100-crore-movies

முன்பெல்லாம் ஒரு படம் ரூ. 50 கோடி வசூலிப்பதே அரிதான விஷயம். ஆனால் இப்போது ஒரு படம் சர்வ சாதரணமாக ரூ. 100 கோடியை தொட்டு விடுகிறது. அதுவும் முக்கியமான இயக்குநரோ..? அல்லது முன்னணி நடிகரோ..? நடித்து அந்த படம் பிரமாண்டமாக இருந்தால் ரூ. 500 கோடி வரை வசூலிக்கிறது. உதாரணமாக கடந்தாண்டு வெளிவந்த பாகுபலியை கூறலாம். இந்தப் படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து தென்னிந்திய சினிமாவிலேயே பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தாண்டு எங்கள் படம் 100 கோடியை வசூல் செய்துவிட்டது என்று சில தயாரிப்பாளர்கள் கூவிக்கொண்டிருந்தாலும் உண்மையாகவே இந்த வருடம் ரூ. 100 கோடி எட்டிய படங்கள் இவை தான் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சரி அது என்னென்ன படங்கள் என்று பார்ப்போம்.

ஏர் லிஃப்ட்:

அக்‌ஷய் குமார் நடித்த ஏர் லிஃப்ட் படமே இந்த வருடத்தின் முதல் ரூ. 100 கோடி படம். இந்த படம் இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை தாண்டியது. 1990-ஆம் ஆண்டு குவைத்துக்கும் ஈராக்குக்கும் இடையே நடைபெற்ற போரின் போது சிக்கிக்கொண்ட இந்தியர்களை எப்படி மீட்டுக் கொண்டு வந்தார்கள் என்ற உண்மை கதையை வைத்து இந்தப் படத்தை படமாக்கியிருந்தார் ராஜா கிருஷ்ணா மேனன்.

கபூர் அண்ட் சன்ஸ்:

சித்தார்த் மல்கோத்ரா, அலியா பட், பவத் கான் நடிப்பில் வெளிவந்து இன்றைய இளைஞர்களின் ட்ரைண்டை அப்படியே வெளிப்படுத்திய படம் கபூர் அண்ட் சன்ஸ். முக்கோண காதல் கதையாக அமைந்த இந்த படம் எதிர் மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரூ. 150 கோடி வரை வசூல் செய்தது.

நீர்ஜா:

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் பலரின் உயிரை காப்பாற்றிய விமாணப் பணிப்பெண் நீர்ஜா வாழ்க்கையில் சோனம் கபூர் நடித்தார். இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 120 கோடி வரை வசூல் செய்திருந்தது.

ஃபேன் ( Fan )

ஷாருக்கான் படம் வெற்றியோ, தோல்வியோ எப்படியும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும். அதுவும் இந்தியாவிலேயே இவருடைய படம் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும். ஆனால், படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்தும் ஃபேன் ரூ. 75 கோடி தான் இந்தியாவில் வசூல் செய்தது. உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 150 கோடி ஃபேன் வசூலித்தது.

பாகி:

ஜாக்கி ஷெரப் மகன் டைகர் ஷெரப் நடித்த இரண்டாவது படம் பாகி. ஹாலிவுட் ஹீரோவிற்கு நிகரான உடல் தோற்றம் சண்டைப்பயிற்சி என கற்றுக்கொண்டு சினிமாவில் நடிக்க வந்தவர். இப்படத்தில் ஹீரோவுடன் இணைந்து ஹீரோயின் ஷரதா கபூரும் ஆக்‌ஷனில் வெளுத்து வாங்க படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 130 கோடி வரை வசூல் செய்தது.

கி & கா:

நம்ம ஊர் ஆள் பால்கி ஷமிதாப் தோல்வியில் இருந்து மீண்டு கரீனா கபூர், அர்ஜுன் கபூரை வைத்து இயக்கிய வித்தியாசமான ஒரு படம் தான் கி & கா. ஆண்கள் வீட்டில் இருக்க, பெண்கள் வேலைக்கு போனால் என்ன? என்ற சின்ன கதையை திரைக்கதையாக உயிர் கொடுத்து இயக்கியிருப்பார். ஷாமிதாப் தோல்விக்கு பரிசாக இந்த படம் ரூ 100 கோடி வசூல் செய்தது.

தெறி:

புலி படத்தின் மூலம் கொஞ்சம் சோர்வில் இருந்த இளைய தளபதி விஜய் தெறியில் ஒட்டுமொத்தமாக விட்ட இடத்தை பிடித்துவிட்டார். தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் மட்டுமில்லாமல் 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது. இப்படம் தற்போது வரை ரூ. 140 கோடியை தாண்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

24:

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சூர்யா எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று போராடி வந்தார். அந்த நிலையில் தான் 24 படம் வெளிவந்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த படமும் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது.

சரைனோடு:

அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படம் இது. ஆனால் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனமே கிடைத்தது. இருந்தாலு படத்தின் வசூலையும், வெற்றியையும் யாராலும் தடுக்க முடியவில்லை, இந்த படமும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது.

ஜங்கிள் புக்:

இது ஹாலிவுட் படமாச்சே, என நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த இந்தியாவிலேயே ரூ. 250 கோடி வசூல் செய்தது. இப்படி ஒரு சாதனையை விஜய், அஜித்தே செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த வருடத்தில் வந்த படங்களில் மேலே குறிப்பிட்ட படங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ரூ 100 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த வருடத்தில் கபாலி, சுல்தான் என பல படங்கள் வரிசை கட்டி நிற்க எந்த படம் ரூ 100 கிளப்பில் இணையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

comments