sabash-naidu1-740x431

சகுனம் சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையில்லதவர்தான் கமல்ஹாசன்.

ஆனால் திரைப்படத்துறையோ முழுக்க முழுக்க மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கும் துறை.

பாத்ரூம்போவதற்குக் கூட பஞ்சாங்கம் பார்க்கும் அளவுக்கு முட்டாள்களால் நிரம்பியிருக்கும் திரைப்படத்துறையில் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட விபத்தை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன?

வீட்டின் மாடிப்படியில் இருந்து கமல்ஹாசன் தவறி விழுந்ததை திரையுலக பண்டிதர்கள் சர்வசாதாரணமாக  எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே தற்போதைய நிலவரம்.

அறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் கமலுக்கு ஏற்பட்ட விபத்தை சபாஷ் நாயுடு படத்தோடு சம்மந்தப்படுத்தி சடுகுடு விளையாட ஆரம்பித்துவிட்டனர் சகுனிகள்.

கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் ‘உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம்’ ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வந்தன.

அவற்றில் உத்தம வில்லன், தூங்காவனம் இரண்டு படங்களும் படு தோல்வியடைந்து கமலின் நட்சத்திர நாற்காலியை  ஆட்டம் காண வைத்தன.

எனவே, பக்காவான ஒரு காமெடி மாசாலாப் படத்தில் நடித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள நினைத்து கமல்ஹாசன் கையில் எடுத்த கதைதான் – ‘சபாஷ் நாயுடு’.

இந்தப் படத்தை இயக்க மலையாள இயக்குநர் ராஜீவ் குமாரை ஒப்பந்தம் செய்தார்.

சுருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோருடன் கடந்த மே மாதம் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு பறந்தது சபாஷ் நாயுடு படக்குழு.

அங்கு முதல்நாள் படப்பிடிப்பின்போது  இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல்போக, வேறுவழியில்லாமல் சபாஷ் நாயுடு படத்தை கமல்ஹாசனே டைரக்ட் பண்ண ஆரம்பித்தார்.

சபாஷ் நாயுடு படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில் அப்படத்தில் நடித்து வந்த தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்துக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அங்கு முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு கடந்த வாரம் கமல்ஹாசன் சென்னை திரும்பினார்.

அடுத்தகட்ட படப்பிடிப்பை வருகிற 25-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார் கமல்.

அதற்கான வேலைகள் மற்றும் திரைக்கதை விவாத பணிகளில் ஈடுபட்டு இருந்த கமல்ஹாசன், நள்ளிரவு 1 மணிக்கு வேலைகளை முடித்து விட்டு மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்கியபோதுதான் திடீரென்று தவறி விழுந்தார்.

கமல்ஹாசனுக்கு காலில் சதை கிழிந்து ரத்தம் கொட்டியதோடு, வலது காலின் மூட்டுக்கு கீழே எலும்பு முறிவும் ஏற்பட்டதால் உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கமல்ஹாசனை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள்  தீவிர சிகிச்சை அளித்தனர்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாலும், முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதாலும், சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைசிகிச்சைக்குப் பின் கமல்ஹாசன் நலமாக இருப்பதாகவும், அவர் 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில்தான் கமலுக்கு ஏற்பட்ட விபத்துடன் ஏற்கனவே இயக்குநர் ராஜீவ்குமார், நடிகர் பிரம்மானந்தத்துக்கு ஏற்பட்ட உடல்நலமின்மையையும் முடிச்சுப்போட்டு சபாஷ் நாயுடுவுக்கு சகுனம் சரியில்லை என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தப் பொறி அப்படியே பரவி தீப்பிடிக்க ஆரம்பித்தால் சபாஷ் நாயுடு படத்துக்கு சந்தேகமில்லாமல் சிக்கல்தான்.

Comments

comments