NTLRG_160416120252000000

‘தெறி’ படம் தெலுங்கில் ‘போலீஸ்’ என்ற பெயரில் வெளியானது. முதலில் ‘போலீசோடு’ என்று பெயர் வைத்து, படத்தை தமிழில் வெளியான 14ம் தேதியன்றே வெளியிடுவதாக இருந்தார்கள். கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பையும் மாற்றி வெளியீட்டுத் தேதியையும் ஒரு நாள் தள்ளி வைத்துவிட்டார்கள். தெலுங்குத் திரையுலகத்தின் மிகப் பிரபலமான தயாரிப்பாளரான தில் ராஜு படத்தை வாங்கியதால் படத்தைப் பற்றி தெலுங்கு மீடியாக்கள் அனைத்திலுமே படத்தைப் பற்றிய செய்திகள் ஒரு நேரடித் தெலுங்குப் படத்தைப் போல வெளிவந்தது. ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களிலும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

தன்னுடைய படம் தெலுங்கில் முதல் முறையாக அதிகமாக வெளியாவது பற்றி விஜய்யும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாராம். அதோடு நேற்று தெலுங்கில் வெளியான பின் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு ரசிகர்கள் அதிரடியான பல போலீஸ் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள். அதனால் அவர்களுக்கு இந்தப் படம் மிகப் பெரிய ஆக்ஷனாக அமையவில்லை என்றே டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். எதிர்பார்த்த அளவிற்கு மிகப் பெரிய வசூலைத் தர வாய்ப்பில்லை என்றாலும் இதற்கு முந்தைய விஜய் படங்களை விட வசூல் அதிகமாக இருக்கும் என்றே சொல்கிறார்கள். அந்த விதத்தில் பார்த்தால் தெலுங்கில் விஜய்க்கு ‘போலீஸ்’ வெற்றிப் படம்தான்.

 

Comments

comments