14-27-48-appa-movie

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘அப்பா’. இவருடன் தம்பி ராமையா, நமோ நாராயணன் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) வெளியாகவிருக்கும் இப்படத்தை பற்றி இயக்குநர் சமுத்திரக்கனியிடம் கேட்டோம்.

அவர் கூறியதாவது, “நான்குவிதமான அப்பாக்கள் பற்றிய கதை தான் இந்த ‘அப்பா’. பொதுவாக எனது முந்தைய படங்களிலெல்லாம் அம்மாக்களைவிடவும் அப்பாக்களை பற்றியே அதிகம் சொல்லியிருப்பேன். என்னுடைய சிறிய வயதிலேயே என் அப்பாவை இழந்துவிட்டதால் அப்பா மீதான பார்வை எனக்குள் அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாக அம்மாக்கள் பலருமே நம்ம அப்பாக்கள் எது சொன்னாலும் அதை அப்படியே ஏத்துக்குவாங்க. சிலர் எதையுமே ஏத்துக்காம சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. பிள்ளையை வளர்க்குற விஷயத்துல அம்மாக்கள் அதிகமா செல்லம் கொடுத்து கெடுப்பாங்க. இந்த நேரத்துல அப்பா சொல்றதை அம்மாக்களும், பிள்ளைகளும் கேட்காமல் அவரை அவமரியாதை செய்வாங்க. இன்னும் சில அம்மாக்கள் அப்பாவோடு இணைந்து வாழ்வார்கள்.. அப்பான்னாலே கொஞ்சம் பயந்து ஒரு வார்த்தைகூட எதிர்த்து பேசாமல் இருக்கும் அம்மாக்களும் இருக்கிறார்கள்.

இவர்களால்.. பிள்ளைகளின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதை இந்தப் படம் பேசும். இதை ஒரு பிரச்சார படமாகச் சொல்லாமல் நாம் இப்போது உட்கார்ந்து பேசுவதுபோல் இயல்பாக சொல்லியிருக்கிறேன். தமிழகத்தில் நடந்த பல நிஜமான சம்பவங்கள்தான் இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியது. கிட்டத்தட்ட நான்காண்டுகளாக பல தேடுதல் வேட்டைகளெல்லாம் நடத்திதான் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளேன்.

அவரவர் பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்டபடியே தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க அவர்களின் அப்பாமார்கள் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதைக் கரு. இதில் நான்கு பெற்றோர்கள். நான்கு பிள்ளைகள். இதில் சுதந்திரமாக பிள்ளையை வளர்க்கும் அப்பாவாக நான் நடித்துள்ளேன். அதிக பாசம் காட்டி வளர்க்கும் அப்பாவாக தம்பி ராமையாவும், எந்த வித்தியாசமும் காட்டாத ஒரு மாணவனின் அப்பாவாக நமோ நாராயணனும் நடித்துள்ளார்கள்.

படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உண்மையாக தனது இசையால் இந்தப் படத்துக்கே அப்பாவாகிவிட்டார் இளையராஜா. முதல்ல சந்திக்கும்போது எவ்வளவு சம்பளம்ன்னுகூட கேக்கலை. ‘ஏன் முன்னாடியே என்கிட்ட வரலை’ன்னு மட்டும்தான் கேட்டார். ‘அப்போ தோணலை ஸார். இப்போதான்.. இந்தப் படத்துக்குத்தான் தோணுச்சு’ என்றேன். நான் எடுத்திட்டு வந்த படத்தை இசைஞானிகிட்ட கொடுத்த பின்னாடி பார்த்தால், அந்தப் படமே ஒட்டு மொத்தமா வேற மாதிரி மாறியிருந்தது. அதுதான் இசைஞானியின் இசை.

நிச்சயமாக இந்தப் படம் கருத்து சொல்லும் படமல்ல. அதே சமயம் இந்தப் படம் துவங்கிய 15 நிமிடத்திலேயே நீங்கள் உங்களது அப்பாமார்களை நிச்சயமாக நினைக்க வைக்கும். உங்களுடைய வாழ்க்கையை அசைபோட வைக்கும். நான் இதுவரையில் இயக்கிய படங்களிலேயே சிறந்த படம் இதுதான் என்கிற உணர்வை இது எனக்கு ஏற்படுத்தியுள்ளது..” என்றார் உற்சாகமாக.

Comments

comments