UmEBpvV3

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி.

பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள கபாலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகின்றன.

கபாலி படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு யுடியூபில் பல்வேறு சாதனைகளையும் படைத்துக் கொண்டிருக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான கபாலி படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.  வழக்கமான ரஜினி படத்தின் பாடல்களைப் போல் கபாலி பாடல்கள் இல்லை என்ற விமர்சனம் இருந்தாலும், அது கபாலி படத்தின் எதிர்பார்ப்பை காலி பண்ணவில்லை.

கபாலி படத்தின் புதிய டீசர் இன்று இரவு 8 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக சொல்லப்பட்டநிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து தவறான கதவலை வெளியிட்டுள்ளது ஊர்பேர் தெரியாத ஒரு இணையதளம்.

இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது மட்டுமல்ல, ஊடக வட்டாரத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இது குறித்து ரஜினி மற்றும் கபாலி படத்தின் செய்தித் தொடர்பாளர் ரியாஸிடம் கேட்டபோது,  ரஜினியின் உடல்நிலை குறித்த தகவல் வதந்தி என்றும், ரஜினி நலமாக உள்ளார். வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரும் விளக்கம் அளித்துள்ளனர்.

ரஜினி நலமாக இருக்கிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில்  ரஜினியின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய அந்த இணையதளம் மீது சைபர்க்ரைமில் புகார் கொடுக்கப்பட்டு உடனடியாக அந்த தளம் முடக்கப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமீபகாலமாக ரஜினி குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் அடிக்கடி இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுப்பது ரஜினிக்கு நல்லதோ இல்லையோ அவரது ரசிகர்களுக்கு நல்லது.

Comments

comments