‘Idhu-Namma-Aalu’

சிம்பு நடிப்பில் பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூரியின் காமெடிக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கமாக சிம்பு படங்களில் சந்தானம் தான் காமெடி செய்வார்.

மன்மதன் தொடங்கி வாலு வரை சிம்பு-சந்தானம் கூட்டணி இணைந்தே காமெடி செய்து வந்தது. தற்போது சந்தானம் ஹீரோவாக மாறிவிட்டதால் சந்தானத்திற்குப் பதிலாக சூரியை இப்படத்தில் நடிக்க வைத்தார் பாண்டிராஜ். அதற்கு நல்ல பலனும் கிடைத்துவிட்டது.

படம் முழுவதும் சிம்புவுடன் பயணிக்கும் சூரி, சிம்பு-நயன்தாரா இருவரும் பேசும்போது கொடுக்கும் கவுண்ட்டர்களுக்கு தியேட்டரில் சிரிப்பலைகள் அடங்க வெகு நேரமாகிறது. சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாத இப்படத்தை இயல்பாக நகர்த்திச் செல்வதற்கு சூரியின் காமெடி பெரிதும் கைகொடுத்துள்ளது.

‘அவனுக்கு பொண்ணுங்கண்ணு எழுதுனாலே புடிக்கும்’, என்று சிம்புவைக் கலாய்ப்பது ‘ரெண்டு பேரும் அவங்களோட எக்ஸ் லவ்வர் பேரா சொல்றாங்க’, என்று சிம்பு-நயன் ரெண்டு பேரையும் சேர்த்துக் கலாய்ப்பது, ‘யூ சர்டிபிகேட் படத்தை ஏ சர்டிபிகேட் படமாக்கிடாத’ என்று கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்.

இந்நிலையில் சிம்புவுக்கு இணையான வரவேற்பு தனக்கும் கிடைத்திருப்பதால் சூரி தற்போது மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறார். இதுகுறித்து சூரி ”சிம்பு என்ற மாஸ் நடிகருக்கு பக்கத்துல என்னையும் நிற்க வைச்சதுக்கு நன்றி. விஜய், அஜித் படங்களில் கொடுக்காத ஒரு வாய்ப்பை இந்தப் படத்தில் சிம்பு எனக்கு கொடுத்திருக்கிறார்” என்று நடிகர் சிம்புவுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Comments

comments