NTLRG_160525150658000000

வீசும் காற்றும் இவர் பேர் சொல்லும், பேசும் மொழியும் இவர் குரல் அறியும், தேன் கலந்த குரலால் தெவிட்டாத பாடல்கள் பல தந்தவர், சினிமா உலகம் உள்ளவரை இவர் பேரை உச்சரிக்காத உதடுகள் இருக்கவே முடியாது, சாத்தியமாகாத பாடல் படைப்புகள், மறைந்தும், மறையாத நம் மனங்களில் என்றென்றும் நீங்கா நினைவில் வாழும் டி.எம்.எஸ்., என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் டிஎம் சவுந்திரராஜனின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. அவரைப்பற்றிய நெஞ்சம் சுமந்த நினைவலைகளை தினமலர், வாசகர்களுக்கு வழங்குகிறது. இதோ….

* தொகுளுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தர்ராஜன் என்ற டிஎம்எஸ்., மார்ச் 24ம் தேதி, 1922-ம் ஆண்டு, மதுரையில் மீனாட்சி ஐயங்கார், வெங்கட்டமாவிற்கு மகனாக பிறந்தவர்.

* 7 வயதில் பாட்டு பாட பயிற்சி எடுக்க தொடங்கினார்.

* 23 வயதில் மேடை கச்சேரி செய்ய தொடங்கினார்.

* ஆரம்ப காலக்கட்டத்தில் இவர் குரல் உடைந்துள்ளது, பாடல்கள் சரியாக வரவில்லை என்று காரணம் காட்டி பலர் இவரை நிராகரித்தனர்.

* ஜி. இராமநாதன் இசையில் மந்திரி குமாரி படத்தில் முதன்முதலில் பாடகராக அறிமுகமானார்

* 4 தலைமுறை கலைஞர்களுக்கு டி.எம்.எஸ்., பாடியுள்ளார்.

* எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என்டி ராமராவ், எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ராஜ்குமார், நாகேஷ்வரராவ், கமல், ரஜினி, ராஜேஷ், பிரபு, கார்த்தி… என்று இவர் குரலில் ஒலித்த நடிகர்களின் பாடல்கள் மிக பிரபலம்.

* தமிழில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களும், 3000 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த காந்த குரலின் பாடல்களை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை நன்கு பேசக்கூடியவர், இந்த மொழிகளிலும் பாடல்களும் கொடுத்திருக்கிறார்.

* எம்.ஜி.ஆரின் மந்திரி குமாரியில் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை அவரின் அத்தனை பாடல்களையும் தன் குரலால் கவனிக்க வைத்தவர் டிஎம்எஸ்.,

* ஆரம்பத்தில் குறைந்தபட்சமாக ரூ.80 சம்பளம் வாங்கியிருக்கிறார். தூக்கு தூக்கி படத்தில் 4 பாடல்களுக்கு 250 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். அவர் இறப்பதற்கு முன் கார்த்திக் முத்துராமன் படத்தில் பாடியதற்கு ரூ.5000 சம்பளமாக பெற்றுள்ளார்.

* முக்தா சீனிவாசனின் பலப்பரீட்சை என்ற படத்தில் இசை அமைப்பாளராக பணி புரிந்தார். பின்னர் அதிக நேரம் சிரத்தை எடுக்க வேண்டி இருந்ததால் அந்தப்படத்துடன் இசை அமைப்பை நிறுத்தி கொண்டார்.

* ஹிந்தியும் நன்கு பேசக்கூடியவர். தமிழ் மொழிகளில் நிறைய பாடல்கள் பாடி வந்ததால் ஹிந்தி பக்கம் போக முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. இருப்பினும் தன் ஹிந்தி பாட்டு மீது கொண்ட தாகத்தை மேடைகளில் கச்சேரிகளில் பாடி தீர்த்து கொண்டார்

* நடிகர் ஜெய்சங்கருக்கு மட்டும் 750 பாடல்களை பாடி இருக்கிறார்.

* எம்.ஜி.ஆருக்கு இவர் பாடிய கொள்கை பாடல்கள் இன்றும் அரசியல் மேடைகளில் களை கட்டுகிறது. அச்சம் என்பது மடமையடா…, நான் உங்கள் வீட்டு பிள்ளை…, நான் ஆணையிட்டால்… போன்ற பல பாடல்கள் எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கைக்கும் கை கொடுத்தது.

* பல மேடை கச்சேரிகளில் எங்கே நிம்மதி… பாடலை விரும்பி ரசித்து பாடியவர் டிஎம்எஸ்.,

* நடிப்பு மட்டுமின்றி 1965 களில் இசை தந்த வாழ்வு என்ற நாடகத்திலும் நடித்துள்ளார் டிஎம்எஸ். தமிழில் பட்டினத்தார், அருணகிரி நாதர், கல்லும் கனியாகும், கவி ராஜ காளமேகம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கே.ஆர்விஜயாவுடன் திருநீலகண்டர் படம் ஆரம்பித்து பாதியிலே நின்று போனது

* டிஎம்எஸ்க்கு சமையல் செய்வது ரொம்ப பிடிக்குமாம். ரெகார்டிங் எத்தனை மணிக்கு முடித்து வந்தாலும், அவருக்கு பிடித்த உணவை அவரே சமைத்து சாபிடுவாராம். சைவம் அசைவம் எல்லாம் சமைப்பாராம். குறிப்பாக வீட்டில் தக்காளி குழம்பு, தோசை விரும்பி சாபிடுவாராம். நான் ருசியாக சாபிடுவதால் தான் ரசிக்கும் படி பாடுகிறேன் என்று அடிக்கடி செல்வார்.

* இவருக்கு அரசியலில் எல்லாம் ஆசை கிடையாது. சினிமா வட்டாரத்திலும் நட்பு வட்டம் குறைவே. எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று இரு பெரும் சினிமா ஜாம்பவான்களுக்கு தன் குரலால் உயிர் கொடுத்தார் டிஎம்எஸ். இருந்தாலும் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என உள்ளூர வருத்தப்பட்டுள்ளார்.

* பத்மஸ்ரீ விருது 63 வயதில் கிடைத்தாலும் அதை நோட்பேட் போன்ற எதிலும் பயன்படுத்த கூடாது என்ற விதி அவரை காயப்படுத்தியது. பின் எதற்கு இவர்கள் இதை கொடுத்தார்கள் என்று தன் நெருங்கியவர்களிடம் கவலை பட்டு இருந்துள்ளார் டிஎம்எஸ்.,

* ரசிகர்களுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பார். தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் ஏழ்மையாக இருந்தால் கூட அவர்களை உட்கார சொல்லி அந்த சமயம் வெளி வந்த பாடல்களை பாடி காட்டி பிடித்திருக்கிறதா என்று கேட்பார்.

* டிஎம்எஸ்-க்கு மிகவும் பிடித்த உடை ஜிப்பாவும், வேஷ்டியும் தான். பின்னர் பைஜாம், குர்தா என்று தன்னை மாற்றிக்கொண்டார். நெற்றியில் விபூதி வைக்காமல் வெளியில் சென்றதில்லை.

* மகன்களுக்கு எந்த வகையிலும் தன் பெயரை பயன்படுத்தி சிபாரிசு செய்தது கிடையாது டிஎம்எஸ். அவர்களை சுயமாக சொந்தக்காலில் நிற்க சொல்லுவார்.

* மகன்கள் இண்டு பேரும் பாடகராக இருந்தாலும் சினிமாவில் இவர்கள் இரண்டு, மூன்று பாடல்கள் தான் பாடியிருக்கிறார்கள். டிஎம்எஸ்-ன் குரல் அப்படியே இருக்கிறது என்று பலரும் நிராகரித்ததால் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லையாம். அதனால் தற்போது மேடை கச்சேரிகளில் மட்டும் பாடி வருகின்றனர்.

எத்தனையோ காலத்தால் அழியாத பாடல்களை பாடி, ரசிகர்களை தாலாட்டி சென்று, தனது தெய்வீக குரலால் அனைவரையும் வசீகரித்த டிஎம்எஸ்., இன்று நம்மோடு இல்லை. இருந்தாலும் அவரின் குரலும், பாடல்களும் காற்றில் கரைந்து நம்மை வருடுகின்றன என்பதே உண்மை.

டிஎம்எஸ்.,ன் 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று. இந்தநாளில் அவரை நினைவு கொள்வோமாக…!

 

 

Comments

comments