அதே மாநிலத்திலும் கிளை அலுவலகம் வைத்திருக்கலாம். அது போன்ற இடங்களில், கிளை அலுவலகம் தலைமை அலுவலகத்திற்கு செய்த சேவைகளை இருவேறு அமைப்புகளிடையே நிகழ்ந்த சேவைகளாகக் கருதக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

* மாநில மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்கள், மாநில மொழி அல்லாத திரைப்படங்களோடோ மற்றும் அந்நிய மொழி திரைப்படங்களுடனோ போட்டி போட இயலாது. எனவே, மாநில மொழித் திரைப்படங்களுக்கு மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். மாநில மொழி அல்லாத திரைப்படங்களுக்கு குறைவான சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டணமும், அதை விட சற்று அதிகமாக அந்நிய மொழித் திரைப்படங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டணமும் விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

* திரைப்படத்தின் வெற்றி, தோல்வி என்பது அனுமானிக்க முடியாத நிலையில் உள்ளதால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மத்திய சென்சார் போர்டின் சான்றிதழுக்கு ஏற்ப ஒவ்வொரு வகைப் பிரிவு திரைப்படத்துக்கும் ஒரு குறிப்பிட சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டணத்தை விதிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

* இறுதியான கோரிக்கை, தற்பொழுது வாட் வரியானது, மாநில அரசால் நிர்வாகிக்கப்படுகிறது. அதனால் கிடைக்கும் வருவாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. எதிர்வரும் GST நிர்வாகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லும் வருவாய் எதுவும் தடுக்கப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் கேளிகை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயாகும். எனவே, தற்போதுள்ள நடைமுறைச் சட்டங்களில் எங்கெங்கு மாற்றங்கள் செய்ய வேண்டுமோ, அங்கு தமிழக அரசானது மாற்றங்கள் செய்து வசூலிக்கப்படும் கேளிக்கை வரியானது.

அப்படியே உள்ளாட்சி அமைப்புகளைச் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். அதன் மூலம் கேளிக்கை வரியின் ந்ரிவாகம் மாநில அரசின் ஆளுமைக்கு உள்ளேயே இருக்கும். GST நிர்வாகப் பிடியில் அவை செல்லாமல் பார்த்துக் கொள்ளவும், இயலும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments

comments