bharathiraja-and-bala-740x431

ஒரே கதையை இரண்டுபேர் படமாக எடுப்பது தமிழ்சினிமாவுக்கு புதிய விஷயமில்லை.

கடந்த காலங்களில் இதுபோன்ற கேலிக்கூத்துகள் பல தடவை நடந்தேறி உள்ளன.

அப்போதெல்லாம் வராத சர்ச்சையும்… சண்டையும்… இப்போது வந்திருக்கிறது.

குற்றப்பரம்பரை கதையை எடுக்கப்போவதாக  பல வருடங்களாக பாரதிராஜா சொல்லிக்கொண்டிருக்க, அதே கதையை பாலாவும் எடுக்கப்போவதாக களத்தில் குதித்ததும்…
தகராறு தொடங்கியது.

குற்றப்பரம்பரை என்பது பாரதிராஜாவுக்கு சொந்தமான ‘கதை’ அல்ல, அது ஒரு அல்ல பல சமூகத்தின் வரலாறு.

இது புரியாமல்  பாலாவைப்பற்றி பாரதிராஜா தரக்குறைவாகப் பேச, பெருசுக்கு புத்தி கெட்டுப்போச்சு என்று நினைத்து பாலா அமைதியாக இருக்க, மீண்டும் பாலாவை பாரதிராஜா சீண்ட… கடுப்பான பாலா சில தினங்களுக்கு முன் பாரதிராஜாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரச்சனை இப்போதைக்கு தீராது என்பது ஒரு பக்கம் இருக்க, பாலாவையும் பாரதிராஜாவையும் மோதவிட்ட குற்றப்பரம்பரை கதையைப் பற்றி பார்ப்போம்.

“இது குற்றப்பரம்பரை அல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை. தாய்ப்பால் குடித்து வளர்ந்ததை எப்படி மறக்க முடியாதோ, அதே போல் நான் வளர்ந்த அந்த நாளின் நினைவுகளை மறக்க முடியாது.”

என்று  கைரேகைச் சட்டத்தினால் தானே நேரடியாக பாதிக்கப்பட்டதைப்போல் சீன் போடுகிறார் பாரதிராஜா.

உண்மையில், குற்றப்பரம்பரைக்கு அடித்தளமாக சொல்லப்படுகிற கைரேகைச் சட்டம், பாரதிராஜா என்கிற சின்னசாமி பிறப்பதற்கு 30 வருடங்களுக்கு முன்பே (பாரதிராஜா பிறந்தது ஜூலை 17, 1941) அதாவது 1911ஆம் வருடமே இயற்றப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், வலையர், கேப்மாரி … என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.

குற்றப் பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பில் இருக்கவேண்டும்.

அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும்.

விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.

1921ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன.

உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும். அதிலேயே கைரேகை வைக்கலாம்.

ஆனாலும் பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும்.

தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாகக் காவல்நிலையத்தில் கைரேகை வைக்க வலியுறுத்தப்பட்டனர்.

1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் மரணம் அடைந்தனர்.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இது.

இச்சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக 1947-ம் ஆண்டு இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த வரலாற்று சம்பவத்தைத்தான் கண் காது மூக்கு வைத்து பாரதிராஜா குற்றப்பரம்பரை என்ற பெயரில் படமாக எடுக்கப்போகிறார்.

அவரே ஹீரோவாக நடிப்பதால் குற்றப்பரம்பரை படத்தை மக்கள் பார்க்கும் வாய்ப்பை அவரே காலி பண்ணிவிட்டார்.

பாலா எடுக்க உள்ள படம் இந்த வரலாற்றுக்கு சம்மந்தமே இல்லாத கதை.

குற்றப்பரம்பரை காலகட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு 1957ல் நடப்பதாக பாலாவின் படக்கதை கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக்கதையில் விஷால், ஆர்யா உட்பட ஆறு இளைஞர்கள் நடிக்கின்றனர். இந்த ஆறு பேரும் ஆறு சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பேரும் இந்த குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்படுவதுபோலவும், அதனால் விளையும் பிரச்சனைகளையும் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் பாலா.

பாலா எடுக்க உள்ள படத்துக்கும் தான் எடுக்க உள்ள குற்றப்பரம்பரை படத்துக்கும் துளியும் சம்மந்தமில்லை என்று பாரதிராஜாவுக்கும் தெரியும்.

ஆனாலும் பாலா உடன் பாரதிராஜா மோதுவது ஏன்? பைசா செலவில்லாமல் பப்ளிசிட்டி கிடைக்குதே…

மற்றபடி, “ இது என் மக்களின் சுயமரியாதை. என் இனிய தமிழ்மக்களே என்று கூறும் ஒவ்வொரு முறையும் நம் ஒட்டுமொத்த தமிழனின் உணர்வுகள் என்னைத் தூண்டும், நான் பணம் சம்பாதிக்க இந்த குற்றப்பரம்பரையை எடுக்கவில்லை. ‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை எடுக்க என்னை கடவுள் நியமித்திருக்கிறார். இப்படத்தை ஒரு சிறப்புமிக்க இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன்”

என்று பாரதிராஜா சொல்வதெல்லாம்.. பிதற்றல். வியாபார தந்திரம்.

Comments

comments