_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான பாலன் என்பவர் கடந்த 2011-ல் தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 3.80 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, டிராக்டர் வாங்கியுள்ளார்.

இந்தக் கடனுக்காக தலா 64 ஆயிரம் ரூபாய் வீதம் 6 தவணைகளைச் செலுத்தியுள்ளார். கடைசி 2 தவணைகள் நிலுவை இருந்ததாகவும், நெல் அறுவடை முடிந்த பின்னர் தவணைத் தொகையைச் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார் பாலன்.

கடந்த 4-ஆம் தேதி பாலன் அறுவடையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, அவரை சரமாரியாக அடித்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

விவசாயி பாலனை டிராக்டரில் இருந்து இறக்கி போலீஸார் தாக்கிய வீடியோ பதிவு சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதைப் பார்த்த நடிகர் விஷால், விவசாயி பாலனின் கடனை அடைக்க தயாராக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

“பாலன் உங்களை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் உங்களுக்கு உறுதுணைபுரிய விரும்புகிறேன். எனக்கு உங்களுடைய கடன் தவணைத் தொகை எவ்வளவு என்று தெரியாது. ஆனால், என்னுடைய உறுதுணையை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

விவசாயி பாலனுக்கு உதவியது குறித்து விஷாலிடம் கேட்ட போது “சம்பந்தப்பட்ட நபர்களை அனுப்பி உடனடியாக அவருடைய தவணைத் தொகையை முழுவதும் அடைக்கச் சொல்லியிருக்கிறேன். அந்த வீடியோவைப் பார்த்தவுடனே எனக்கு அவருடைய கடனை அடைக்க வேண்டும் என்று தோன்றியது.

கண்டிப்பாக அவருக்கு ஏதோ ஒரு சூழலால் தான் அப்பணத்தை அடைக்க முடியாமல் போயிருக்கும். தமிழ்நாட்டின் வேர் விவசாயிகள்தான். நமக்கு அம்மா, அப்பா சோறு போடுகிறார்கள், அந்த சோறு விவசாயிடம் இருந்துதான் வருகிறது.

விவசாயிகளை கண்டிப்பாக காப்பாற்றுவேன். எனக்கு பாலன் என்றால் யாரென்றே தெரியாது, அவரிடம் பேசிவிட்டேன். அந்த வீடியோவைப் பார்த்தவுடன் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அனைவருமே கடன் வாங்குகிறோம். விவசாயிக்கு இந்த மாதிரியான சூழல் வரவே கூடாது. இன்று இரவுக்குள் அவருடைய கடன் அடைக்கப்பட்டு நிம்மதியாக இருப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்.

விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செய்த உதவிகளுக்குப் பின்னால் ‘முதல் அமைச்சர் நாற்காலி கனவு’ இருந்ததாலோ என்னவோ நடிகர்கள் செய்யும் உதவிக்குப் பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது என் சந்தேகப்பட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது.

ஆயிரம் ரூபாய்க்கு நோட்புக் வழங்கிவிட்டு, அதற்கு ஐந்தாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் நடிகர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

விஷால் செய்து வரும் இப்படிப்பட்ட உதவிகளுக்குப் பின்னால் முதல் அமைச்சர் நாற்காலி என்கிற நோக்கம் இல்லாமல் இருக்கட்டும்…

Comments

comments