சினிமாக்கள் பார்த்துப் பார்த்து… பித்தம் தலைக்கேறி… சித்தம் கலங்கி… மோன நிலையில் எழுதிய கட்டுரைதான் இது! இதைப் படித்துவிட்டு, எனக்கு மட்டும்தான் இந்த எண்ணம் தோன்றுகிறதா இல்லை உங்களுக்கும் இதெல்லாம் தோணுதான்னு உங்க கருத்துகளைப் பகிருங்க மக்களே!

ஹாலிவுட் சினிமா :

 

ஹாலிவுட் சினிமா

படம் ஆரம்பிச்சதும் ஒரு முரட்டு மிருகம் ஊரையே சூரையாடிகிட்டு இருக்கும். அந்த சீனை அப்படியே கட் பண்ணா, அடுத்த நாள் காலையில அடிச்ச சரக்கின் ஹேங் ஓவரில் ‘நான் இப்போ எங்க இருக்கேன்?’ என்றபடி எழுந்திருப்பார் ஹீரோ. இப்படி ஆகாவழியாய் இருக்கும் நம்ம அழுக்கு ஹீரோ, எப்படி அந்த ஆபத்தான அசைன்மென்ட்டினை அசால்ட் செய்கிறார் என்பதுதான், அடுத்து காட்சிகளாய் ஸ்க்ரீனில் ஓடும். நடுநடுவே ‘எல்லாரும் ஓடுங்க… அது நம்மளைத் தாக்க வருது?’-னும், ‘எல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க!’-னும், தமிழ் டப்பிங் டயலாக்குள் நம் செவிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இந்த மாதிரிப் படங்களை நல்லா கூர்ந்து கவனிச்சீங்கன்னா… நாலஞ்சு மொக்கைப் பசங்க இருக்குற கேங்ல ஒரே ஒரு கருப்பினத்தைச் சேர்ந்த ஆள் இருப்பார். ஒட்டுமொத்த படத்திலுமே அவர் மட்டும்தான் என்டர்டெயின்மென்ட் செய்வார். அதுவும் அவருக்கு டப்பிங் கொடுக்கும் ஆள், கலாய் கவுன்டர்களில் பி.எச்.டி-யே முடித்திருப்பார். அது மட்டுமில்லாமல் பின்னாடி நடக்கப் போற நல்லது கெட்டது எல்லாத்தையும் முன்னாடியே கணிச்சு சொல்லி, கடைசியில அகாலமா உயிரை விட்டிருப்பார். ஹீரோவும், ஹீரோயினும் எப்படியோ தப்பிச்சு வந்தா, ‘இதுக்கு அதுவே பரவாயில்ல’ என சொல்லும்படி, அதைவிட திகிலாய் பெரிய பிரச்னைகளில் மாட்டுவது போல் க்ளைமேக்ஸ் சீனில் காட்டி, இரண்டாவது பாகத்துக்கு அடி போட்டு படத்தை முடித்திருப்பார்கள். டைரக்டர் குசும்புக்காரன் பார்ட் டூ-க்கு அடி போடுறான். டைரக்டர் ஷங்கருக்கே சவால் விடும் இது போன்ற படங்களை டால்பி எஃப்பெக்ட்டில் தியேட்டர்களில் பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். இல்லையென்றால் காமெடி படம் பார்த்த ஃபீலிங்தான் கிடைக்கும். ஒரு சில பல்பு வாங்குன படங்களைப் பார்த்து புலம்புனா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. படத்துக்குப் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் கூகுள் பண்ணிட்டுப் போங்க பாஸ்.

இந்திய சினிமாக்கள் :

இந்தியன் சினிமா

என்ன பாஸ் இந்த டாபிக்கைப் பார்த்ததும் கொட்டாவி விட்றீங்களா? நம்ம இந்திய சினிமாக்கள்லயும் நிறைய நல்ல படங்கள் இருக்கு. ஆனால் என்னதான் உலக சினிமா ரேஞ்சுக்கு படம் எடுத்திருந்தாலும், முதல் நாள் முதல் ஷோவில் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ற பழக்கம்தான் இன்னும் குறையாம இருக்கு. அது மட்டுமில்லாம, பவர்ஸ்டார் பன்ச் டயலாக் பேசுறது, சண்டைக் காட்சிகளில் எக்கசக்க தக்காளிச் சட்னி தெறிக்கிறது, ஹீரோக்கள் கயிறு கட்டி பறந்து பறந்து சண்டை போட்றது, அதிரடி ஸ்டார்கள் அடிக்கிற அடியில… அடி வாங்கியவன் தாய்ப்பாலை கக்கறது, ஹீரோ-ஹீரோயின் மரத்தை சுற்றி டூயட் பாடுறது, கழட்டிவிட்ட பெண்ணைப் பற்றி டாஸ்மாக்கில் சூப் சாங் பாடுறதுனு எல்லாமே கண்டிப்பாக இருக்கும். இந்திய சினிமாவில் பாலிவுட் தனி ஏரியா. தாராவியோ… அந்தேரியோ… அங்கேதான் ஏழையும் இருப்பான்… டானும் இருப்பான். காதலிக்கும் பெண்ணைத் தேடி சொந்த நாட்டை விட்டு… ஏன் கிரகம் விட்டெல்லாம் கூட போவார்கள். முக்கியமாக காதலியோட பிரச்னைகளைத் தன் பிரச்னையாக நினைக்கும் நம் ஹீரோக்களுக்கு, கொலைகள் கூட அசால்ட் மேட்டர் தான். ஒரே மாதிரி கதையுள்ள படங்களுக்குப் பஞ்சமே இருக்காது. சினிமாவுல மசாலா இருக்கலாம், ஆனா மசாலாவே சினிமாவா இருந்தா என்ன பண்றது மக்களே! பேய் படங்களில் அரண்மனை வீடு, பெரிய குடும்பம் கண்டிப்பாக உண்டு. கமர்ஷியல் சண்டைப் படமாக இருந்தால் நாலு சுமோ பறப்பது நிச்சயம். கரன்ட்டு பாக்ஸ்கள் வெடித்துச் சிதறும். மொக்கை ஹீரோவுக்கு ரெண்டு ஹீரோயின் இருந்தா கண்டிப்பா அது நம்ம அக்கட தேசத்து டோலிவுட் சினிமா. உலகிலேயே அதிக க்ரைம் இன்வெஸ்டிகேட்டிங் பண்ணிய போலீஸ் கேரள போலீஸ் தானோ! என்று சந்தேகம் வரும்படியான படங்களை எடுப்பது மலையாள சினிமா ஸ்டைல். ஒரு கொலை, அதைத் துப்பறிய வரும் கன்னம் பெருத்த போலீஸ், நான்கைந்து சந்தேகக் குற்றவாளிகள், சம்பந்தமே இல்லாமல் ஐந்தாவதாக வந்து மாட்டும் கொலையாளி போன்றவை மலையாள சினிமாவுக்கே உள்ள ஸ்டைல். சத்யஜித் ரேகிட்ட சத்தியம் வாங்கினதுபோல இன்னும் அவர் ஸ்டைலிலேயே படம் எடுக்குறதை வழக்கமா வெச்சிருக்காங்க பெங்காளி சினிமா இயக்குநர்கள். ப்ளீஸ் பாஸ்… இந்த ரே ஃபீவரிலிருந்து கொஞ்சம் வெளியே வாங்க.

ஈரான் சினிமாக்கள் :

ஈரான் சினிமா

ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை கொண்டவை தான் ஈரான் சினிமாக்கள். டைனிங் டேபிளில் சாப்பிடும் காட்சியில் வெளியேறி, நாம் லன்ச் முடித்துவிட்டுத் திரும்பினாலும், சினிமாவில் அதே ரொட்டியை மென்று தின்று கொண்டிருப்பார்கள். பாலைவனச் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் நாயகனை, லாங் ஷாட்டில் குறைந்தது 2 நிமிடங்களாவது காட்டி பொறுமையை சோதிப்பார்கள். நிறுத்தி நிதானமாக ஸ்டாண்ட் போடுவதை ஒரு நிமிடமும், ஃபோக்ஸ் கம்பியை ஒரு 5 நிமிடமும் காட்டி ரத்தக்கொதிப்பை ஏற்றுவார்கள். ஆனாலும், அழகழகான குழந்தைகளும், பார்க்குபடியான டீசன்ட்டான கதையமைப்பும் கொண்ட படங்கள் எடுக்கும் வழக்கம், ஈரான் சினிமாவுக்கு இருப்பதால் ஜொள்ளர்களுக்கு நோ என்ட்ரி. டயலாக்குள் அதிகம் இல்லாமல் காட்சிகளை வைத்தே கதைளைச் சொல்வதால், நீங்கள் எவர்க்ரீன் பாலுமகேந்திரா படம் பார்த்த ஃபீல், ஒவ்வொரு முறையும் வரும். என்ன நான் சொல்றது!

கொரியன் சினிமாக்கள் :

கொரியன் சினிமா

கொரியன் சினிமா என்பதற்குப் பதில் கொடூர சினிமா என்றே பெயர் வைத்திருக்கலாம். கொலை செய்வதையோ, பழி வாங்குவதையோ கிரியேட்டிவ்வாகக் காட்டுவதில் கொரியன் சினிமாவை அடித்துக்கொள்ள முடியாது. இவ்வளவு ஏன்… தற்கொலை செய்வதாய் காட்சி இருந்தால் கூட கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வகையில், பயங்கர டெரராய் இருக்கும். காய்ச்சலோடு இருக்கும் போது மொட்டை மாடியில், மொட்டை அடித்துக் கொண்டு வெயிலில் உட்கார்ந்த ஃபீல் இந்தக் கொரியன் படங்களைப் பார்க்கும்போது ஏற்படும். காமெடி திரைப்படங்களும் எடுப்பார்கள்தான். ஆனால் அதிலும் கோடாரிகள் பறக்கும். கொஞ்சம் தவறினால் நீங்கள் பார்க்கும் டி.வி-யையே உடைத்துக் கொண்டு, அந்தக் கோடாரி உங்கள் மீது விழும் பேராபத்து இருக்கிறது. இன்றைய தேதியில் புதிய தமிழ் இயக்குநர்கள் அனைவருக்கும் அமுதசுரபியாய் இருப்பது இந்த கொரியன் சினிமாக்கள்தான். தட் “தரையில பார்த்ததெல்லாம் தமிழ் சினிமாவுல திரையில வருது” மொமன்ட்.

பிரெஞ்ச், ஸ்கான்டினேவியன், ஸ்பானிஷ், போலந்து சினிமாக்களை, வீட்டில் வைத்து குடும்பமாய் உட்கார்ந்து சாமி சத்தியமாய் பார்க்கவே முடியாது. காதல் கோட்டை போன்ற கதையம்சம் இருக்கும் படமாக இருந்தாலும் சரி, அதில் ஹீரோயின் அஜால் குஜாலாகதான் வந்து அட்ரஸ் கேட்பார்.

சைனீஸ், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் சினிமாக்கள் :

சைனீஸ் சினிமா

பெரும்பாலும் இவை எல்லாமே தற்காப்புக் கலையை தலைமேல் தூக்கி வைத்து ஜிங்கு ஜிங்குனு ஆடுவதாகத்தான் இருக்கும். படத்தில் வரும் சங்கி மங்கிகள் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதால் முதல்முறை பார்க்கும் மக்களுக்கு ஹீரோ யார், ஹீரோயின் யார் என்ற சந்தேகம் அதிகளவில் தோன்றும். ஜாக்கிக்கு உலக அளவில் அறிமுகம் இருப்பதால், அவர் படத்துக்கு சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு குறைவுதான். மற்ற ஹீரோக்கள் என்று பார்த்தால்… ஜெட்லி அந்த ஊர் ஆக்‌ஷன் கிங். ப்ரூஸ் லீ படங்களை எடுத்துக் கொண்டால், அவர் படிக்கும் ஸ்கூலை காப்பாற்றவோ, அவரின் மாஸ்டரை கொன்றவரை பழி வாங்கும் கதையாகவோ தான் இருக்கும். இவ்வளவுதான் சைனீஸ், ஹாங்காங் சினிமாக்கள்!

இவ்வளவுதான் பாஸ் சினிமா!

Comments

comments