11-20-34-NT_20160704102554399786

இளம் பெண் ஸ்வாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற படுகொலைகளை தடுக்க இளைஞர் படை ஒன்றை அமைக்க இருப்பதாக சரத்குமார் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளார்.

அதில் அவர் எழுதியிருப்பதாவது: மரம் வெட்டினால் குல நாசம் என்பார்கள், ஆனால் சக மனிதனை வெட்டுவதை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனித குலம் குரூரமானதாக ஆகிவிட்டது. அமைதி இன்றி பாதை தடுமாறி செல்லும் மனித இனத்தை நல் வழியில் எடுத்து செல்ல ஒரு கண்ணனோ, ஏசுவோ, புத்தரோ, காந்தியோ பிறக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோமா? நம் சமுதாயத்தில் நமது வருங்கால சந்ததியர் அன்புடன் அமைதியுடன் வாழ வேண்டாமா? உலகின் பல பகுதிகளில் சமீப காலங்களில் மிக அதிக அளவில் கொடூர முறையில் நடக்கும் கொலைகளையும், சிறு விஷயங்களுக்கு உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்திகளையும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் படிக்க பழகிக் கொண்டுவிட்டோம் என்று தோன்றுகிறது.
நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலையை போன்ற செயல்களுக்கு வாய் வார்த்தைகளால் தீர்வு சொல்வதை விட செயலில் இறங்கினால் நிகழும் கொடுமைகளை தடுக்க முடியும்- முதலில் கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் உள்நோக்கம் என்ன, எது போன்ற செயல்கள் சாதாரண மனிதனை வக்கிர எண்ணம் கொண்டவராக மாற்றி அவர்களை கொலை செய்ய தூண்டுகிறது என்பதை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.
ஸ்வாதியை கொலை செய்த கொலையாளி உருவாகுவற்கு நமது சமுதாயம் – அதாவது – நாமும் ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. இது போன்ற எண்ணங்கள் உருவாகுவது இந்த சமுதாயத்தில் இருந்துதான்.
ஆக்க பூர்வமான செயல்களில் நம்மால் முயன்ற அளவில் ஈடுபட வேண்டும், சமுதாயத்தில் சிறிதேனும் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என பயணிப்பவன் நான். இந்த கொடூரம் நிகழ்வுகளுக்கு விடை காணும் முயற்சியாக 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயார் செய்ய முடிவு செய்திருக்கிறேன். முதலில் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தன்னை தானே பாதுகாத்து கொள்பவர்களாகவும், பின்னர் இது போன்ற கொடுமைகளை கண் எதிரே நிகழாமல் தடுப்பவர்களாகவும் உருவாக்குவதென்று திட்டமிட்டுள்ளேன்.
என்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பவர்களும், இது போன்ற பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்களும் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அரசியல் சாயம் இல்லாத மக்கள் பணியாற்றிட விரும்பும் மக்களை வேண்டி அழைக்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் எழுதியுள்ளார்.

Comments

comments