tamil-moviea

திருட்டு விசிடி என்று சொல்லப்பட்டு வந்ததை இனி திருட்டு இணையதளங்கள் என்று தான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. “டோரன்ட்” என்று நம்ம ஊர் ஆட்களால் அழைக்கப்படும் இணையதளங்கள் மூலம் திரைக்கு வரும் திரைப்படங்கள் அடுத்த சில மணி நேரங்களிலேயே பதிவேற்றப்படுகின்றன. அவற்றை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் உடனுக்குடன் “டவுன்லோட்” செய்து பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவற்றைத் தரவிறக்கம் செய்துதான் திருட்டு டிவிடி-யாக மாற்றி விற்கவும் செய்கிறார்கள். இப்படி “திருடப்படும் திரைப்படங்கள்” மூலம் பல கோடி ரூபாய் அளவில் வருமானம் கிடைக்கிறது என்ற ஆச்சரியத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

மிகப் பெரும் நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் படங்களை உடனுக்குடன் இணையதளங்கள் மூலம் பார்க்க பலரும் விருப்பப்படுகிறார்களாம்.. இப்படி வெளியாகும் இணையதளங்களின் முகவரி, அதாவது “யுஆர்எல்” அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்குமாம். இருந்தாலும் சில குறிப்பிட்ட இணையதளங்களின் பெயரை அப்படி திருட்டுத்தனமாகப் பார்ப்பவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்களாம். அதிலும் அடுத்த வாரம் வெளியாக உள்ள “கபாலி” படம் மூலம் மட்டும் படங்களை இணையங்களில் வெளியிடுவதன் மூலம் மட்டுமே சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் பார்க்க முடியும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

“கபாலி” படத்தை சுமார் 1 கோடி பேர் தரவிறக்கம் செய்யலாம் என்கிறார்கள். அப்படி தரவிறக்கம் செய்வதன் மூலம் இணையசேவை செய்யும் நிறுவனங்களுக்கும், இணையதளங்களை நடத்துபவர்களுக்கும் மொத்தமாக 20 கோடி ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியுமாம். இதை மத்திய அரசு நினைத்தால் தடுக்க முடியும் என தயாரிப்பாளர் வட்டாரங்களில் கவலை தெரிவிக்கிறார்கள்.

 

குறிப்பாக இணையசேவை வழங்கும் நிறுவனங்கள் அந்த திருட்டு இணையதளங்களை தடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை முழுமையாகத் தடுக்கலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தியத் திரையுலகம் செழிப்பாக இருக்க முடியும். இந்திய அளவில் அனைத்துத் திரையுலகத்தினரும் ஒன்றுபட்டால் இதை சாதிக்க முடியும்…செய்வார்களா ?.

Comments

comments