NTLRG_160411141715000000

அஞ்சான், மாசு என தொடர் தோல்விகளை கொடுத்த சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் சயின்ஸ் பிக்ஷ்ன் படம் 24. டைம் மிஷின் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். சூர்யா ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். யாவரும் நலம், மனம் படங்களின் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 24 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. 24 படத்தின் ஆடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது… அப்பாவின் வழிக்காட்டுதலாலும், நல்ல இயக்குநர்களுடன் படம் பண்ணுவதாலும் தான் இந்த இடத்தில் நான் நிற்க முடிந்தது. இந்த டிரைலரை பார்த்துவிட்டு ரசிகர்கள் விடாமல் கைதட்டிய அந்த நிமிடம் என் மனதிற்குள் ஏதோ பண்ணியது, அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. இது என்னை இன்னும் பொறுப்புள்ளவனாக மாற்றியுள்ளது. உங்க கைதட்டல்களுக்கு கண்டிப்பாக இந்த கதை பொறுத்தமாக இருக்கும்.

சரியான படமாக இருந்தால் ஜெயிக்க வையுங்க, தப்பான படம் என்றால் ஜெயிக்க வைக்காதீங்க. அப்போது தான் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேடி ஓட முடியும். இந்த இயக்குநரை(விக்ரம் குமார்) பற்றி சொல்ல வேண்டும் என்றால் சின்ன வயதிலேயே தேசிய விருது வாங்கியவர். இவர் இயக்கிய மனம் படத்திற்கு பிறகு தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இவருக்கு இருக்கிறது.

அமைதி, எளிமை தான் ரஹ்மான் : 24 படத்தின் கதையை நான் நான்கு மணிநேரம் கேட்டேன். முதன்முறையாக கதையை கேட்டு எழுந்து நின்று கை தட்டினேன். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய போது, ரஹ்மான் கிட்ட எப்படி போய் கேட்கிறது என்று தயக்கம் இருந்தது. பின்னர் போனில் செய்தி அனுப்பினேன். வரச்சொன்னார். ரம்ஜான் நோன்பு திறக்கும் நேரம் அது, 6 மணிநேரம் படத்தின் கதையை கேட்டார். அப்போதே எங்களுக்குள் நம்பிக்கை பிறந்தது. படத்திற்கான முதல்பாடலை போட்டு கொடுத்த பின்னர் இன்னும் அந்த படத்தின் மீது நம்பிக்கை அதிகரித்தது. ரோஜா படத்தில் எப்படி அமைதியாக, எளிமையாக இருந்தாரோ, இப்போதும் அப்படியே இருக்கிறார் ரஹ்மான். எல்லோரையும் சரிசமமாக மதிக்கிறார். அவர் இந்தபடத்திற்கு பெரிய பலம் ரஹ்மான் தான்.

3 வேடத்தில் நடிக்கிறேன் : 24 படத்தில் 3 வேடத்தில் நான் நடிக்கிறேன். கதை கொஞ்சம் புதிதாக இருக்கும். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் சமந்தா மற்றொருவர் நித்யா மேனன். சமந்தா ரொம்ப எனர்ஜியான பொண்ணு. நித்யா 20 வருஷமாக ஒரு ஜோடி வாழ்கிற கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் அந்த கேரக்டராகவே நித்யா வாழ்ந்திருக்கிறார்.

மனசு வலிக்கிறது : சமீபத்தில் செய்தித்தாள் பார்த்தேன். கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் 20க்கும் மேற்கொண்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பார்த்தேன். மனது மிகவும் வலிக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்வதே ஒரு படிப்பு தான். வாழ்க்கையில் நாம் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் வேண்டும், அதற்கு நம் மீது நாமலே முதலில் நம்பிக்கை வைக்கணும்.

நான் ஒரு வேஸ்ட் : கல்லூரி வரை நான் மிகவும் வேஸ்ட்டாக இருந்தேன், அசிங்கமானவனாகத்தான் தெரிந்தேன். அப்பாவின் அறிவுரையும், வழிகாட்டுதலும் தான் நான் இன்றைக்கு உங்கள் முன் நிற்க உதவியது. தவறான முடிவு எடுக்காதீங்க. வாழ்க்கையில் ஜெயிக்க பாருங்கள்.

24 படங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், படம் கோடை விடுமுறையில் வர இருக்கிறது.

இவ்வாறு சூர்யா பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியின் போது ரஹ்மான் இசையமைக்க பாடகர்கள் பென்னி தயாள், சின்மயி உள்ளிட்டவர்களுடன் நடிகை நித்யா மேனனும் பாடினார். விழாவில் சிவக்குமார், கார்த்தி, வைரமுத்து, மதன்கார்கி, யுடிவி தனஞ்செய்ன், சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் ஹரி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

comments