NTLRG_160402173325000000

தமிழ் சினிமாவில் பேய்களின் ராஜ்ஜியம் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. நேற்று, ஒரே நாளில் இரண்டு பேய்ப் படங்கள் வெளியாகும் அளவிற்கு நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. இன்னமும் சில பேய்ப் படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகத் தயாராக உள்ளன. சில பேய்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

நேற்று வெளிவந்த ‘டார்லிங் 2, ஹலோ நான் பேய் பேசுறேன்’ ஆகிய இரண்டு பேய்ப் படங்களில் எந்தப் பேய் வசூல் பேயாக இருக்கிறது ?. ‘டார்லிங் 2′ படம் வழக்கம் போலவே தனிமையான இடத்தில் ஒரு பங்களா, அந்த பங்களாவுக்குள் ஒரு பேய், அங்கு மாட்டிக் கொண்ட நண்பர்கள் என பழக்கப்பட்ட பேய்க் கதையாகத்தான் இருக்கிறது. ஆனால், பயமுறுத்தும் அளவிலான காட்சிகள் எதுவும் இல்லாததாலும், நட்சத்திர அந்தஸ்து என எதுவும் இல்லாததாலும் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு கவரவில்லை என்றே சொல்கிறார்கள்.

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படம் அதன் தயாரிப்பாளர் சுந்தர்.சி, என்ற ஒரு அடையாளத்துடன் வெளிவந்துள்ளது. இந்தப் படத்திலும் பெரிதான நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்கள் யாருமில்லை. இருந்தாலும் பேய்ப் படங்களை நகைச்சுவையுடன் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அது அவர்களை ஏமாற்றவில்லை. நேற்று பல இடங்களில் ‘டார்லிங் 2′ பேயை விட இந்த ‘ஹலோ’ பேய்க்கு வரவேற்பு அதிகமாக இருந்ததாகவே சொல்கிறார்கள்.

நேற்று வெளியான மற்ற இரண்டு படங்களான ‘உயிரே உயிரே, நாரதன்’ ஆகிய படங்கள் வழக்கம் போலவே வெளியாகும் படங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் படங்களாகவே அமைந்துள்ளன. இந்த இரண்டு படங்களும் தயாரிக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வெளிவந்துள்ளன. அதுவே இந்த இரண்டு படங்களுக்கும் பெரிய வெற்றிதான்.

 

Comments

comments