anirudh

‘வேதாளம்’ படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார் என்பது ஏறக்குறைய பழைய செய்தியாகிவிட்டது. தற்போது இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சிவா. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு மீண்டும் அனிருத்தே இசையமைக்கவிருக்கிறார். ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் முக்கிய காரணம்.

அவரின் பின்னணி இசையில் உருவாகியிருந்த சண்டைக்காட்சிகளும், மாஸ் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு, ‘ஆலுமா… டோலுமா…’ பாடலால், கடந்த தீபாவளி அன்று தமிழகத்திலுள்ள அத்தனை திரையரங்குகளும் அதிர்ந்ததை யாரும் மறந்திருக்கவும் முடியாது.

இந்த நிலையில் மீண்டும் இவர்கள் இணைந்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருந்தாலும் இது குறித்து அனிருத் இதுவரை எந்த தகவலையும் உறுதிப்படுத்தாத நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 2வது வாரத்தில் துவங்கும் எனத் தெரிகிறது.

Comments

comments