NTLRG_160415171854000000

தாணு தயாரிப்பில், அடலீ இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி, மொட்டை ராஜேந்திரன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோரது நடிப்பில் தமிழ் புத்தாண்டு விருந்தாக நேற்று வெளியாகியுள்ள படம் தெறி. இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 60 தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை. இதனால் அந்தபகுதியில் உள்ள ரசிகர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதோடு படம் வெளியாகததால் ரசிகர்கள் சிலர் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இந்த பிரச்னையால் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இருவருக்குமிடையே ஒரு மோதல் உருவாகியுள்ளது.

செங்கல்பட்டு ஏரியாவில் தெறி படம் வெளியாகதது தொடர்பாகநேற்று செய்தியாளர்களை சந்தித்தார் தாணு. அப்போது அவர் பேசும்போது… தெறி படம் வெளியாகததற்கு தயாரிப்பாளர்களோ, விநியோகஸ்தர்களோ காரணமில்லை. அந்த பகுதியில் இருக்கும் ஒரு சிலர் ஒன்றாக சேர்ந்து கொண்டு தெறி படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். மேலும் தெறி படத்தை திரையிடாத செங்கல்பட்டு ஏரியா உள்ளிட்ட 60 தியேட்டர்களுக்கு இனி ஒத்துழைப்பு தரப்போவதில்லை என்று தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்துள்ளது.

தாணுவே காரணம்

இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது… தாணு படம் வரும்போதெல்லாம் தொடர்ந்து பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஏன் இதற்கு முன்னர் நாங்கள் இந்த ஏரியாவில் படங்கள் வெளியிட்டது கிடையாதா.? தெறி படம் திரையிடப்படாததற்கு தாணுவே காரணம். செங்கல்பட்டில் மட்டும் ரூ.20 கோடி அளவுக்கு லாபம் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். தன் சுய லாபத்திற்காக சினிமாவை அழிக்கிறார் தாணு.

தன் படத்தின் மீது தாணுவிற்கு நம்பிக்கையில்லை

சதவீத அடிப்படையில் நாங்கள் படத்தை திரையிட முன்வந்தோம். ஆனால் தாணு ஏற்கவில்லை. எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் தான் படத்தை வெளியிடுவேன் என்கிறார். படத்தை பற்றி ஆஹா, ஓஹோ என்று புகழ்பவர், எதற்காக எம்ஜி., அடிப்படையில் படத்தை வெளியிட வேண்டும். தன் படத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா.? தாணு ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.

பழிவாங்கும் நோக்கத்துடன் தாணு செயல்படுகிறார்

லிங்கா படப்பிரச்னையில் செங்கல்பட்டு ஏரியாவிற்கு இன்னும் நஷ்ட ஈட்டு தொகை முழுமையாக வந்து சேரவில்லை. இந்தச்சூழலில் தாணுவின் அடுத்தப்படமான ரஜினியின் லிங்கா படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே லிங்கா பிரச்னை இருப்பதால் அந்த பிரச்னையை திசை திருப்பவே தாணு இந்தமாதிரியெல்லாம் செய்கிறார். பழிவாங்கும் நோக்கத்துடனேயே தாணு செயல்படுகிறார்.

நேரடி விவாதத்திற்கு தயாரா.?

தெறி படம் பிரச்னை தொடர்பாக தாணு நேரடி விவாதத்திற்கு தயாரா.? பணம் இருப்பதற்காக அவர் அதிகமாக ஆடுகிறார் என்றவர், இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சிவா மற்றும் நாசர் உள்ளே வந்துள்ளனர். அவர்களுக்கும் எங்களது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

20ம் தேதி அவசரக்கூட்டம்

தெறி படம் வெளியாகாத செங்கல்பட்டு ஏரியா உள்ளிட்ட 60 தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என தயாரிப்பு தர முடிவெடுத்திருப்பதாக தாணு கூறியுள்ளார். இதுதொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களின் அவசரக்கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய முடிவு எடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.

Comments

comments