Sandeep-Bhardwaj-Killing-Veerappan-movie--740x431

சந்தன வீரப்பன் பற்றி மக்களிடம் இரண்டுவிதமான பார்வை, கருத்துக்கள் உண்டு.
ஒன்று…. தமிழகத்தை உலுக்கிய மாபெரும் கொள்ளையன் வீரப்பன்!

தமிழக – கர்நாடக போலீசாருக்கு சிம்மசொப்பனமாகவும், மிகப் பெரிய சவாலாகவும் விளங்கிய வீரப்பன் வெறும் அம்புதான். அவரை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தது அரசியல்வாதிகள்தான் என்பது இன்னொன்று.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும்போது, வீரப்பனுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்யும்.

சினிமா வியாபாரிகளுக்கு அது பற்றி கவலையில்லை.

வீரப்பனை சந்தன மரக்கடத்தல்காரனாக சித்தரித்தால்தான் சினிமாவை ஓட்ட வைக்க முடியும்.

இந்த அடிப்படையில்தான் கடந்த காலங்களில் பல ‘வீரப்பன் சினிமா’க்கள் வெளியாகி இருக்கின்றன.

வாழ்ந்தபோது மட்டுமல்ல இறந்த பிறகும் சினிமாக்காரர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் வீரப்பன்.

இதோ இப்போது… ராம்கோபால் வர்மா என்ற விஷமக்கார இயக்குநரும் வீரப்பன் கதையை கையில் எடுத்திருக்கிறார்.

கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் கன்னடத்தில் எடுக்கப்பட்ட படத்தை தற்போது வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்.

இப்படத்தில் வீரப்பன் கேரக்டரில் பாலிவுட்டை சேர்ந்த சந்தீப் பரத்வாஜ் நடித்துள்ளார்.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக உஷா ஜாதவ் நடித்துள்ளார்.

வீரப்பனை பிடிக்கும் போலீஸ் படையின் தலைவராக சச்சின் ஜோஷி நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரபல மாடல் அழகியும், நடிகையுமான ‘லிசாரே’யும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மே 27ஆம் தேதி ஹிந்தியில் ரிலீசாகவிருக்கும் இப்படம் தமிழில் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

‘‘வீரப்பனை மையமாக வைத்து இதற்கு முன் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்பது எனக்கு தெரியும்.

வீரப்பன் குறித்து நான் சேகரித்த தகவல்களை வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

எனக்கு கிடைத்த தகவலின் படி வீரப்பன் 97 போலீஸ்காரர்களை கொன்றிருக்கிறான்.

900 யானைகளை கொன்று குவித்திருக்கிறான்.

வீரப்பனை பிடிக்க மட்டும் அரசாங்கம் 734 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது!

இப்படி அரசாங்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனின் கடைசி இரண்டு ஆண்டு காலத்தில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் இதுவரை வெளிவந்த வீரப்பன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

வீரப்பனின் வாழ்க்கைப் பின்னணியையும், வீரப்பனை வீழ்த்த போலீசார் நடத்திய ‘ஆபரேஷன் குக்கூன்’ பற்றியதுமே இந்த படம்.

இந்த படத்தின் கதை கண்ணன் என்ற போலீஸ் உயர்அதிகாரியை சுற்றி நகர்கிறது.

கண்ணன் துணிச்சலான போலீஸ் அதிகாரி. வீரப்பனை பிடிப்பது ம்ட்டுமே அவரது ஒரே இலக்கு.

‘போரில் எதுவும் தவறில்லை’ என்பது போல், வீரப்பனை பிடிக்க வேண்டும் என்ற இலக்கை அடைய, பல சமரசங்களை செய்துகொள்கிறார் கண்ணன்.

படத்தின் ஆரம்பக் காட்சியே ‘ஆபரேஷன் குக்கூன்’ திட்டம் தீட்டப்படுவதை விவரிக்கிறது.

‘ஆபரேஷன் குக்கூன்’ கமாண்டராக இருந்தவர் விஜயகுமார். அவரது திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்டவரே கண்ணன்.

அடுத்தடுத்த காட்சிகள் வீரப்பனுக்கு விரிக்கப்படும் வலை குறித்தவையே.

முதல் திட்டமாக, பிரியா என்ற ஒரு பெண்ணை நியமிக்கிறார் கண்ணன்.

அவர் வீரப்பனின் நெருங்கிய தோழியாக மாறுகிறார்.

பிரியா மூலம் வீரப்பனின் மறைவிடத்தை அறிந்து, அவனை நெருங்குவதே போலீசாரின் திட்டம்.

அத்திட்டத்தில் போலீஸ் அதிகாரி கண்ணன் வெற்றி பெற்றாரா? என்பதே இப்படத்தின் கதை.”

என்று வில்லாதி வில்லன் வீரப்பன் படம் பற்றி விரிவாகப் பேசினார் ராம் கோபால் வர்மா.

நடிகர் ரஜினிகாந்தை கடத்துவதற்கு வீரப்பன் திட்டமிட்டிருந்தார் என சில தினங்களுக்கு முன் ராம் கோபால் வர்மா கொளுத்திப்போட்டதன் காரணம் புரியுதா?

Comments

comments