19-29-14-kABALI1-650x431@2x

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைக்கு வரும் தேதியை எதிர்நோக்கி காத்திருப்பது ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, உலகம் முழுக்க பரவிக்கிடக்கிற தமிழ்மக்களும்.

கபாலி படத்தைப் பற்றி தினமும் வந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு தகவல்களும், செய்திகளும், புகைப்படங்களும்  அவர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கின்றன.

‘கபாலி’  படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தநிலையில் இன்னும் சில தினங்களில் ‘கபாலி’ படம் சென்சாருக்கு செல்ல இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகின.

அதன் தொடர்ச்சியாய், ஜூலை 1 ஆம் தேதி கபாலி ரிலீஸ் என்றும் சொல்லப்பட்டது.

பின்னர், ரம்ஜான் பண்டிகையைக் காரணம் காட்டி, ஜூலை மாதம் 15-ஆம் தேதி அன்று கபாலி ரிலீசாகவிருப்பதாக என்ற தகவல் பரவியது.

இந்த தகவலை அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு கபாலி படத்தின் ஏர்லைன் பார்ட்னரான ஏர்ஏசியா ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.

பெங்களூருவிலிருந்து விமானத்தில் சென்னை வந்து கபாலி படம் பார்த்துவிட்டு திரும்பிச்செல்ல 7860 ரூபாய் என்று ஏர்ஏசியா அறிவித்திருந்தது.

இத்தனைக்குப் பிறகும் என்ன நடந்ததோ தெரியவில்லை,  ஜூலை  15-ஆம் தேதி கபாலி ரிலீஸ் என்கிற அந்த தகவலும் பொய்யாகிப்போனது.

திடீரென்று ‘கபாலி’யின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டதாக சில தினங்களுக்கு முன் ஒரு  தகவல் வெளியானது.

அதாவது, ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் இம்மாதம் 15 ஆம் தேதியிலிருந்து  ஒரு வாரம் தள்ளி  22- ஆம் தேதிக்கு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதே அந்த தகவல்.

லேட்டஸ்ட் தகவலின்படி, இம்மாதம்  22-ஆம் தேதி கூட ‘கபாலி’ ரிலீசாகாது என்கிறார்கள்.

ஜூலை 29 அன்றுதான் ரிலீஸ் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

அதற்கு  ஆதாரமாக, மலேஷியாவில் உள்ள கோலாலம்பூரில் வைக்கப்பட்டுள்ள கபாலி படத்தின் விளம்பரங்களில்  ஜூலை 29 ரிலீஸ் என்று குறிப்பிட்டிருப்பதை  சுட்டிக்காட்டுகிறார்கள்.
வேறு சிலரோ,  ஜூலை 22 அன்று கபாலி ரிலீஸ் ஆவதில் மாற்றமில்லை என்று சத்தியமே செய்கிறார்கள்.

அதற்கு வலு சேர்க்கும்வகையில்  கோலாலம்பூரில் உள்ள  நியூ சென்ட்ரல், மற்றும் மிட் வேலி தியேட்டர்களில் ஜூலை 21 அன்று கபாலி படத்தின் பிரிமியர் ஷோ நடைபெற உள்ளதாகக் கூறி டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டுகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, லேட்டஸ்டாக ஒரு தகவல் தலையை சுற்ற வைத்துக் கொண்டிருக்கிறது.

அதாவது, ’கபாலி’ படம் ஜூலையில் ரிலீஸ் இல்லையாம்.

ஆகஸ்ட் மாதம்தான் படம் வெளியாகும் என உறுதிபடச் சொல்கிறார்கள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 12- ஆம் தேதி வெள்ளி கிழமை அன்று ‘கபாலி’ திரைக்கு வருகிறதாம்.

இதனால் ‘கபாலி’ வெளியீட்டு தேதி குறித்து மேலும் குழப்பம் நீடித்து வருகிறது.

ரஜினி ரசிகர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டு நிற்கின்றனர்.

‘கபாலி’ படத்தின் தணிக்கை முடிவடைந்த பிறகுதான் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிப்பது என்பதில் கலைப்புலி தாணு உறுதியாக இருக்கிறார்.

ரசிகர்கள்தான் பாவம்…

Comments

comments