vendhar-and-madhan-740x431

வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காசிக்கு சென்றுவிட்ட விவகாரம்தான் கோடம்பாக்கத்தில் ஹாட்  டாபிக்.

“என்னது… மதன் தற்கொலை செய்து கொள்ளப்போகிறாரா…. அச்சச்சோ…” என்று பரிதாபப்படுகிறவர்கள் ஒருபக்கம்…

“மதனாவது தற்கொலை செய்து கொள்ளப்போவதாவது… என்ன காரணத்தினாலோ நாடகம் ஆடுகிறார்.  காசிக்கும் போயிருக்க மாட்டார்… ராமேஸ்வரத்துக்கும் போயிருக்க மாட்டார்.
சென்னையில்தான் எங்காவது பதுங்கி இருப்பார் எமகாதகன்” என்று சொல்கிறவர்கள் இன்னொரு பக்கம்….

மதன் காசிக்குப்போனாரோ… காசிமேட்டுக்குப் போனாரோ…. ஆனால் தன்னுடைய மரண வாக்குமூலம் போன்றதொரு கடிதத்தை எழுதியிருப்பது மட்டும் உண்மை.

அதில், வெளியே தெரியாத பல வெவகாரங்களை அம்பலப்படுத்தியிருப்பதும் உண்மை.

குறிப்பாக, பாரிவேந்தர் என்கிற பச்சைமுத்துவுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய பல தகவல்களை அந்த கடிதத்தில் ‘வெவரமாக’ வெளியிட்டிருக்கிறார் மதன்.

அவர் எழுதிய கடிதத்தில் அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று…

எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் பெற்றுத் தருவதற்காக பலரிடம் பணம் வாங்கி இருக்கிறார் மதன்.

அந்தப் பணத்தை எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டதாகவும், எனவே பணம் கொடுத்த மாணவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்றும் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

மதன் தலைமறைவுக்கும் இந்த சீட் விவகாரம்தான் காரணம் என்கிறது மதனை நன்கு அறிந்த அவரது நண்பர் வட்டாராம்.

மதனின் தற்கொலை நாடகத்துக்கும்…. தலைமறைவு நாடகத்துக்கும் என்ன காரணம்?

பின்னணியில் நடந்தது என்ன?

பச்சைமுத்துவின் கல்வி சாம்ராஜ்யம் இந்தளவுக்கு விரிந்து பரவ பல பேர் காரணம்.

அவர்களில் மதனும் ஒருவர்.

எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தைப் பொருத்தவரை, பச்சைமுத்துவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் மதன். எனவே அங்கே மதன் வைத்ததுதான் சட்டம்.

கட்டணம், நன்கொடை என அனைத்து வசூல்களும், வரவுகளும் மதன் மூலம்தான் நடக்கும்.

லட்சங்களை, கோடிகளை பெற்றுக் கொண்டு சிறு துண்டு சீட்டில் ஒரு டோக்கன் கொடுப்பார் மதன்.

அதை எஸ்.ஆர்.எம். நிறுவனத்தில் காட்டினால் கல்லூரியில் சீட் கிடைக்கும்.

இப்படி வசூலித்த தொகையில் மதனுக்கும் பல கோடி கமிஷன் கிடைத்தது.

அந்தப் பணத்தில் ராஜபோகமாக வாழ்ந்தார் மதன்.

அவரது வளர்ச்சியும், வாழ்க்கையும் பச்சைமுத்துவின் வாரிசுகளின் கண்ணை உறுத்த ஆரம்பிக்க…

பச்சைமுத்துவின் ஆசிர்வாதம் இருக்கும்போது, அவரது மகன்களால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார் மதன்.

அந்த நம்பிக்கை தகர்ந்துபோனதுதான் இன்று மதனை தற்கொலையைத் தேடி ஓட வைத்திருக்கிறது.

ஏன்… என்னாச்சு?

ஒவ்வொரு வருடமும் அட்மிஷன் நடைபெறும் காலம் என்பது மதனுக்கு வசந்தகாலம். கோடிகள்

கொட்டும் பொற்காலம்.

இந்த வருடமும் பொறியியல் கல்லூரி அட்மிஷனுக்காக பல கோடி கல்லா கட்டிய மதன், மருத்துவ கல்லூரி அட்மிஷனுக்காக 75 லட்சம் வீதம் சுமார் 100 மாணவர்களிடம் 75 கோடி பணம் வாங்கி இருக்கிறார்.

மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக மாணவர்களிடம் கடந்த மார்ச் மாதமே பணத்தை வாங்கிய மதன், அந்தப் பணத்தை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்
பச்சைமுத்துவின் – பாரிவேந்தரின் – இந்திய ஜனநாயக கட்சிக்காக செலவு செய்திருக்கிறார்.

இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் கூட மாணவர்களிடம் வசூலித்த பணத்தை தேர்தலுக்கு செலவு செய்துவிட்டு, பின்னர் பச்சைமுத்துவிடம் கணக்கு சொல்லி இருக்கிறார்.

madan-ijk-602x700

இந்திய ஜனநாயக கட்சியில் அகில இந்திய இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் மதனிடம்தான் தேர்தல் வரவு செலவுகளை ஒப்படைத்திருக்கிறார்  பச்சைமுத்து.

அந்த அடிப்படையில்தான், இந்த வருடம் மருத்துவ சீட்டுக்காக வசூலித்த 75 கோடியையும் கூட பச்சைமுத்துவிடம் சொல்லாமலே கட்சிக்காக தேர்தலில் செலவு செய்திருக்கிறார் மதன்.

இதற்கிடையில் தனியார் மருத்துவ கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்த முடியாத அளவுக்கு NEET என்கிற The National Eligibility cum Entrance Test என்கிற நுழைவுத்தேர்வை கட்டாயமாக்கியது உச்சநீதிமன்றம்.

இதன் காரணமாக, தான் பணம் பெற்ற 100 மாணவர்களுக்கு சீட் கொடுக்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டார் மதன்.

எனவே தான் பணம் பெற்ற மாணவர்களுக்கு சீட் கொடுக்க முடியாமல்போனால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் வைத்திருக்கிறார் மதன்.

அதை ஏற்க மறுத்துவிட்டார் பச்சைமுத்துவின் மகனான ரவி.

“100 பேரிடம் வாங்கிய 75 கோடியை எங்களிடம் கொடுக்கவே இல்லை. அப்புறம் எதற்கு நாங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்?” என்று மதனுக்கு செக் வைத்திருக்கிறார்கள்.

மதனுக்கு பேரதிர்ச்சி.

வாங்கிய பணத்தை இந்திய ஜனநாயக கட்சிக்காக செலவு செய்ததாக அவர் சொன்னதை ரவி ஏற்கவில்லை.

இதற்கிடையில் NEET தேர்வு கட்டாயம் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக இருக்க, மதனிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு படையெடுத்துள்ளனர்.

அப்போதே தலைமறைவாகிவிட்டார் மதன்.

செல்போனையும் ஸ்விட்சு ஆஃப் செய்துவிட்டாராம்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், NEET தேர்வுக்கு எதிராக, அதாவது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

எனவே, தான் பணம் வாங்கிய 100 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்.மில் சீட் வாங்கிக் கொடுக்கும் முயற்சியை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார் மதன்.

அடுத்த வருடம் முதல் NEET தேர்வு நிச்சயம். இந்த வருடம்தான் நுழைவு தேர்வு இல்லை. எனவே மெடிக்கல் சீட்டுக்கு பணம் சம்பாதிக்க இந்த வருடம்தான் கடைசி வாய்ப்பு என்பதை புரிந்து கொண்ட எஸ்.ஆர்.எம். 1 சீட்டுக்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடிவரை ரேட்டை நிர்ணயம் செய்துவிட்டதாம்.

அந்த கணக்கின் அடிப்படையில் 1 சீட்டுக்கு 1 கோடி வீதம் 100 கோடியை கொடுங்கள். 100 மாணவர்களுக்கு அட்மிஷன் தருகிறோம் என்று மதனிடமும் சொல்ல…

நிலைகுலைந்துபோயிருக்கிறார் மதன்.

இத்தனை விவகாரத்தையும் பச்சைமுத்துவிடம் சொன்னால் நிச்சயமாக தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிய மதன், அவரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்.

மதனைப் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் மீது கடுப்பில் இருந்த பச்சைமுத்து மதனின் போனை அட்டெண்ட் பண்ணவில்லை.

ஒருவேளை நேரில் வந்தாலும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

இப்படியொரு இடியாப்ப சிக்கலில் மாட்டியதால்தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் கடிதம் எழுதி வைத்துவிட்டு காசிக்குப்போய்விட்டாராம் மதன்.

பாரிவேந்தருக்கும் மதனுக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்தில் தற்போது 100 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இவர்களுக்கு பதில் சொல்லப்போவது யார்?

மதன் தலைமறைவான விவகாரத்தில் மேலும் பல வெளிவாராத தகவல்கள் விரைவில்…

Comments

comments