ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் சென்னை காவல்துறை ஆணையரிடம் ராஜசேகரன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

காவல்துறை ஆணையரிடம் ராஜசேகரன் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது:

“’கரிகாலன்’ தலைப்பு, கதையின் மூலக்கரு, பாடல்கள் ஆகியன நீதிவழுவாத தமிழ் அரசர் கரிகாலச் சோழனின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் அக்காலத்திலே நாட்டு மக்களுக்கு செய்த ’அறச்செயல்’, ’வீரச்செயல்’ போன்றவற்றை மையப்படுத்தி கதாபாத்திரத்தின் நாயகனாக ரஜினிகாந்த் அவர்களை வைத்து இந்த திரைப்படத்தை வெளியிடுவதே என் லட்சியமாக கொண்டிருந்தேன்.

1995, 1996ல் பலமுறை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்துக்குச் சென்று அன்றைய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணாவிடம் ’கரிகாலன்’ தலைப்புக் கதை பற்றி கூறினேன். மேலும், அவரின் உதவியுடன் ரஜினிகாந்த் இல்லத்துக்குச் சென்று ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்த போது பிறகு பேசலாம் என்று சொல்லி புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டார்.

ஏப்ரல் 1996-ல் கே.ராஜசேகர் (எ) கே.எஸ்.நாகராஜா என்கிற நான் பி.ஆர்.ஓ நெல்லை சுந்தரராஜன் ஏற்பாட்டின் பேரில், என்னுடைய படைப்பான ‘மயிலேகுயிலே’ இசை வெளியீட்டு விழா சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட மோகினி பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ‘கரிகாலன்’, ‘உடன்பிறவாதங்கச்சி’ ஆகிய படத்தலைப்புகளை வெளியிட்டேன்.

கரிகாலன் என்ற தலைப்பு கதையின் மூலக்கரு முழுவதும் என்னுடைய உருவாக்கம். கரிகாலன் தலைப்பு மற்றும் கதையை சில்வர் லைன் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் விக்ரம் அவர்களை வைத்துப் படத்தை தொடங்கி காட்சிகள் வெளியானதை எதிர்த்து உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள சிவில் கோர்ட்டில் வழங்கு தொடரப்பட்டு படத்தை மேற்கொண்டு எடுக்க நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து என்னுடைய கரிகாலன் திரைக்கதையை பல சினிமா நிறுவனங்களின் தயாரிப்பாளர்களிடமும் சொல்லிவந்தேன். இந்நிலையில் பல நாளிதழ்களில் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தனுஷ் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் ரஞ்சித் படத்தை இயக்கப் போவதாகவும் அந்த படத்தின் பெயர் ’காலா கரிகாலன்’ என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்து தீராத மன உளைச்சல் அடைந்துள்ளேன். என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் கதையின் மூலக்கருவினையும் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி ’மறுவடிவமைப்பு செய்து ரஜினிகாந்த் அவர்களை வைத்து படத்தை தொடங்கி உள்ளதால் காவல்துறை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Comments

comments