‘Idhu-Namma-Aalu’

அகலக் கால் வைத்தால் அண்ட்ராயர் கிழிவது உறுதி என்று தெரிந்திருந்தும் அகலக் கால் வைத்தவர் டைரக்டர் லிங்குசாமி. கமல்ஹாசன் என்ற யானைக்கு யாராலும் தீனி போட முடியாது என்று தெரிந்திருந்தும் அவரை வைத்து படம் தயாரித்தது, தனது அண்ணன் மகனை ஹீரோவாக்கி படம் எடுக்க துணிந்தது, ஒரே நேரத்தில் நாலு படத் தயாரிப்புகள் என்று நூடுல்சை அள்ளி தலையில் போட்டுக் கொண்டார் அவர். சிலேட்டையும் உடைத்து அதன் மேல் எழுதுகிற சாக்பீசையும் முழுங்கிய காரணத்தால், இன்று லிங்குசாமியின் மதிப்பெண், மதிப்பற்ற புண் ஆகிக் கிடக்கிறது கோடம்பாக்கத்தில்.

விழுந்தவர்கள் மீள்வதும், மீண்டவர்கள் விழுவதும் கோடம்பாக்கத்தில் சகஜமல்லவா? அந்த நம்பிக்கையோடு நடை போட்டுக் கொண்டிருக்கிறார் லிங்கு. என்றாலும் புண்பட்ட மனசை புகை விட்டு ஆற்று என்பதை போல, கடன் பட்ட நெஞ்சத்தை கவிதை எழுதி ஆற்றிக் கொண்டிருக்கிறார் அவர்.

லிங்குசாமி ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டிருந்தார். தனது இரண்டாவது படைப்பாக ‘லிங்கூ-2’ என்ற பிரிவில் ‘செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ கவிதைகள் நூலைக் கொண்டு வந்திருக்கிறார். இதன் வெளியீட்டு விழாவை வித்தியாசமாக நடத்தி புதுமை செய்திருந்தார் லிங்குசாமியின் நண்பரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ்மேனன். நிகழ்ச்சி திருவான்மியூர் கடற்கரையோர அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்துப்போன சிலரும், சினிமாவுக்கு ‘பத்துப் போட்ட’ சில பேருமாக கூடியிருந்தார்கள் அங்கே. கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டது தனி சிறப்பு.

விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும் போது ,” நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்குள் ஆதியில் தோன்றியது கவிதையாகவே இருந்திருக்ககிறது. பிறகுதான் கதை எல்லாம் வந்தது என்பேன். ஊரிலிருந்து சென்னை வந்த போது ரெண்டு மூணு கவிதைகளும் கொஞ்சம் நம்பிக்கையுடன்தான் இங்கு வந்தேன். கையில் காசு பணம் வேண்டாம் கவிதை போதும் பிழைத்துக்கொள்ள்ளலாம் என்றிருப்பேன்.எதுவுமே இல்லைன்னாலும் கவிதை இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்றிருப்பேன். அப்போதே அப்படி இருந்தேன்.இப்போது இவ்வளவு பேர் கிடைத்திருக்கிறீர்கள்.எனக்கென்ன கவலை? கவிதை சொல்வது என்பது என்னைச்சுற்றித் தொற்று நோய் போல வந்து கொண்டிருக்கிறது என் டிரைவர் முதல் ஆபீஸ் பாய் வரை இப்போதெல்லாம் கவிதை சொல்கிறார்கள். .

நான் எப்போதும் கவிதை ரசிக்கும் மனசோடு இருப்பவன், எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால அதெல்லாம் உண்மையிலேயே பெரிதாகத் தெரியாது. அந்த மனசு மட்டும் இருந்தால் போதும்.எவ்வளவு சோதனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.இப்போது கூட வருகிற மிஸ்டுகாலில் 6 காலில் 3 கால் பணம் திருப்பித்தரக் கேட்கும் பைனான்சியராகக்கூட இருக்கலாம்..கடன் இருக்கிறது கவலை இல்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன். நான் உதவி இயக்குநராக சிரமப் பட்ட காலத்தில் கூட எல்லாக்கடையிலும் கடன் இருக்கும் 4 மாதம் கழித்து ஊர் போய்விட்டு வந்து எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன். எங்கள் குடும்பம் ஊருவிட்டு வேறு ஊர் வந்த போது கூட ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதற்காக மாட்டை விற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது.எனக்குபொறுப்பும் கடமையும் இருக்கிறது.

இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன்.நீங்கள் எல்லாம் இருக்கிற போது எனக்கு எதுவுமே பிரச்சினை இல்லை.எல்லாக் கஷ்டங்களும் கடந்து போய்விடும்.இதுவும் கடந்து போகும். எல்லாம் கடந்து போகும். இதை என் தனிப்பட்ட விழாவாக நினைக்கவில்லை.எல்லாரையும் சந்திக்கிற ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன்.அதற்காகவே நானாக ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பமே இது ..” என்றார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டைரக்டர் சசி திடுக்கிடும் காமெடி ஒன்றை சொன்னார்.

கவிதை என்பது அதைப் படித்தவனை எழுத வைக்கும். இக்கவிதைகளைப் படித்ததும் நான் மொட்டை மாடிக்கு ஓடிப் போய் மழையில் நனைந்தேன். லிங்குவின் கவிதை படித்ததும் என்னை அப்படிச் செய்ய வைத்தது.”என்றார். (ஒருவேளை மர்ம நாவல் எதையாவது படித்திருந்தால் மாடியிலிருந்தே குதித்திருப்பாரோ என்னவோ?)

Comments

comments