_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

‘அயன், கோ’ என்ற இரண்டு அட்டகாசமான கமர்ஷியல் படங்களைக் கொடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய ‘அனேகன்’ படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வித்தியாசமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான ஹீரோ கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதிதான் ஆனந்த் இயக்கப் போகும் அடுத்த படத்தின் ஹீரோ என செய்திகள் பரவி வருகின்றன.

கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்யா உட்பட சில ஹீரோக்கள் தாமாக முன்வந்து வாய்ப்பு கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், தான் எதிர்பார்க்கும் வகையிலான ஹீரோ கிடைக்கவில்லை என படத்தை கே.வி.ஆனந்த் தாமதப்படுத்தி வந்தார். இடையில் சிவகார்த்திகேயன் கூட அந்த ஹீரோ கிசுகிசுவில் அடிபட்டார். ஆனால், இருவருமே அந்த வதந்தியை மறுத்தனர்.

கடந்த சில நாட்களாக வந்த கே.வி.ஆனந்த் – விஜய் சேதுபதி கூட்டணி பற்றிய செய்தியை இருவருமே இன்னும் மறுக்கவில்லை. விஜய் சேதுபதி தற்போது ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் தயாரிக்க உள்ள படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கலாம். அதனால் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது நடக்குமா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். யாராவது ஒருவர் கால்ஷீட் விட்டுக் கொடுத்தால் இந்த கூட்டணி உருவாக வாய்ப்புண்டு.

Comments

comments