அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். எதிர்ப்பு இல்லாவிட்டால் வளர முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். இன்றுடன் ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவடைகிறது.

முதல்நாள் சந்திப்பின்போது ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களை கொண்டுவந்தது. அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய ரஜினிகாந்த், “ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்தை கடைப்பிடித்தீர்கள். இதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். ரசிகர்களை சந்திக்கும் இந்த விழாவை ஏற்பாடு செய்து, அதை சரியாக நிர்வாகித்த சுதாகருக்கும், நண்பர் முரளி பிரசாத்துக்கும், சிவராமகிருஷ்ணன், பாபா மற்றும் அனைத்து ராகவேந்திர மண்டபத்தின் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மண்டபத்துக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கும் சிறு தொந்தரவு இருந்திருக்கும், இருப்பினும் ஒத்துழைப்பு தந்த அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜிம் பாய்ஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்கவே முடியாது. அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிக்கை சகோதரர்கள் என்னை விரட்டு விரட்டு என விரட்டி, ஏனென்றால் அவர்களுடைய மேலதிகாரிகள் அவர்களை விரட்டுகிறார்கள். இவர்கள் நம்மை விரட்டுகிறார்கள். நான் அவர்களை தவிர்க்க சென்னை முழுக்க சுற்றிவிட்டேன். ஆனால் முடியவில்லை. 4- 5வார்த்தைகள் பேசினாலே சர்ச்சையாகி விடுகிறது.இன்னும் பேசிக் கொண்டே இருந்தால் சர்ச்சையாகி கொண்டே இருக்கும். ஆகையால் நான் அவர்களை தவிர்த்ததை தவறாக நினைக்க வேண்டாம். நான் சொல்ல வேண்டியதை இங்கே சொல்லிவிடுகிறென். மற்றபடி நேரம் வரும் போது சொல்கிறேன்.

முதல் நாள் சந்திப்பில், நான் பேசியது எனது ரசிகர்களுக்காக சொன்னது. நான் அரசியலுக்கு வந்தால் எப்படியிருக்க வேண்டும் என்று பேசியது இவ்வளவு பெரிய வாதம், விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதற்கு எதிர்ப்பு, ஆதரவு இருக்கலாம், எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். ஆனால், சிலர் சமூகவலைத்தளத்தில் எழுதும் போது திட்டி எழுதுகிறார்கள். அது எனக்கு கஷ்டமாக இல்லை. ஏன் வார்த்தைகளை உபயோகிப்பதில் தமிழ் மக்கள் கீழ்த்தரமாக போய்விட்டார்கள் என வருத்தப்பட்டேன்.

ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் இருந்தேன். மீதம் 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். உங்க கூடவே வளர்ந்தேன். மராட்டியக்காரனாகவோ, கன்னடக் காரனாகவோ வந்திருந்தால் கூட என்னை ஆதரித்து பெயர், புகழ், பணம் என அள்ளிக் கொடுத்து, நீங்கள் தான் என்னை தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். ஆகவே, நான் பச்சைத்தமிழன். என்னுடைய மூதாதையர்கள் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்களை என்பதை சொல்லியிருக்கிறேன். இங்கியிருந்து வெளியே போ என்று சொல்லித் தூக்கிப் போட்டால் நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்தவொரு மாநிலத்துக்கும் போய் விழமாட்டேன். தமிழ் மக்கள், நல்ல மக்கள், நல்ல உள்ளங்கள் இருக்கிற பூமியில் இருந்தால் இருக்க வேண்டும். இல்லையென்றால் சித்தர்கள் இருக்கின்ற இமயமலையில் இருக்க வேண்டும்.

என்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள், நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழ வைத்தவர்கள் நன்றாக இருக்கக் கூடாதா?. என்னை மாதிரி அவர்களும் நன்றாக இருக்கக் கூடாதா என்று நினைப்பில் என்ன தவறு இருக்கிறது என தெரியவில்லை. மற்றவர்கள் இருக்கிறார்கள், நீ என்ன என கேட்கிறார்கள். ஆமாம் இருக்கிறார்கள். தளபதி மு.க.ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்வார். அவரை மட்டும் சுதந்திரமாக இருக்கவிட்டால் நல்ல செயல்படுவார். ஆனால் சுதந்திரமாக இருக்கவிட மாட்டிக்கிறார்கள் என்று சொல்வார். அன்புமணி ராமதாஸ் நல்ல படித்தவர். நல்ல விஷயம் தெரிந்தவர். ரொம்ப மார்டனாக சிந்திக்க கூடியவர். உலகம் முழுக்க சுற்றியுள்ளதால், நல்ல திட்டங்களை எல்லாம் வைத்துள்ளார். திருமாவளவன், தலித் மக்களுக்கு ஆதரவு கொடுத்து நல்ல உழைத்து வருபவர். சீமான், போராளி. அவருடைய கருத்துகளைக் கேட்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன். இதே மாதிரி தேசிய கட்சிகளில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அனைவரும் இருந்தாலும் ஜனநாயகம் கெட்டுப் போய் இருக்கிறதே. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மனஒட்டமே மாறி இருக்கிறதே. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்கள் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும். அது அனைவருமே சேர்ந்து செய்ய வேண்டியது. சமூகவலைத்தளங்களில் பேசுவதைப் பார்த்து எனது ரசிகர்கள் யாரும் வருத்தமோ, கோபமோ படவேண்டாம். எதிர்ப்பு இருந்தால் மட்டுமே நாம் வளர முடியும்.

ஒரு செடி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் குழி தோண்ட வேண்டும். அதில் மண், உரம் எல்லாம் போட்டு விதையைப் போட்டு மூடிவிடுகிறோம். மூடியவுடன் நல்ல அழுத்தி அமுக்குவோம். ஏனென்றால் அது வளர வேண்டும் என்பதற்காக மட்டும். ஆகையால் இந்த அவதூறுகள், திட்டுகள் எல்லாமே நமக்கு உரம், மண் மாதிரி. நிறைய திட்டுகள் இருந்தால் மட்டுமே நாம் இன்னும் வளர முடியும். அவர்கள் நமக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

ஒருமுறை புத்தர் தனது சிஷ்யர்களுடன் பயணம் போய் கொண்டிருந்தார். அப்போது நிறையப் பேர் வழிமறித்து பயங்கரமாக திட்டுகிறார்கள். அவ்வளவு திட்டியும் புத்தர் அமைதியாக நின்று சிரித்துக் கொண்டே இருந்தார். குருவே அமைதியாக இருந்ததால், சீடர்களும் பேசவில்லை. திட்டிமுடித்துப் போன பிறகு, “என்ன குருவே. அவ்வளவு திட்டுகிறார்கள். ஆனால், நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களே” என்று கேட்டார்கள். அவர்கள் திட்டிட்டு கொட்டுவிட்டு போய்விட்டார்கள். அதை நான் எடுத்துக் கொள்ளவில்லையே. அதையும் அவர்களே கொண்டு போய்விட்டார்கள் என்றார் புத்தார்.

பழைய காலத்தில் ராஜாக்களிடம் படை பலமிருக்கும். லட்சகணக்கில் இல்லாமல் அவர்களால் எவ்வளவு வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு இருக்கும். போர் என வரும் போது அனைத்து ஆண்மக்களும் இணைந்து போய்விடுவார்கள். அது வரைக்கும் ஆண் மக்கள் அவர்களுடைய வேலைகளை, கடமைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். வீர விளையாட்டுகளை வைத்ததே அவர்களையும் வீரர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காக தான். ஜல்லிக்கட்டு, கம்பு சண்டை, கபடி, குஸ்தி உள்ளிட்ட விளையாட்டுகளை எல்லாம் ஆண்மக்கள் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கியவை தான். போர் என வரும் போது, அனைவருமே மண்ணுக்காக களமிறங்கி போராடுவார்கள். அந்த மாதிரி எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளை செய்துக் கொண்டே இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான். நன்றி” என்று பேசினார் ரஜினி.

 

 

Comments

comments